கழிப்பறைக்கு ரூ.333 கோடி; தண்ணீர் யார் தருவார்?' -அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவிகள்!
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகில் உள்ள சேங்காலிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், நானூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, பள்ளி கழிப்பறையில் தண்ணீர் வராததால் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
நம்மிடம் பேசிய மாணவி ஒருவர், " எத்தனையோ முறை ஹெச்.எம்மை பார்த்து சொல்லிட்டோம். அவங்க எதைப் பத்தியும் கவலைப்படலை. தண்ணி இறைக்கும் மோட்டார் ரிப்பேர் ஆகிவிட்டது. அதை சரி செய்யாமல் விட்டுட்டாங்க. ' ஸ்கூல்ல நிதி இல்லை, சரி பண்ண முடியாது' ன்னு சொல்றாங்க. வகுப்பு நேரத்தில் அவசரத்திற்குக் கூட பாத்ரூம் போக முடியலை. இடைவேளையில் மறைவான இடம் பார்த்து ஒதுங்க வேண்டிய அளவுக்கு அவஸ்தைப்படறோம். டீச்சர்களுக்கும் இதே நிலைமைதான். நாங்க எல்லாம் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து படிக்கிறோம். கல்வி அதிகாரிகள்கிட்ட புகார் கொடுத்தும் கவனிக்க மாட்டேங்கறாங்க. கொஞ்சம் சொல்லுங்க சார்..." என்கின்றனர் வேதனையோடு.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியயை விஜய கவுரியிடம் பேசினோம். " இங்கு நிலத்தடி நீர் மட்டம் ரொம்பவே குறைந்து போய்விட்டது. மாணவர்கள் குடிப்பதற்காக ஊராட்சிமன்ற தண்ணீர் வருகிறது. கழிப்பறைக்குப் போதுமான தண்ணீர் இல்லை. கழிப்பறையைப் பயன்படுத்த முடியவில்லை என்பது உண்மைதான். மோட்டாரும் ரிப்பேர் ஆகிவிட்டது. அதைச் சரி செய்வதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் சரி செய்யப்படும்” என்றார்.
' சுத்தமான கழிப்பிடங்களே நாட்டின் தேவை' என்ற குரல்கள் வலுத்து வரும் வேளையில், கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் பொது வெளியில் ஒதுங்குவதைப் பற்றி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் கவலைப்படுமா?
-ஆ.விஜயானந்த்
No comments:
Post a Comment