Sunday, July 24, 2016

செப்டம்பர் 30–ந்தேதிக்குள் கருப்பு பணத்தை தெரிவிக்காவிட்டால் சும்மா விடமாட்டோம் பிரதமர் மோடி எச்சரிக்கை



புதுடெல்லி,


கருப்பு பண விவரங்களை செப்டம்பர் 30–ந்தேதிக்குள் தெரிவிக்காதவர்களை வருமான வரித்துறை சும்மா விடாது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.

கருப்பு பணம்

கருப்பு பண விவரங்களை, தானாக முன்வந்து தெரிவித்து, சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 4 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 1–ந்தேதி தொடங்கிய இத்திட்டம் செப்டம்பர் 30–ந்தேதி முடிவடைகிறது.

இந்த காலகட்டத்தில், தங்களது கருப்பு பண விவரங்களை அளிப்பவர்கள், 45 சதவீத வரி மற்றும் அபராதம் செலுத்தி, வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால், செப்டம்பர் 30–ந்தேதிக்குள் கருப்பு பண விவரங்களை அளிக்காதவர்கள் மீது, அதன்பிறகு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மோடி எச்சரிக்கை

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நகை வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மோடி, கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அவர் பேசியதாவது:–

கணக்கில் காட்டப்படாத பணத்தில் பெரும்பகுதி, நகைகளிலும், ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்யப்படுகிறது. சிலர் பெருமளவு பணத்துடன் நகை வியாபாரிகளை தேடிச் செல்வதை நான் அறிவேன். அவர்கள், செப்டம்பர் 30–ந் தேதிக்குள், தங்களிடம் உள்ள கருப்பு பண விவரங்களை அளித்து, தங்களை தூய்மையானவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்யாவிட்டால், செப்டம்பர் 30–ந்தேதிக்கு பிறகு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சும்மா விடாது

வரி ஏய்ப்பு செய்தவர்கள், கடந்த காலங்களில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே நடவடிக்கையை செப்டம்பர் 30–ந்தேதிக்கு பிறகு எடுக்கும் நிலைக்கு மத்திய அரசை தள்ளிவிடாதீர்கள். அந்த பாவத்தை நான் செய்ய விரும்பவில்லை.

செப்டம்பர் 30–ந்தேதிக்குள், கருப்பு பண விவரத்தை அளிக்காத யாரையும் வருமான வரித்துறை சும்மா விடாது.

நிம்மதியாக தூங்கலாம்

அரசுக்கோ, வருமான வரித்துறைக்கோ எதற்கு பயப்பட வேண்டும்? எனவே, கருப்பு பண விவரத்தை அளித்து விடுவது நல்லது. அதன்பிறகு நிம்மதியாக தூங்கலாம்.

வீடுகளிலும், கோவில்களிலும் தங்கம் சும்மா கிடக்கிறது. வீடுகளில் உள்ள தங்கத்தை ஆண்டுக்கு இரண்டு, மூன்று தடவை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

எனவே, அந்த தங்கத்தை நீங்கள் அரசிடம் முதலீடு செய்யலாம். தேவைப்படும்போது, எடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரமும் முன்னேறும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024