Friday, July 15, 2016

'கெட்டே போகாத சிக்கன் பிரியாணி வேணுமா?' அலற வைக்கும் ஐ.ஆர்.சி.டி.சி


'கெட்டே போகாத சிக்கன் பிரியாணி வேணுமா?' அலற வைக்கும் ஐ.ஆர்.சி.டி.சி.





நீண்ட தூரம் செல்லும் ரயில் பயணிகள் வசதிக்காக 6 மாதம் வரை கெட்டுப்போகாத பிரியாணி உள்பட எட்டு வகையான உணவை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒரு நாளிலேயே உணவுகள் கெட்டு போகும் நிலையில், ஆறு மாதங்கள் கெட்டுப்போகாத உணவு வழங்கப்படுவதால் உடல் நலம் பாதிக்கப்படாதா என்று கேள்வி எழுப்புகின்றனர் ரயில் பயணிகள்.

ரயில்களில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கும், இரவு நேரங்களில் ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கும் உதவிடும் வகையில் உணவு வழங்கும் புதிய திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மத்திய அரசின் கீழ் செயல்படும் டி.எப்.ஆர்.எல். நிறுவனம் மூலம் தற்போது இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கலவை சாத வகைகளான லெமன் சாதம், புளிசாதம், வெஜ் பிரியாணி, சிக்கன் பிரியாணி, பருப்பு சாதம் மற்றும் கோதுமை உப்புமா உள்ளிட்ட 8 வகையான சாப்பாடு வகைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த உணவு வகைகள் ‘ரிடோர்ட் பாக்கெட்’ என்ற முறையில் ‘பேக்கிங்’ செய்யப்படுகிறது. குறைந்தது 6 மாதம் வரை கெட்டுப்போகாதாம். சோதனை முறையில் இந்தத் திட்டம் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர், ஒரு மாதத்துக்கு இந்த சாப்பாடு வகைகள் ரூ.32 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. டி.எப்.ஆர்.எல். நிறுவனத்தில் இருந்து ஐ.ஆர்.சி.டி.சி. அந்த உணவு பொருட்களை எப்படி ‘பேக்கிங்’ செய்வது என்று கற்றுக்கொண்டு புதியதாக ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது. அப்படி அமைத்ததும், சாப்பாடு வகைகளின் விலைப்பட்டியல் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த சாப்பாடு வகைகளை வாங்கிய பின்னர் 2 நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு அதன் பின்னர் பிரித்து சாப்பிடலாம். இந்த திட்டத்துக்கு ‘ரெடி டூ ஈட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ரயில் பயணியொருவர் கூறுகையில்,


"ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் புழுக்கள் காணப்படுகின்றன. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டால் அவர்கள் பதில் அளிப்பதும் இல்லை. உணவைத் தரப்படுத்துவதுமில்லை. ரயில்வே சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. இப்படி மோசமான உணவுகளை விற்பனை செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி. இப்போது ஆறு மாதம் கெட்டுப்போகாத உணவுகளை விற்பனை செய்ய உள்ளது. இதனை சாப்பிட்டால் நாங்கள் அவ்வளவுதான். உணவுகளின் தரம் குறைந்து வரும் நிலையில், உணவுகள் கெட்டுப் போகாத வகையில் தயாரிக்கப்படும் உணவுகளில் எப்படிப்பட்ட கெமிக்கல் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் எங்களது உடல் நிலை எப்படி ஆரோக்கியமானதாக இருக்கும்".என்றார்.

ஐ.ஆர்.டி.சி. கவனிக்குமா?

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...