Friday, July 15, 2016

8 பேர் உயிரை காப்பாற்றிய டாபர்மேன்... 4 நாகங்களுடன் சண்டையிட்டு உயிரிழந்தது!



ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தில்  சேப்கபூர் கிராமத்தை சேர்ந்தவர் திபாகர் ரய்தா, இவர் தனது  வீட்டில் டாபர் மேன் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். அவரது வீட்டை பொறுப்புடன் பாதுகாத்து வந்துள்ளது அந்த டாபர்மேன். 

கடந்த திங்கட்கிழமை அருகிலிருந்த காட்டுப்பகுதியில் இருந்து 4 நாகப்பாம்புகள் திபாகர் ரய்தாவின் வீட்டிற்குள் புகுந்துள்ளன. இதனைக்  கண்ட அவரின் வளர்ப்பு நாய், அந்த 4 பாம்புகளுடன் கடுமையாக  சண்டையிட்டிருக்கிறது. 

முடிவில் 4 நாகப் பாம்புகளையும் அந்த நாய் கடித்துக் கொன்றது. அதே நேரத்தில், நான்கு நாகங்களும் நாயைக் கொத்தியதில் அதன் உடலில் பாம்புகளின் கொடிய விஷம் பரவியது. இதனால் மயங்கிய நிலையில் கீழே விழுந்த டாபர்மேன் உயிரழந்தது. வீட்டருகே தனது செல்லநாயும் பாம்புகளும் இறந்து கிடப்பதைக்  கண்டு திபாகர் ராய்தா அதிர்ச்சியடைந்தார். பின்னர் நிலைமையை ஊகித்து கொண்ட திபாகரும், அவரின் குடும்பத்தினரும் கண்ணீர் சிந்தினர். 

திபாகர் வீட்டில் மொத்தம் 8 பேர் இருந்துள்ளனர். வீட்டிற்குள் பாம்புகள் புகுந்திருந்தால் கண்டிப்பாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். இதனை தெரிந்து கொண்ட அந்த ஐந்தறிவு ஜீவன், 4 பாம்புகளையும் தீரத்துடன் எதிர்த்து போராடி தனது உயிரையும் மாய்த்து கொண்டுள்ளது. நாயின் நன்றியையும், விசுவாசத்தையும் அறிந்த அந்த பகுதி மக்கள் ஏராளமானோர், திரண்டு வந்து மலர்கள் தூவி, தக்க மரியாதையுடன் அந்த டாபர்மேனை அடக்கம் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024