Friday, July 15, 2016

கழகத்தை மையம் கொண்ட காமராஜர் புயல்... மாற்று முகாமிலிருந்தும் மாலையிடப்பட்ட கர்மவீரர்!

vikatan.com

தமிழக வரலாற்றில், காமராஜர் தலைமையில் காங்கிரஸ் ஆண்ட 10 ஆண்டுகள் ஒரு பொற்காலம்...தமிழக வரலாறு, புவியியல் ரீதியாக வலுப்பெற்ற காலகட்டம் அவர் ஆட்சியில்தான்.

அவர் சென்னை மாகாண முதல்வராக பொறுப்பேற்ற சில வருடங்களில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. செய்தித்தாள்களை நாள்தவறாமல் படிக்கும் பழக்கமுள்ள முதல்வர் காமராஜின் பார்வையில், அன்றைய தினமணி நாளிதழில் இடம்பெற்ற ஒரு செய்தி தென்பட்டது. அன்றைய கல்வித்துறை ஆலோசகர் நெ.து சுந்தரவடிவேலு, தென்மாவட்டத்தின் ஒரு பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றபோது, ஒரு மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளான். அவனுக்கு முதலுதவி அளித்து தெளிவித்தபின், மயக்கத்திற்கான காரணம் கேட்டபோது அதிர்ச்சியானாராம் நெ.து சு. ஆம், அவன் அன்று காலை உணவு எடுக்காமல் வகுப்புக்கு வந்திருந்தான். 'இம்மாதிரி ஏழை மாணவர்களுக்கு பள்ளியிலேயே உணவு வழங்கினால் நன்றாக இருக்கும்' என ஆய்வின் முடிவில் அவர் பேசியதாக அந்த சிறிய செய்தி சொன்னது.

செய்தியை காமராஜ் படித்து முடித்த சில நொடிகளில், நெ.து சுந்தரவடிவேலுக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து போன் பறந்தது. அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. அடுத்த சில நாட்களில் சத்துணவுத் திட்டம் என்ற மகத்தான திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. சிறிய செய்தி ஒன்றுக்கு காமராஜ் அளித்த முக்கியத்துவத்தால், சத்துணவுத் திட்டம் என்ற ஏழைக் குழந்தைகளின் பசி போக்கும் திட்டம் பிறந்தது. அந்த மனிதநேயர் காமராஜரின் பிறந்தநாள் இன்று.



ஆரம்பத்தில் அந்த திட்டத்தில் பெற்றோர் பங்களிப்பாக மிகக் குறைந்த தொகை வசூலிக்கப்பட்டது. அதிகாரிகள் சிலர், 'அரசு இவ்வளவு தொகை செலவு செய்கிறபோது எதற்காக மிக அற்பத்தொகையை பெற்றோரிடம் பெறவேண்டும். அரசுக்கு ஒன்றும் இது இழப்பில்லையே...' என்றனர். “நான் திட்டத்தின் செலவை குறைக்க இப்படி செய்யவில்லை. எந்த ஒன்றும் இலவசமாக அளிக்கப்பட்டால் அதன்மீது ஒரு பொறுப்பு வராது. இப்போது சிறிய தொகையானாலும் தங்களது பணமும் இதில் இருக்கிறது என அவர்களுக்கு தோன்றுமானால், இலவச உணவை வீணாக்கமாட்டார்கள்.” என்றார் காமராஜர். 3 வது படித்த காமராஜரின் நுண்ணிய அறிவை எண்ணி வியந்து போயினர் அதிகாரிகள். அதுதான் காமராஜர். அவரை மாற்றுக்கட்சியினரும் நேசிக்க அதுவே காரணமானது.

காங்கிரஸின் பரம வைரியான திராவிட இயக்கங்கள், அரசியல் மேடைகளில் அவரை வரிந்துகட்டி தாக்கினாலும், தனிப்பட்ட முறையில் அவர் மீது நன்மதிப்பு கொண்டிருந்தனர். பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என இந்த வரிசைத் தலைவர்கள் காமராஜரை நேசித்தவிதம் அரசியல் கண்ணியத்திற்கு என்றும் அழியாத சாட்சிகள்.

காங்கிரசும், அண்ணா தலைமையிலான திமுகவும் அரசியல் களத்தில் அனல் கிளப்பிவந்த 60 களில், எம்.ஜி.ஆரை மையமாகக் கொண்டு திமுகவில் ஒரு புயல் கிளம்பியது. அண்ணாவின் தலைமையிலான திமுகவில் முக்கிய தலைவர்கள் வரிசையில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர், எதிர் கூடாரத்திலிருந்த காமராஜர் மீது கொண்ட காதலுக்கு அந்த சம்பவம் சாட்சியானது.

கருத்தியல் ரீதியாக எம்.ஜி.ஆரை திமுகவிடமிருந்து தனிமைப்படுத்திய அந்த சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வும்கூட. திமுகவில் ஒரு பெரிய புயலை கிளப்பிய அந்த சம்பவம் நிகழ்ந்தது 1965 ம் ஆண்டு காமராஜரின் 62 வது பிறந்தநாள் விழாவின்போது.



சென்னை, எழும்பூர் பெரியார் திடலில் நடந்த அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், மேடையில் சற்று உணர்ச்சிவயப்பட, பின்னாளில் அது பெரும் சலசலப்பை திமுகவில் உருவாக்கியது.

எம்.ஜி.ஆரின் சர்ச்சைக்குரிய உரை இதுதான்...

“காமராஜரின் பிறந்த தின விழாவில் நானும் கலந்து கொண்டு, அவரை வாழ்த்தி, அவர் நீடூழி வாழவேண்டும் என்று வாழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்குப் பெருமைப்படுகிறேன். தலைவர் காமராஜர், தோழர் காமராஜர், அய்யா காமராஜர் என்று பலர் அழைக்கும் நிலையை காமராஜர் அடைந்திருக்கிறார். எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர்; பாராட்டப்பட வேண்டும். நல்ல உள்ளம் கொண்டவர்களை எல்லோரும் பாராட்டித்தான் தீரவேண்டும். மனிதனை மனிதன் பாராட்ட வேண்டும். நல்லவனை நல்லவன் பாராட்ட வேண்டும்.

கொள்கைக்காக வாழ்கிறவனை, கொள்கைக்காக வாழ்கிறவர்கள் பாராட்டியாக வேண்டும். யார் யாரை மதிக்கிறார்களோ அவர்களைப் பாராட்ட வேண்டும். யாரால் மதிக்கப்படுகிறார்களோ அவர்களைப் பாராட்டியாக வேண்டும். இந்த நிலை மாறும்போது அருவருப்பான சூழ்நிலை ஏற்படுகிறது.
நண்பர் சிவாஜி கணேசன் ஒரு கட்சியில் (தி.மு.க.) இருந்து விட்டுப்போனவர். அவருடைய ‘கட்டபொம்மன்’ நாடகத்திற்கு எங்கள் தலைவர் அண்ணா போய் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார். சிவாஜி நம்மை விட்டுப்போய்விட்டாரே என்ற எண்ணத்திற்கே அங்கு இடமில்லை. அதுதான் நல்ல பண்பு.



காமராஜர் என்னை விட்டுப்போகவில்லை. நான் அவரைவிட்டு வந்தவன் (எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர்). நான் காமராஜரைப் பாராட்டிப் பேச வந்ததற்கு வேறு உள் காரணங்கள் தேடினாலும் கிடைக்காது. காமராஜர் வாழ்ந்தால் யாருக்கு லாபம்? வாழாமல் இருந்தால் யாருக்கு லாபம்? காமராஜர் ஒரு ஏழையாக வளர்ந்திருக்கிறார். யாரும் மேடையில் ஏறி அவர் சொத்து சேர்த்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. தன்னை ஈன்றெடுத்த தாய் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அவரை 10 நிமிடங்கள், 5 நிமிடங்களுக்கு மேல் இருந்து பார்ப்பதில்லை.

தன் தாயை ஈன்ற இந்த நாட்டின் கடமைகளை விடாமல் செய்து வருகிறார். காமராஜரைப் புகழ்வதில் யாருக்கு நஷ்டம்? நான் ஒரு கலைஞன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். அண்ணா வழியில் நடப்பவன். அவர் கொள்கை எனது உயிர். அப்படிப்பட்ட நான் காமராஜரையும், அய்யாவையும் (பெரியார்) பாராட்டாமல் வேறு யாரைப் பாராட்ட முடியும்?

இதே மேடையில்தான் பெரியாரைப் பாராட்டிப் பேசினேன். நமது தலைவர் காமராஜரைப் பாராட்டிப் பேசுகிறேன். நமது தலைவர் என்று நான் சொல்வது மக்கள் ஏற்ற தலைவர் அவர். அதனால் நமது தலைவர் என்று சொல்கிறேன். காமராஜர் இரவு-பகல் பாராமல் பாடுபடுகிறார். அவரை ஏன் பாராட்டக் கூடாது? என் கொள்கையை நான் கடைப்பிடிப்பதிலும் ஏன் இந்த இலக்கணத்தை பின்பற்றக்கூடாது? எங்கெங்கு நல்லது இருந்தாலும் அதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஏழைகளுக்கும், பின்தங்கிய மக்களுக்கும் உயர்ந்த நிலையை உருவாக்கித் தந்தவர் காமராஜர். ஏழைகளை வாழவைக்க வேண்டும் என்று காமராஜர் சொல்கிறார். நானும் அதைத்தான் சொல்கிறேன். என் கட்சியும் அதைத்தான் சொல்கிறது. அதனால் அவருக்கு மாலையிடுகிறேன்.



பண்புள்ளவன், பகுத்தறிவுள்ளவன் அண்ணா வழியில் நடப்பவன் மாலை இடுகிறான். காமராஜர் நேரில் இருந்திருந்தால் மாலைகளைக் குவித்திருப்பேன். ஏழைகளின் நல்வாழ்வுக்காக காமராஜர் தன்னையே தியாகம் செய்து கொண்டவர், அவருடைய லட்சியத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. அவர் மேற்கொண்டுள்ள லட்சியம்தான் நம்முடைய வழி. நான் ‘நாடோடி மன்னன்’ படத்தில் சொன்ன கருத்துக்கள், போட்ட சட்டங்கள் அனைத்தையும் காமராஜர் அமல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் இலவச கல்வி என்றேன். அது நடந்து வருகிறது. உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் எல்லா வசதியும் என்று இருந்த நிலைமையை மாற்றி தாழ்ந்த வகுப்பினருக்கும் எல்லாவற்றிலும் எங்கும் முதலிடம் என்று அமைத்தவர் காமராஜர்.

இங்கு காமராஜரை சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசினார்கள். நான் இதை ஏற்க விரும்பவில்லை. ஏனென்றால், சந்தனக் கட்டையை அரைக்க அரைக்க மணம் வீசுவது உண்மை. ஆனால் அது தேய்ந்து மறைந்து விடுகிறது. ஆகவே சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசுவது முறையல்ல சரியல்ல.
என்னைப் பொருத்தவரை காமராஜரை நான் உதயசூரியனுக்கு ஒப்பிடுகிறேன். சூரியன் கிழக்கிலிருந்து உதிர்த்து மேற்கில் மறைவதுபோல் தோன்றுகிறது. உண்மையில் அது மறையவில்லை. இருந்த இடத்தில்தான் இருக்கிறது. அதுபோல காமராஜரின் புகழ், தொண்டு உதயசூரியனைப்போல் பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது. நான் இதுவரை எந்தவித தியாகமும் செய்யவில்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. ஆனால் தியாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு தியாகிகளால் பாராட்டுவதை கேட்கும்போது எனக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

காமராஜர் அவர்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும். மக்களின் கவலைகளைப் போக்கி நல்வாழ்வைக் கொடுக்கவேண்டும். கல்யாண வீடு போல நாம் இங்கே சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதோடு நாம் சிந்திக்கவேண்டும். அதற்கு நாம் காமராஜரை வணங்கித்தான் ஆகவேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்தும் காமராஜர் நீடூழி வாழவேண்டும்.



ஜனநாயக சோஷலிசம் என்று காமராஜர் சொல்கிறார். இது சரியா என்று சிலர் கேட்கிறார்கள். சர்வாதிகார ஆட்சி வேறு, பரம்பரையாக நாட்டை ஆள்வது வேறு, ஜனநாயகத்தில் மக்கள் விருப்பத்துடன் அமல்படுத்தப்படுவது சோஷலிசம், பேதமற்ற சமுதாயம் காண்பதுதான் அதன் அடிப்படை. ராஜாஜி இங்கே முதல் அமைச்சராக இருந்தபோது குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதனை தி.மு.க.கழகம் எதிர்த்தது. காமராஜர் முதல் அமைச்சராக வந்தவுடனேயே மாற்றப்பட்டது. காங்கிரசின் திட்டத்தை அதே காங்கிரஸ்காரர் மாற்றினார். எப்படி மாறியது? ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் கட்சிக் கொள்கையும் மாறுகிறது. அதற்கு எடுத்துக் காட்டு காமராஜர்.

இப்படிப்பட்டவரைப் போற்றாமல் தி.மு.க.கழகத்தில் எனக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும். தி.மு.க.வின் லட்சியங்களைக் காமராஜர் நிறைவேற்ற விரும்புகிறார். அதற்குக் காலதாமதம் ஆகலாம். காமராஜர் என் தலைவர். அண்ணா என் வழிகாட்டி. என்னைவிடச் சிறந்தவர்களை என் தலைவர்களாக ஏற்கிறேன். இங்கே பேசிய என்.வி. நடராஜன், ‘காமராஜர் எதிர்கட்சித் தலைவராக இருக்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டார். நல்ல ஒரு எதிர்க்கட்சி தேவைதான். காங்கிரசை தி.மு.க.கழகம் எதிர்க்கிறது. தி.மு.கவை காங்கிரஸ் எதிர்க்கிறது. இரண்டும் எதிர்க்கட்சிகள்தான். அதில் எது உயர்ந்த கட்சி என்பதை எதிர்காலம்தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் மனமாற்றத்திற்கேற்ப மாறும் ஆட்சிதான் தேவை.

ஒருசமயம் காமராஜரை நேரில் சந்தித்து எங்கள் குறைகளை அவரிடம் ஒரு மணி நேரம் விளக்கிப் பேசினேன். அப்போது அவரது நல்ல எண்ணத்தைத்தான் கண்டேன். எண்ணி எண்ணிப் பூரித்தேன். என்னை அவர் தன்பக்கம் இழுக்கவோ, அவமானப்படுத்தவோ இல்லை. மாநகராட்சித் தேர்தலின்போது அவர் ‘வேட்டைக்காரன்’ வருகிறான் ஏமாந்து விடாதீர்கள் என்று ஏதேதோ பேசினார். நானும் பதிலுக்கு ஏதேதோ பேசினேன். அது அரசியல், தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர், பெரிய முதலமைச்சர் பதவியையே தூக்கி எறிந்தவர். தொண்டராய், தோழனாய் இருந்து மக்கள் சேவை செய்யமுடியும் என்று கருதி பதவியைத் துறந்தார்.



சாதாரண கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற வேண்டும். எம்.ஜி.ஆர். சிகப்பு, நான் கறுப்பு என்று (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) முகவை ராஜமாணிக்கம் குறிப்பிட்டார். மனிதனுக்கு இந்த இரண்டு ரத்தமும் தேவை. ஏதாவது ஒன்று அதிகமாகி விட்டால் வியாதிதான். கறுப்பு என்றால் களங்கம் அல்ல. இரண்டும் சேர்ந்தால்தான் ஜனநாயக சோஷலிசம் மலரும்." என்று பேசினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் இந்தப் பேச்சு திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 'கட்சியின் முக்கியத் தலைவர் அந்தஸ்தில் இருப்பவர், எப்படி மாற்றுக்கட்சியின் தலைவரை புகழலாம்' என கட்சியில் கலகக்குரல் எழுந்தது. குறிப்பாக, 'காமராஜரை தலைவர் எனக் குறிப்பிட்டது அண்ணாவை அவமதிக்கும் செயல்' என பரபரப்பு கிளப்பினர் எம்.ஜி.ஆருக்கு எதிரான கோஷ்டியினர்.

இருப்பினும் எம்.ஜி.ஆர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். அண்ணாவிடம் தன் நிலைப்பாட்டை அவர் ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்துரைத்தார். எம்.ஜி.ஆரை நன்கு புரிந்தவரான அண்ணா, மற்றவர்களின் பேச்சை பொருட்படுத்தவில்லை. ஆனால் இந்த சந்தர்ப்பத்திற்கு பிறகு, பொதுவான அண்ணா பற்றாளர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்பட்டது உண்மை. பின்னாள் நடந்தவை தமிழக அரசியல் வரலாற்றில் பதிவானவை.

1967 தேர்தல் நிலவரம் வெளியாகிக்கொண்டிருந்தது. விருதுநகர் தொகுதியில் கல்லூரி மாணவரான பெ.சீனிவாசனிடம் காமராஜர் தோல்வியுற்ற தகவலைக் கேட்டு எம்.ஜி.ஆர் கண்ணீர் வடித்ததாக சொல்வார்கள். திமுக வெற்றியை மற்றவர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, அண்ணா நுங்கம்பாக்கம் வீட்டில் சோகமாகி இருந்தார். “காமராஜர் தோற்றிருக்கக்கூடாது. எத்தனை அதிருப்தி இருந்திருந்தாலும் மக்கள் காமராஜரை தோற்கடித்திருக்கக்கூடாது' என திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார் அவர்.



“சட்டமன்றத்தில் நாம் ஒரு வலுவான தலைவரின் அனுபவத்தை இழந்துவிட்டோம்”என வேதனைப்பட்டார் அண்ணா. காமராஜரின் வெற்றியை பாதிக்கக் கூடாது என்பதற்காகவே அந்த தொகுதியில் முன்பின் அறிமுகமாயிராத ஒருகல்லுாரி மாணவனை நிறுத்தியிருந்தார் அண்ணா என்பார்கள். ஆனால் அதிருப்தி அலையில் காமராஜரும் தப்பவில்லை.

திமுக அரியணைக்கு வந்த சில மாதங்கள் கடந்த நிலையில், திமுக ஆட்சி பற்றி அதுவரை காமராஜர் எந்த விமர்சனமும் வைக்காதது பற்றி சிலர் காமராஜரிடம் குறைபட்டுக்கொண்டனர். " அவங்க வந்தே 4 மாதங்கள்தான் ஆகிறது. கட்சி நிர்வாகம் வேற...ஆட்சி வேற...இப்போதான் புதுசா வந்திருக்காங்க. ஆட்சியின் நிர்வாக விஷயங்களை அவர்கள் தெரிந்துகொள்வதற்கே இன்னும் பல மாதங்கள் ஆகும்...அதுக்குள்ள விமர்சிக்கறதுதான் ஜனநாயகமா... ?" என குறைபட்டவரை கடிந்துகொண்டார் காமராஜர். அதுதான் காமராஜர்.

அக்டோபர் 2, காமராஜர் மறைந்த அன்று சோகமே உருவாக, அப்போதைய முதல்வர் கருணாநிதியும், அவர் அமைச்சரவை சகாக்களும் அவரது உடலை சூழ்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திலேயே காமராஜர் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, மற்ற சம்பிரதாயங்களையும் அங்கேயே நடத்த திட்டமிட்டனர். முதல்வர் கருணாநிதியின் காதுகளுக்கு இந்த தகவல்போனது.



கொதித்துவிட்டார் அவர். “காமராஜர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்த தேசத்தின் சொத்து, அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அரசு முறைப்படிதான் தகனம் செய்யவேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட அதிகார் ஒருவர், காமராஜர் அப்போது எந்த பொறுப்பிலும் இல்லாததை சொல்லி, சில சட்ட சம்பிதராயங்களை தெரிவித்ததோடு, மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டிய சட்டவிதியை எடுத்துச்சொன்னார். மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்ட கருணாநிதி, " நான் சொன்னதை செய்யுங்கள்...மேலும் காமராஜரின் உடலை கிண்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான ராஜாஜி நினைவகம் அருகில்தான் அடக்கம் செய்யவேண்டும்...காமராஜருக்கு இறுதி மரியாதை செய்வதற்கு நாம் யாரிடமும் போய் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை" என கறாராக கூறினார்.

காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் துாணாக விளங்கிய கர்மவீரர், இப்படி மாற்றுக்கட்சியினராலும் போற்றக்கூடிய வகையில் தன் அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தை நேர்மையான முறையில் கையாண்டார் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்.?

- எஸ்.கிருபாகரன்

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024