Friday, July 15, 2016

ஜெகத்ரட்சகனின் வீடு, மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: வரி ஏய்ப்பு புகாரில் நடவடிக்கை; முக்கிய ஆவணங்கள் சிக்கின


திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவரது வீடு, மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தொழிலதிபரும், கல்வி யாளருமான இவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து வருமானவரித் துறை அதிகாரிகள் ஜெகத்ரட்சகனின் அடையாறு வீடு, மகாலிங்கபுரம் வீடு, குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீடு மற்றும் அலுவல கங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அடையாறில் உள்ள வீட்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெகத்ரட்சகன் வீட்டில் இருந்தார்.

கிழக்கு தாம்பரம் சேலையூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி கள், குரோம்பேட்டையில் உள்ள கல்லூரிகள், வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் உள்ள கல்லூரிகள் ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது. தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல், நிர்வாக அலுவலகங்கள், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரி ஊசுட்டேரியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லும் ஊழியர்களையும் அவர்களது வாகனங்களையும் தீவிர சோத னைக்குப் பிறகே வெளியே அனுப்பினர். புதுச்சேரியில் உள்ள ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான நட்சத்திர விடுதி, வழுதாவூரில் உள்ள அவரது வீடு, தொழில் நிறுவனங்களிலும் வருமானவரித் துறை சோதனை நடந்தது.

உதகை - கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சிகரம் அருகே உள்ள அவரது ஹோட்டலிலும் சோதனை நடந்தது.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி என 40 இடங்களில் 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். தனித்தனி குழுவாக பிரிந்து சென்ற அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் காலை 6 மணி அளவில் சோதனையை தொடங்கினர். இரவு வரை நீடித்தது. சோதனையின்போது ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆவணங் களை வைத்து சம்பந்தப் பட்டவர்களிடம் அதிகாரிகள் விசா ரணை நடத்தினர். இந்த சோதனை குறித்து எந்த தகவல்களையும் கூற முடியாது என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

15 கோடி பறிமுதல்

சோதனையில் சுமார் ரூ. 200 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது. முதல்கட்டமாக கணக்கில் வராத ரூ. 15 கோடியை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024