ஆயிரம் ரூபாய், ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் என்று டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் திரைப்படம் பார்ப்பதற்காக விடுமுறையே அளிக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்பட்ட நிலையில், ரஜினிகாந்தின் "கபாலி' திரைப்படம் ஏதோ சிசில் பி. டெமிலியின் "பைபிள்'; வில்லியம் வைலரின் "பென்ஹர்'; ஜோசப் மான்கிவிஷின் "கிளியோபாட்ரா', பிரான்சிஸ் போர்டு கொப்போலாவின் "காட்பாதர்', ஜேம்ஸ் கேமரோனின் "டைடானிக்'; ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் "ஜுராஸிக் பார்க்' வரிசையில் சர்வதேச அளவில் பேசப்படப் போகிற "மேக்னம் ஓபஸ்' என்று எதிர்பார்த்துப் போய் அமர்ந்தால், பா. ரஞ்சித் இதற்கு முன் இயக்கிய "மெட்ராஸ்' திரைப்படம் அளவுக்குக்கூட ரசிகர்களைத் திருப்திப்படுத்தாததாக அமைந்திருக்கிறது. இந்தத் திரைக்கதையில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் எதற்கு?
ரஜினிகாந்தின் தோற்றமும் சரி, ரசிகர்களைச் கவர்ந்திருக்கும் அவரது இயல்பான சுறுசுறுப்பும் சரி இப்போது "மிஸ்ஸிங்'. இதை அவரும், இயக்குநரும் உணர்ந்து செயல்பட்டிருந்தால் இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கத் துணிந்திருக்க மாட்டார்கள்.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் என்பதால், பாராட்டுப் பெற்ற பா. ரஞ்சித் என்கிற இயக்குநரை, "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தை வைத்து அவரது இமேஜும் கெடாமல், இவரது "லோ பட்ஜெட்' அடித்தட்டு சிந்தனையும் மாறாமல் படமெடுக்கச் சொன்னதன் விளைவு, ரஜினி ரசிகர்களையும் திருப்பிப்படுத்தாத, நல்ல சினிமா பார்த்த திருப்தியும் ஏற்படாத ஒரு அரைவேக்காட்டு, கலவையாகக் "கபாலி' உருவாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக அரைத்துக் கொண்டிருக்கும் அரதப் பழசான நல்ல தாதாவுக்கும் கெட்ட தாதாவுக்குமான மோதல்தான் கதை. அந்த தாதாக்களின் கதையை அப்படியே படமாக்கினால் "முற்போக்குவாதி' பட்டம் கிடைக்காது என்பதனால், அதில் தமிழ் உணர்வையும், ஜாதிக் கொடுமையையும் கலந்து படமாக்க முற்பட்டிருக்கிறார் பா.ரஞ்சித்.
மலைகளாகக் கிடந்த மலேசியாவை சீராக்கி பொன் விளையும் பூமியாக மாற்றிய தமிழர்களுக்குத் தலைமை தாங்குகிறார் கபாலியாக வரும் ரஜினி. அந்த முன்னேற்றம் பிடிக்காத மலாய் முதலாளிகள் ரஜினியையும், அவரது குடும்பத்தையும் சிதறடிக்கிறார்கள். பின் அந்த முகாமுக்குள் நடக்கும் தீப்பொறி உரசலில் வெடித்துக் கிளம்பி, "தமிழன் முன்னேறினா பிடிக்காதா..! ஒரு தமிழன் ஆளக் கூடாதா? நான் ஆளப் பிறந்தவன்டா...' என ரஜினி தரும் பதிலடிதான் கபாலியின் கதைக் களம்.
தமிழனுக்கு சம்பள உயர்வு பெற்றுத்தரும் கபாலி, அங்கிருக்கும் தமிழர் தலைவரான நாசருக்குப் பின் தலைமை இடத்துக்கு வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாய் தன் மனைவி ராதிகா ஆப்தேவை பறிகொடுத்துவிட்டு சூழ்ச்சி வலைகளில் சிக்கி சிறைக்குப் போகும் அவர், 20 வருடங்களுக்குப் பின் திரும்புகிறார். அதன் பின் நடக்கும் அரசியலும், அதைச் சுற்றி நடக்கும் ஆட்டங்களும்தான் கதை. சில உணர்வுப்பூர்வமான பக்கங்கள் இருப்பது மட்டுமே பொறுமை இழக்காமல் நம்மை உட்கார வைக்கின்றன.
சிறைக்குள்ளிருந்து 20 வருடங்கள் கழித்து வெளியே வரும் கபாலியைப் பார்த்ததும் நிமிர்ந்து அமர்ந்தது தவறு. விறுவிறுப்பாக அடுத்த கட்டம் ஆரம்பிக்கப் போகிறது என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு கட்டத்திலும், பொங்கிவரும் பாலில் தண்ணீரை ஊற்றுவதுபோல திடீர் தொய்வை வலுக்கட்டாயமாக ஏற்படுத்தும் திரைக்கதை அமைப்பு. தாதாக்களின் கிராஸ் ஃபயரில் பலியாகும் அப்பாவி பொதுமக்களின் கதிதான் ரசிகர்களுக்கும்!
கோட் சூட், கூலிங் கிளாஸ், ஒரு கத்தி, பல துப்பாக்கிகளைக்கொண்டு அதைச் சாதிப்பதுதான் ரஜினி ஸ்பெஷல். அது மட்டுமே, ரஜினி இல்லையே. ஆக்ஷனும் இருந்தால்தானே அது ரஜினி. ரஜினியின் பேச்சில் வேகம் இல்லை. நடையில் சுறுசுறுப்பில்லை. நடிப்பில் அவருக்கே உரித்தான தனித்தன்மை இல்லை. அவரை ரொம்பவும் சிரமப்படுத்தி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு இடத்தையும் "மகிழ்ச்சி' என்று சொல்லி முடித்து வைக்கும் ரஜினியின் உச்சரிப்பில், அதற்குப் பின் சிலபல இடங்களில் "மகிழ்ச்சி' என்பது மட்டுமேதான் ஒலிக்கிறது. அப்படிப் பேசாத சமயம், ஒன்று சுடுகிறார்... அல்லது நீண்ட வசனங்களைப் பேசுகிறார்.
மாறிப்போன மலேசியாவை பிரமிப்போடு பார்க்கிற காட்சி. அந்த வெண்தாடியும், அந்த தாடிக்குள்ளிருந்து அவ்வப்போது கசிந்து வரும், அந்த அலட்சிய சிரிப்பும், பழைய "பாட்சா' ரஜினியுடன் ஒப்பிட்டுப் பார்த்து வேதனைப்பட வைக்கிறது.
மலேசியாதான் கதைக்களம். ஆனால், மலேசியாவை ஒழுங்காகக் காட்டியிருக்கிறார்களா என்றால் இல்லை. கோலாலம்பூரில் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தை, சென்னை என்றால் அந்தக் காலத்தில் எல்.ஐ.சி. கட்டடத்தையோ, சென்ட்ரல் ரயில் நிலையத்தையோ காட்டுவதுபோலக் காட்டுகிறார்கள். அவ்வளவுதான்.
மலேசியா, சென்னை, தாய்லாந்து என்று அடுத்தடுத்து கதையை நகர்த்திச் செல்லும், "செயின் ரியாக்ஷன்' எத்தனை சுவாரஸ்யமானதாக அமைந்திருக்க வேண்டும்? சர்வதேச நிழல் உலக தாதாக்கள் ஒவ்வொரு சவாலையும் எவ்வளவு மதியூகத்துடன் கடக்க வேண்டியிருக்கும்? ஆனால், ரஜினி கையாளுகிற ஒவ்வொரு சவாலும்... அடப் போங்க சார்... சலிப்பூட்டுகிறது...
வழக்கமாக ரஜினிக்கு இணையான ஆளுமைகள் அவரின் படத்தில் இருப்பார்கள். அப்படி இந்தப் படத்தில் யாரும் இல்லாதது பெரும் குறை. தன்ஷிகா, கிஷோர், ஜான் விஜய், கலையரசன், தினேஷ், ரித்விகா, மைம் கோபி என காட்சிகள் எங்கும் தெரிந்த முகங்கள். இருந்தும், செயற்கைத்தனம்.
படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் யாருமே கதையுடன் பொருந்திப்போகவில்லை. "மெட்ராஸ்' படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் தவிர எல்லோரும் இதில் நடித்துள்ளனர். தனது முந்தைய படத்தில் நடித்தவர்களை இந்தப் படத்திலும் பயன்படுத்த நினைப்பதைப் பாராட்டலாம். அதற்காக பொருத்தமில்லாத கதாபாத்திரங்களில் அவர்களை நடிக்க வைத்தது சரியா...?
ராதிகா ஆப்தே வரும் ஒரு சில இடங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது. ரஜினியும், ராதிகாவும் சந்தித்துக் கொள்கிற அந்த காட்சி உருக்கம். "உன் கருப்பு கலரை அப்படியே எடுத்து பூசிக்கணும்' என்று பேசுகிறபோது ராதிகாவின் கண்கள் உதிர்க்கிற வெட்கம் பேரழகு.
பின்னணி இசையில், "நெருப்புடா தீம்' மட்டுமே ஒலிக்கிறது. படம் முழுக்கவே சந்தோஷ் நாராயணனை நினைக்க வைப்பது அது மட்டுமேதான். "பாபா' தோல்விப்படமாக இருந்திருக்கலாம். ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கவிஞர் வாலியும், கவிஞர் வைரமுத்துவும் எழுதிய அத்தனை பாடல்களும் ரசிகர்களைக் கட்டிப் போட்டன. பாடல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தன. இதில் அப்படிச் சொல்ல ஒரு பாட்டுக்கூடத் தேறாது.
வசனங்களில் இயல்பு இருந்தாலும், தனித்துவம் இல்லை. சம்பந்தமே இல்லாமல் திடீரென்று "நான் ஆண்ட பரம்பரை கிடையாதுடா. ஆனால், ஆளப்பிறந்தவன்டா' என்று வசனம் பேசுகிறார் கபாலியாக வரும் ரஜினி. கோட் சூட் போட்டா உங்களுக்கு ஏன் எரிகிறது என்று கேட்பது சரி, அதற்காக மகாத்மா காந்தியை ஏன் ஏளனப்படுத்திக் கொச்சைப்படுத்த வேண்டும் என்று புரியவில்லை.
ஒரு கலைஞன் எந்த வயதிலும், நிலையிலும் நடிக்க விரும்புவதிலும், நடிப்பதிலும் தவறில்லை. ஆனால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டிய இயக்குநர் பா. ரஞ்சித் அல்ல. அவரை நன்றாகத் தெரிந்திருக்கும், அவரை வைத்துப் பல நல்ல படங்களை இயக்கி இருக்கும் எஸ்.பி. முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார், மகேந்திரன் போன்றவர்கள்.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் களம் வேறு. பார்வை வேறு. எந்தவித இமேஜ் சுமையும் இல்லாத நடிக - நடிகையர்தான் அவரது படங்களுக்குப் பொருத்தமானவர்கள். குறைந்த பட்ஜெட் படங்கள்தான் அவரது களம். அவரை ரஜினியைக் கதாநாயகனாக வைத்துப் படம் இயக்கச் சொன்னது, குருவி தலையில் பனங்காயை வைத்த கதையாகி விட்டிருக்கிறது.
எல்லாம் போகட்டும். எந்த ஒரு முடிவும் இல்லாத ஒரு உப்புச்சப்பே இல்லாத கிளைமாக்சுடனா ஒரு ரஜினிகாந்தின் படத்தை முடிப்பது? இது ரஜினிகாந்த் படமல்ல, பா. ரஞ்சித் படம் என்றால், இத்தனை பெரிய பட்ஜெட்டிலா இந்தப் படத்தை எடுப்பது?
வெறும் கற்சிலையைப் பார்க்கக் கோயில்களில் சிறப்பு தரிசன டிக்கெட் வசூலிக்கும்போது, மனிதக் கடவுளான ரஜினி படத்திற்கு ரூ.1,000 வசூலிப்பதில் தவறில்லை என்று நியாயப்படுத்துகிறீர்களாமே, ரஞ்சித்? சபாஷ்! என்னே உங்களது முற்போக்கு சிந்தனை! ரஜினியை மனிதக் கடவுளாகக் கருதும் நீங்கள், அவரை அவரது பாணியிலேயே நடிக்க வைத்துப் படம் இயக்கி இருக்கலாமே. பிறகு எதற்காக "ரஞ்சித் படம்' என்கிற போலித்தனம்?
மொத்தத்தில் வழக்கமான ரஜினிகாந்த படமாகவும் இல்லாமல், பா. ரஞ்சித் படமாகவும் இல்லாமல், தொய்வில்லாத விறுவிறுப்பான திரைக்கதையும் அமைக்கப்படாமல், துண்டு துண்டான காட்சிகளை வெட்டி ஒட்டியதுபோல உருவாக்கப்பட்டிருக்கிறது "கபாலி' திரைப்படம்.
அட்டகாசமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மலேசிய நடிகர் வின்ஸ்டன் சாவோ அல்ல இந்தப் படத்தின் வில்லன். ரஜினியின் மேஜிக் துளிக்கூட இல்லாத கதைதான் கபாலிக்கு வில்லன்.
நமது மனத்திரையில் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டாராகவே தொடரவிடுங்கள். அவரை இனியும் நடிக்கச் சொல்லி சிரமப்படுத்தி, அவருக்கு இருக்கும் இமேஜையும், ரசிகர்களின் பேரன்பையும் வேரறுத்து விடாதீர்கள். "கபாலி' ஒரு கெட்ட கனவாக இருந்துவிட்டுப் போகட்டும்!
No comments:
Post a Comment