'அனைத்து சாலைகளும் ரோமில் போய் முடிவடைகின்றன' என்று சொல்வதுபோல், இங்கு அனைத்து உரையாடல்களும் ‘கபாலி’ திரைப்படத்தில் போய்தான் முடிவடைகின்றன. அண்மையில், ஒரு துக்க வீட்டிற்கு சென்று இருந்தபோது கூட இதை உணர முடிந்தது. “நல்ல மனுஷன்... சமூகத்துக்கு எவ்வளவோ செஞ்சு இருக்காரு..” என்று துவங்கிய அந்த உரையாடல், அடுத்துப் பேசியது கபாலி திரைப்படம் பற்றி. “என்னப்பா... கபாலி டிக்கெட் விலை ஆயிரம் ரூபாயாம்ல...” என்று வருந்தினார் அந்த உரையாடலுக்கு உரியவர்.
மிகையாகச் சொல்லவில்லை, உண்மைதான். எப்போதும் நாயகர்களைக் கொண்டாடும் தமிழ் சமூகத்தில், ரஜினி கொண்டாடப்படுவதும், அந்த படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதும் வியப்பில்லை. ஆனால், இந்த கட்டுரை அதன் டிக்கெட் விலை குறித்தானது அல்ல...!
இணையத்தில் கபாலி!
கபாலி டிக்கெட் குறித்த சர்ச்சைகளை விட, அதிகம் ஈர்த்தது கபாலி திரைப்படம் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாவதை தடுப்பதற்காக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுதான். இது குறித்த விவாதங்களை நாம் உரிய முறையில் செலுத்தினால், நிச்சயம் ஆரோக்கியமான சட்டத்திருத்தங்களை நம்மால் கொண்டு வரமுடியும். அதன் மூலம் சில உயிர் இழப்புகளையும் தவிர்க்க முடியும்.
சில தினங்களுக்கு முன், கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுகிறார். '"கபாலி திரைப்படம் 3500 பேர் உழைப்பில், 100 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம். ஆனால், அதை வெறும் 20 ரூபாய் செலவில் முறைகேடாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அதனால் இதுபோன்ற திருட்டுகளுக்கு காரணமாக இருக்கும் இணையச் சேவை நிறுவனங்களை முடக்க, இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும்" என்கிறார். மேலும் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் 225 இணையதளங்களின் முகவரியையும் தருகிறார். இதனை விசாரித்த நீதிமன்றம், 180 இணையதளங்களுக்கு இடைக்கால தடை விதிக்கிறது.
சரியான நடவடிக்கைதான். இதில் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், இது அனைத்தும் நடந்தது இரண்டு நாட்களில். ஒரு திரைப்படத்தையும், அதன் வணிகத்தையும், அதன் தயாரிப்பாளரையும், 3,500 தொழிலாளர்களின் உழைப்பையும் காக்க நீதிமன்றம் இவ்வளவு துரிதமாக செயல்பட்டு இருக்கிறது.
உண்மையில் இது பாராட்டப்பட வேண்டியதுதான் என்றாலும், இயல்பாக ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அதாவது, நூற்றுக்கணக்கான இணையதளங்களை இரண்டு நாட்களில் முடக்க முடியும் என்னும் போது... ஏன் வினுப்பிரியா படம் தவறாக சித்தரிக்கப்பட்ட ஒரு இணையதள பக்கத்தை முடக்க நான்கு நாட்கள் ஆனது..?
வினுப்பிரியாவின் மரணம்!
வினுப்பிரியாவின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகிறது. இதுகுறித்து கடந்த ஜூன் 23 ம் தேதி புகார் அளிக்கப்படுகிறது. காவல் துறை மிக நிதானமாக செயல்பட்டு... இல்லை இல்லை... கிட்டத்தட்ட செயல்படவே இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து முறையிட்டதால், நடவடிக்கை எடுக்க, காவல் துறையின் சைபர் பிரிவு ஒரு கைபேசியை லஞ்சமாக கேட்கிறது. ரூபாய் 2000க்கு ஒரு கைபேசியை வினுப்ரியாவின் தந்தை வாங்கித் தந்த பிறகு,
விசாரணை நத்தை வேகத்தில் ஊர்கிறது. அப்போது, மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகிறது. வினுப்பிரியா மன அழுத்தம் தாங்காமல் ஜூன் 27 ம் தேதி தற்கொலை செய்து கொள்கிறாள்.
இது குறித்து அண்மையில் ஒரு ஆங்கில ஊடகத்தில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ள காவல் துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங், 'காவல் துறை மீதெல்லாம் தவறல்ல. முகநூல் நிறுவனத்திலிருந்து தகவல்களைப் பெற எங்களுக்கு நான்கு நாட்கள் ஆனது’ என்று பொருள் தரும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதே நேரம், காவலர் லஞ்சம் பெற்றதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
அந்தக் கட்டுரையில் காவல் கண்காணிப்பாளர் இவ்வாறாக எழுதி உள்ளார், “ஜூன் 23 ம் தேதி நாங்கள் புகாரைப் பெறுகிறோம். அடுத்த நாள், நாங்கள் அந்த முகநூல் பக்கத்தை முடக்குவதற்கும், அந்தப் படம் எந்த கணினியிலிருந்து பதிவேற்றப்பட்டது என்பதை அறிவதற்கும், இணைய நெறிமுறை முகவரியை (IP address) கேட்கிறோம். ஜூன் 27 ம் தேதிதான் அந்த பக்கம் முடக்கப்படுகிறது. இணைய நெறிமுறை முகவரியும் கிடைக்கிறது. அதன் பின் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளியை கைது செய்கிறோம்” என்கிறார்.
அதாவது, 'காவல் துறை மீது தவறு இருக்கிறது. ஆனால், அது பெரிய தவறு அல்ல. பெரும் தவறு முகநூல் நிர்வாகத்தின் மீதுதான்.' என்பதுதான் அவரது கருத்து.
இதை சரியென்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், இதில் தலையிட்டு, சமூக ஊடகங்களை முறைப்படுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு...? அரசுடைய, அரசைச் செலுத்தும் அதிகாரவர்க்கத்துடைய பொறுப்புதானே அது...?
ஒரு பிரபலத்திற்கு ஏதாவது பிரச்னை என்றால், அதிவேகமாக இயங்கும் அதிகாரவர்க்கம், சாமான்யனுக்கென்றால் மட்டும் தன் பொறுப்பை தட்டிக் கழிப்பது என்ன நியாயம்...? நாளை இதுபோல் இன்னொரு மரணம் நிகழ்ந்தால், அப்போதும் முகநூல் மேல் மட்டுமேதான் தவறு என்று சொல்லிக் கொண்டிருப்பார்களா...? அப்படி என்றால் எதற்கு அரசாங்கம்....?
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
'ஏன் கபாலிக்கு இவ்வளவு விரைவாக செயல்பட்டீர்கள்...' என்பது எம் கேள்வி அல்ல. நிச்சயம் அது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், அதே நேரம் அனைவரையும் சமமாக மதித்துச் செயல்படுங்கள் என்பதுதான் சாமன்யனின் வாதம்.
அந்த சாமான்யனின் குரலைப் புறக்கணித்து, கடந்து செல்வது... நிச்சயம் ஆரோக்கியமான போக்கல்ல!
- மு. நியாஸ் அகமது
No comments:
Post a Comment