Thursday, July 14, 2016

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை


மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 7 பேருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 7 பேருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

ஆயுள் தண்டனை பெற்றுள்ள 7 பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2008ல் நடந்த இந்த கொலை சம்பவத்தில் விஜயன் மனைவி சுதாவின் தங்கை பானு, தமிழக காவல்துறையை சேர்ந்த காவலர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், கார்த்தி, தினேஷ்குமார், சாலமன், வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயசந்திரன் பிறப்பித்துள்ள இன்றைய தீர்ப்பில், நூற்றுக்கணக்கான சாட்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர்கள் குற்றவாளிகள் என்பது தெளிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதியன்று சென்னை கோட்டூர்புரம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டார்.

அந்த தாக்குதலில் விஜயன் மரணமுற்றத்தை அடுத்து, சென்னை கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர்அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகே துரிதப்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன், தனது மூன்றாவது மனைவியான வி.என் ஜானகியின் சகோதரரின் குழந்தைகளான லதா, கீதா, சுதா, பானு ஆகிய நால்வரையும் வளர்ப்பு குழந்தைகளாக வளர்த்தார்.

இவர்களில் சுதாவின் கணவர் கே. விஜயகுமார் என்ற விஜயன். இவர் 2008ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி சென்னை நந்தனத்தில் சிலரால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கை காவல்துறையின் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) விசாரித்துவந்தது.

இந்த வழக்கில் சுதாவின் சொந்தத் தங்கையான பானு என்பவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர்களது தம்பியான திலீபன் நடத்திய பள்ளிக்கூடத்தை யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக பானுவுக்கும் திலீபனுக்கும் பிரச்சனைகள் இருந்தன.

இதில் திலீபனுக்கு ஆதரவாக விஜயன் இருந்ததால், அவரை கொல்ல பானு திட்டமிட்டார் என்றும் போலீஸ் கான்ஸ்டபிளான கருணா என்பவரது உதவியோடு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் சிபிசிஐடி கூறியது.

இதற்காக நான்கு லட்ச ரூபாய் கருணாவுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் நான்கு பேரை கூலிக்கு அமர்த்தினார்.

விஜயன் காரில் வரும்போது அந்தக் கார் மீது மற்றொரு வாகனத்தை மோதச் செய்து, அவரை காரை விட்டு வெளியேறச் செய்து இரும்பு பைப்பால் அடித்து கொன்றனர் என சிபிசிஐடி குற்றம்சாட்டியது.

இந்த வழக்கில் பானு, கருணா, பானுவின் தோழி புவனா உள்பட 8 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இதில் புவனா வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். மீதமிருக்கும் ஏழு பேர் மீது வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் 79 சாட்சிகள் சாட்சியமளித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024