Thursday, July 14, 2016

'காமராஜர் உருவத்தில் இனிப்புக் கொழுக்கட்டை!' -மலைக்க வைத்த 'இட்லி' இனியவன்



vikatan.com

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவத்தில் முழுக் கொழுக்கட்டையை தயார் செய்து வருகிறார் சமையல் கலை வல்லுநர் இனியவன். " நாளை காலை காமராஜர் வாழ்ந்த வீட்டில், அவரது உருவத்திலான இனிப்புக் கொழுக்கட்டையை பொதுமக்கள் பார்க்கலாம்" என்கிறார் நெகிழ்ச்சியோடு.

கோவையைப் பூர்வீகமாகக் கொண்டவர் 'மல்லிப் பூ' இட்லி இனியவன். மிகுந்த வறுமைக்கு இடையில் சென்னை வந்தவருக்கு இட்லி வியாபாரமே கை தூக்கிவிட்டது. பிரபலமானவர்களின் திருமணக் கூடங்களில் இனியவனின் இட்லிக்கு என தனி இடம் உண்டு. காலத்திற்கேற்றார் போல, சாக்லெட் இட்லி, பீட்ரூட் இட்லி, புதினா இட்லி, இளநீர் இட்லி,சிறுதானிய இட்லிகள் என விதவிதமான பதார்த்தங்களை அறிமுகப்படுத்தினார்.

100 கிலோ எடையிலான இட்லி, அப்துல் கலாம் உருவத்தில் இட்லி, அன்னை தெரசா உருவத்தில் இட்லி என இட்லியை வைத்தே ஏராளமான கண்காட்சிகளை நடத்தியவர். இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளன.

இந்நிலையில், காமராஜரின் 114-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவத்தில் இனிப்புக் கொழுக்கட்டையைத் தயார் செய்யும் வேலையில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார் இனியவன். நாளை காலை 9 மணியளவில் திருமலைப் பிள்ளை தெருவில் உள்ள காமராஜர் வாழ்ந்த வீட்டில், பொதுமக்கள் பார்வைக்கு கொழுக்கட்டையை வைக்க இருக்கிறார்.

.இனியவனிடம் பேசினோம்.  " காமராஜரின் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி நாளாக அரசு கொண்டாடுகிறது. நமது வாழ்வில் ஏதோ ஒருநாள் என்று கடந்த போகக் கூடியதல்ல அவரது பிறந்தநாள்.தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்த நேர்மையான ஆட்சியாளர் அவர். நான் எட்டாம் வகுப்பு வரையில் படித்திருக்கிறேன். அதற்குக் காரணமே, காமராஜர் போட்ட சத்துணவுதான். இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறேன். கடந்த சில மாதங்களாகவே, அவரது பிறந்தநாளையொட்டி ஏதாவது செய்ய வேண்டும் என மனதிற்குள் எண்ண ஓட்டம் இருந்து கொண்டே இருந்தது. இட்லி வடிவத்தில் அவரைக் கொண்டு வருவதைவிடவும், கொழுக்கட்டை உருவில் கொண்டு வருவது என முடிவு செய்தோம். சுமார் 60 கிலோ எடையில் அவரது உருவத்தை இனிப்பு கொழுக்கட்டையில் கொண்டு வருவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கடந்த பத்து நாட்களாக அவரது உருவத்தை எப்படிக் கொண்டு வருவது என பலவிதமான முயற்சிகளில் இறங்கினோம். நேற்றுதான் முழுமையான வடிவத்தை எட்டினோம். இன்று இரவுக்குள் முழு கொழுக்கட்டையும் தயாராகிவிடும். தவிர, பொதுமக்கள் உண்பதற்காக 114 கிலோ எடையில் ராட்சத இனிப்புக் கொழுக்கட்டை ஒன்றையும் தயார் செய்து வருகிறோம். இந்த கொழுக்கட்டை நாளை காலை 9 மணியளவில், காமராஜர் வாழ்ந்த வீட்டில் வெட்டப்பட்டு, பொதுமக்களுக்கு உணவாக வழங்கப்படும்.
அவரது உருவத்தினால் ஆன கொழுக்கட்டையை, கலங்கரை விளக்கம் அருகில் உள்ள கடலில் மீன்களுக்கு உணவாகப் படைக்க இருக்கிறோம். கல்விக் கண் திறந்த காமராஜருக்கு எங்களால் முடிந்த சிறிய அளவிலான முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம்" என்றார் மகிழ்ச்சியோடு.

காமராஜருக்கு சிறப்புச் செய்யும் 'இட்லி' இனியவனின் இனிப்புக் கொழுக்கட்டை தித்திப்பாய் பரவட்டும்!

-ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...