மனநல காரணம் கூறி மனைவிக்கு ஜீவனாம்சம் மறுக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
கி.மகாராஜன்
மனநலம் சரியில்லை என்று கூறி மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க மறுக்கக்கூடாது எனஉயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜீவனாம்சம் கேட்டு ரேவதி, நாங்குநேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் முடிவில் மனைவி மற்றும் மகனுக்கு தலா ரூ.2 ஆயிரம் ஜீவனாம்சமாக வரதராஜன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து வரதராஜன் நெல்லை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், தனது மனைவிக்கு மனநலம் சரியில்லாத காரணத்தால் ஜீவனாம்சம் வழங்க இயலாது என்று குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மனைவிக்கு மனநலம் சரியில்லை என்று கூறி அவருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ரேவதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு:
மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றோ, மனநலம் சரியில்லை என்றோ சாதாரண ஒரு காரணத்தை கூறி ஜீவனாம்சம் வழங்க கணவன் மறுக்கக்கூடாது.
இந்த ஒரே காரணத்துக்காக மனைவியை, கணவர் கைவிட முடியாது. மனைவி நல்ல மனநலத்துடன் இருந்தாலும் சரி, மனநலம் சரியில்லாமல் இருந்தாலும் சரி, திருமணம் முடிந்ததுமே கணவன் தனது மனைவியை பராமரிக்க வேண்டும் என்ற நடைமுறை நீண்டகாலமாகவே உள்ளது.
மனைவி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியது கணவனின் கடமை. எனவே, மனுதாரருக்கு அவரது கணவர் நியாயமான தொகையை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். மனநலம் சரியில்லை என்பதால் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை என்ற திருநெல்வேலி நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரர், அவரது குழந்தை ஆகியோருக்கு தலா ரூ.2 ஆயிரம் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று நாங்குநேரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, இருவருக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும என மறக்கடிக்கப்படுகிறது. இந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளான 3.1.2014 முதல் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment