Monday, July 4, 2016

ஸ்வாதி கொலை: சந்தேக நபர் ராம்குமாருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்


ஸ்வாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரை தமிழக காவல்துறையினர் இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்குமாரை, அந்த வளாகத்திலேயே சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பாக ஆஜர்படுத்தினர்.

அதன்பின்னர் ராம்குமாருக்கு வரும் 18 ஆம் தேதி வரை, அதாவது 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

அதுவரையிலும் ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே, காவல்துறையினரின் காவலுடன் ராம்குமாருக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1 ஆம் தேதி இரவு திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள டி.மீனாட்சிபுரம் பகுதியில் இருந்த ராம்குமாரை தமிழகக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது நடவடிக்கையின் போது, ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் தானாகவே தனது கழுத்தை அறுத்துக்கொள்ள முயற்சித்ததாக தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமுற்றிருந்த ராம்குமாருக்கு உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்த காவல்துறை, தொடர்ந்து விரிவான சிகிச்சையை அளிக்க பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அறுவை சிகிச்சை பெற்ற ராம்குமாரின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் கூறிய பிறகு, காவல்துறையினரின் கேள்விகளுக்கு ராம்குமார் பதிலளித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போது சிகிச்சை பெற்று வந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலேயே திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நீதிமன்ற நீதிபதி எம்.ராமதாஸ் முன்பாகவும் ராம்குமார் ஆஜர்படுத்தப்பட்டார்.

அந்த சமயத்தில் நீதிபதி ராமதாஸ் அளித்த உத்தரவை அடுத்தே இன்று சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பாகவும் ராம்குமார் ஆஜர்படுத்தபட்டிருந்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024