குறள் இனிது: சுமாரா வேலை செய்யலாமா குமாரு?
சோம.வீரப்பன்
நான் சென்னையில் 1977ல் வங்கியில் பணி யாற்றிய பொழுது கருப்பையா எனும் பியூன் எனது கிளையில் வேலை செய்தார். பெயர் பிடிச்சிருக்கா?
7ஆம் வகுப்பு வரை தான் படித்தவர் என்றாலும் வேலையில் கில்லாடி. டெஸ்பாட்ச் எனும் தபால் அனுப்பும் வேலை. தினமும் சுமார் 150 கவர் அனுப்ப வேண்டும். மனுஷன் ஏதோ குஸ்தி சண்டையில் எதிரியைக் கையசைத்து அழைப்பது போல ‘கொடுங்க, கொடுங்க' என்று எல்லோரது இருக்கைக்கும் அவரே சென்று கவர்களை வாங்கிச் செல்வார்!
சென்னையில் வாடிக்கையாளர் திங்கள் மாலை 4.30 க்கு சேலம் காசோலையைக் கொடுத்தால், அன்றே அதை எங்களது சேலம் கிளைக்கு அனுப்பி விடுவோம். அவர்களும் அதை செவ்வாயன்றே கிளியரிங்கில் எஸ்பிஐ-க்கு அனுப்பி அது பணமாகி விட்ட விபரத்தை உடனே தபாலில் அனுப்புவார்கள். இல்லாவிட்டால் நம்ம கருப்பையா தொலைபேசியில் துளைப்பாரே!
அப்புறம் என்ன, துறுதுறு கருப்பையா சென்னையில் தானே இருந்தார். காலை 10.30க்கே தபாலைப் பிரித்து வாடிக்கையாளரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விடும்.
அதாவது திங்கள் மாலை சென்னையில் செலுத்தப்பட்ட காசோலை புதன் காலையே பணமாகிவிடும். எல்லாப் புகழும் கருப்பையாவிற்கே!
இதில் வேடிக்கை என்னவென்றால் சென்னையில் எங்கள் கிளைக்கு எதிரிலேயே இருக்கும் வங்கிக் காசோலையை திங்கள் மாலை வாடிக்கையாளர் கொடுத்தால் அது செவ்வாயன்று உள்ளூர் கிளியரிங்கில் ஆர்பிஐக்குப் போகும். பின் புதனன்று காசோலை திரும்பவில்லை என்பதறிந்து வியாழக்கிழமை தான் பணமாகும்!
அடிப்படையில் கருப்பையாவிற்கு வேலை செய்வது ரொம்பப் பிடிக்கும். பெரிய கடனுக்கான விண்ணப்பப் படிவங்களைக் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமெனில், இரவு 7, 8 மணியானாலும் காத்திருந்து பேப்பர்களை எல்லாம் அடுக்கி, கனத்த நூல் போட்டுக் கட்டிக் கவரில் போட்டு அனுப்பி விட்டு உளம் புளகாங்கிதம் அடைவார்! ஒப்புதல் வந்துவிட்டால் கடன் வாங்குபவரை விடவும் அதிகம் மகிழ்வார்!
‘மகத்தான பணி செய்ய ஒரே வழி செய்யும் காரியத்தை நேசிப்பது தான்' என்று ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது சரிதானே!
அண்ணே, பணியாளர்களை இருவகைப்படுத்தலாம். மகிழ்ச்சியாக உத்வேகத்துடன் பணி செய்வோர் ஒரு ரகம். வேண்டா வெறுப்பாய், அலட்சியமாய் வேலை செய்பவர்கள் மற்றொரு ரகம்!
கருப்பையா தம் பணியில் காட்டிய ஆர்வத்தினால் அவரை வங்கியில் எல்லோரும் கொண்டாடினர். பல கிளைகளின் மேலாளர்களும் அவரைத் தம் கிளைக்கு மாற்றுமாறு கேட்டனர். உயரதிகாரிகளுக்கு மேலாளர்களைத் தெரிகிறதோ இல்லையோ, கருப்பையாவை நன்கு தெரியும்! வாடிக்கையாளரில் பலர் எங்கள் வங்கியை ‘கருப்பையா வங்கி' என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர்!
படிப்போ பதவியோ கொடுக்க முடியாத பெருமையை அவரது கடமை மறவாமை கொடுத்து விட்டது!
செய்ய வேண்டிய கடமையை அலட்சியப் படுத்துகிறவர்களுக்குப் புகழ் வாழ்வு இல்லை. இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்துமென்கிறார் வள்ளுவர்.
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு (குறள்: 533)
No comments:
Post a Comment