ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் பழக்கம்; கடந்த ஆண்டே சென்னைக்கு வந்ததாக தகவல்
சுவாதியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து தனிப்படை போலீஸாரிடம் ராம்குமார் பல்வேறு விவரங்களை தெரிவித்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போது ஃபேஸ் புக் மூலம் சுவாதியுடன் நட்பு ஏற்பட் டுள்ளது. ஒருதலைக் காதலால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு வந்ததாக வாக்கு மூலத்தில் அவர் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத் தில், ராம்குமார் என்பவரை திருநெல்வேலி மாவட்டம் செங் கோட்டை அருகே உள்ள மீனாட்சி புரம் கிராமத்தில் போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ராம்குமாரை போலீஸார் மீட்டு, பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
உடல்நிலையில் முன்னேற்றம்
மருத்துவமனை கண்காணிப் பாளர் இளங்கோவன் செல்லப்பா தலைமையிலான மருத்துவர் குழு வினர் ராம்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் உடனடியாக அவரிடம் இருந்து வாக்குமூலம் எதுவும் போலீஸாரால் பெற முடியவில்லை.
இதற்கிடையே ராம்குமாரிடம் விசாரணை நடத்த சென்னையில் இருந்து தனிப்படையினர், நுங்கம் பாக்கம் காவல் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் நேற்று முன்தினம் திருநெல்வேலிக்கு வந்தனர். அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் விக்ரமன் மற்றும் ராம்குமாரை பிடித்த தனிப்படையினரிடம் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவில் ராம்குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற் பட்டு மெதுவாக பேசும் நிலைக்கு வந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து கிராம நிர் வாக அலுவலர்களான ஜெயராமன் (பாளையஞ்செட்டிகுளம்), மயி லேறும்பெருமாள் (வி.எம்.சத்திரம்) ஆகியோர் முன்னிலையில் தனிப் படை போலீஸார் ராம்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர்.
ஃபேஸ்புக் மூலம் அறிமுகம்
ராம்குமார் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:
நான் ஆலங்குளம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தேன். படிக்கும்போதே ஃபேஸ்புக் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அவ்வாறுதான் சுவாதி எனக்கு அறிமுகம் ஆனார். பின்னர் வாட்ஸ்அப் மூலம் அவருடன் தொடர்புகொண்டேன். அடிக்கடி அவருக்கு வாட்ஸ்அப் மூலம் செய்திகள் அனுப்புவேன். அவரும் பதில் அனுப்புவார். இதைத் தொடர்ந்து அவரை பார்க்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு சென்றேன். ஆனால், வேலைக்குச் செல்வதாக எனது வீட்டில் கூறியிருந்தேன்.
சென்னை சூளைமேடு பகுதியில் சுவாதியின் வீடு அருகே மேன்ஷனில் தங்கினேன். சில மாதமாக சுவாதியை பின்தொடர்ந்தேன். அங்கு உள்ள பெருமாள் கோயிலுக்கு சாமி கும்பிட சுவாதி வருவார். நானும் அங்கு செல்வேன். சுவாதி வேலைக்கு செல்வதை நோட்டமிட்டு அவரை பின்தொடர்ந்து சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.
திட்டியதால் ஆத்திரம்
ஃபேஸ்புக் நண்பர் என்பதால் சுவாதியும் என்னிடம் நட்பாக பழகினார். கடந்த நவம்பர் மாதம் நான் அவரை காதலிப்பதாக தெரிவித்தேன். அப்போது அவர் கோபமடைந்து திட்டினார். தொடர்ந்து நான் அவரை காதலிக்குமாறு தொடர்ந்து கூறியதால், தனியாக செல்லாமல் தன் தந்தையை துணைக்கு அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கு சென்று வந்தார்.
நான் பலமுறை ரயில் நிலையத்தில் காத்திருந்து அவரிடம் பேசினேன். அப்போது ஒருமுறை, நான் தேவாங்குபோல் இருப்பதாகக் கூறி, என்னிடம் இனி பேசாதே என்று கூறிவிட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
காதலிக்கும்படி கெஞ்சினேன்
ஊருக்கு வந்து தோட்டத்தில் வாழைக் குலைகளை வெட்ட வைத்திருந்த அரிவாளை ஒரு விவசாயியிடம் இருந்து திருடிக்கொண்டு சென்னைக்கு சென்றேன். மீண்டும் கடந்த 24-ம் தேதி ரயில் நிலையத்தில் சுவாதியிடம் காதலிக்கும்படி கெஞ்சினேன். அப்போதும் அவர் மறுத்தார். எனவே அவரை அரிவாளால் வெட்டினேன்.
எதுவும் தெரியாதது போல சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். எனக்கு உடல்நிலை சரியில்லாத தால் ஊருக்கு திரும்பி வந்து விட்டதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறினேன்.
இவ்வாறு போலீஸாரிடம் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
வீட்டில் சோதனை
ராம்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உதவி ஆணையர் தேவராஜ் தலை மையிலான தனிப்படை போலீஸார் மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ராம்குமாரின் லுங்கி, செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
No comments:
Post a Comment