Tuesday, July 5, 2016

எது ஊடக அறம்?

Dinamani
எது ஊடக அறம்?


By ஆசிரியர்


First Published : 05 July 2016 12:52 AM IST


மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் எழுந்துள்ள முதன்மையான கேள்வி, ஊடக அறம் என்றால் என்ன என்பதுதான். சுவாதியைக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்பாக நிறுத்தியபோது, "சுவாதி கொலை வழக்கை நடத்துவது நீதிமன்றமா, ஊடகமா? வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும், படங்களும் எவ்வாறு உடனுக்குடன் வெளியாகின?' என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

மும்பைத் தாக்குதலில், தாஜ் ஓட்டலில் பலரை பிணைக்கைதிகளாக வைத்திருந்த பயங்கரவாதிகளுக்கு, வெளியே காவல் துறை, ராணுவம் இவற்றின் நடவடிக்கை அனைத்தும் தொலைக்காட்சி வழியாக நேரடியாக பார்க்க முடிந்த அவலமும், அதற்கான கண்டனமும் தெரிந்தவைதான். சமூக வலைத்தளங்களின் கருத்தோட்டத்துக்கு இணையாக, மூச்சிறைக்க ஓடும் நேரத்தில் ஊடக அறம், சில நேரங்களில் தெரிந்தே மீறப்படுகிறது.

கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் சுவாதி கொலை குறித்து இடம்பெற்ற தகவல்கள் அனைத்தும் மிகவும் தரமற்றவையாகவும் வரம்பு மீறியவையாகவும் இருந்தன.

கொலையான சுவாதியின் பல்வேறு தோற்றங்களிலான புகைப்படங்கள் எவ்வாறு கிடைத்தன? அவை அவரது முகநூல் பதிவில் உள்ள நண்பர்கள் மூலம்தான் பகிரப்பட்டிருக்க வேண்டும். அதை அப்படியே ஊடகங்கள் பயன்படுத்தியது சரியா? இந்தப் புகைப்

படங்கள் இந்த கொலைவழக்கில் அத்தனை இன்றியமையாதவையா? ஒரு பெண்ணை இழந்த குடும்பத்துக்கு இது மேலும் மனவருத்தம் தரும் செயல் அல்லவா?

இப்போது கொலையாளி ராம்குமாரை நீதிமன்றத்துக்கு முகமூடி போட்டு அழைத்து வருகிறார்கள். கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் மருத்துவமனையில், தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருக்கும்போது, கழுத்தில் கட்டுடன் இருக்கும் அவரது முகத்தை செல்போனில் படம் பிடித்து அது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது எப்படி? அந்தப் படத்தை காவல் துறையைத் தவிர வேறு யார் தந்திருக்க முடியும்?

கொலையாளி என்று நிரூபிக்கப்படாத நிலையில், அவர் கொலையாளி என்று கருதுவதற்கான காரணங்கள் உள்ளன என்று நீதிமன்றம் தெரிவிக்காத நிலையில், அவரது முகப்படத்தை வெளியிடலாமா? அதுமட்டுமன்றி, அவரது தந்தை, தாய், சகோதரிகளின் பெயர்கள், அவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள், எங்கே வேலை பார்க்கிறார்கள் என்று எல்லாத் தகவல்களும் வெளியிட்டு, அந்தக் குடும்பத்தையே அவமானப்படுத்துவது முறையா? அவர்

களுக்கும் இந்த சம்பவத்துக்கும் என்ன தொடர்பு?

சமூக வலைத்தளத்தில் பலர் பகிர்ந்துகொண்ட ஒரு கேள்வி: ஆடி காரை போதையில் ஓட்டிவந்து ஒருவரது இறப்புக்குக் காரணமான பெண் யார்? தொழிலதிபர் எனப்படும் அவரது தந்தை யார்? ராம்குமார் பெயர், குடும்ப வரலாறை வெளியிடும் ஊடகங்கள் இவற்றை மட்டும் ஏன் வெளியிடவில்லை?

கத்தியின் கைப்பிடியில் ரேகைகள் பதிவு இல்லை என்பதில் தொடங்கி, சுவாதியின் செல்லிடப்பேசி எண்ணின் டூப்ளிகேட் மூலம் அவரது அனைத்து செயலிகளையும் மீட்டெடுத்து காவல் துறை ஆய்வு செய்கிறது என்ற தகவல் வரை அனைத்தையும் ஊடகங்களும் பத்திரிகைகளும் போட்டிபோட்டு வெளியிடவும், சமூக வலைத்தளங்கள் அதைப் பகிர்ந்துகொள்ளவுமாக அனைத்தும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல்தான் நடந்தேறின. இது தேவையற்றது. குற்றவாளிக்குத் தகவல் தருவதாக அமையக்கூடியது. இவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும்.

இதனை சமூக வலைத்தளங்களின் பொறுப்பின்மை, ஊடகங்களின் பொறுப்பின்மை என்று இருவகையாக பிரித்துப் பார்ப்பதைக் காட்டிலும், இந்தத் தவறுகள் மீண்டும் நேரிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை ஊடகங்களுக்கே அதிகம்.

சுவாதியின் நண்பர் ஒரு முஸ்லிம் என்பதால் இந்த விவகாரத்துக்கு வேறு நிறம் கொடுக்கவும் சிலர் முற்பட்டனர். அசம்பாவிதமாகிவிடுமோ என்று அஞ்சுகிற அளவுக்கு அது சென்றது. கொலை செய்தவராகக் கருதப்படும் ராம்குமாரின் பின்னணியில் வேறு சில சக்திகள் உள்ளதாக பேட்டிகள் தரப்படுகின்றன. ஆனால், அதற்கான ஆதாரங்களை பேட்டியளிப்போர் முன்வைக்காத நிலையில், வெறும் சந்தேகங்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டிய, பத்திரிகைகளில் வெளியிட வேண்டிய கட்டாயம் என்ன? இது குறித்தும் ஊடகங்கள் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது.

காட்சி ஊடகங்களும், புலனாய்வு ஊடகவியலும் சமூக அவலங்களையும், அரசின் தவறுகளையும் படம் பிடித்துக்காட்டி, தவறுகள் திருத்தப்படவும், மாற்றங்கள் ஏற்படவும் வழிகோலுகின்றன என்

பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில், ஊடகங்களுக்கு இடையே நிலவும் தொழில் போட்டியும், வியாபார நிர்பந்தங்களும் அவற்றை வரம்புமீறச் செய்கின்றன. காட்சி ஊடகங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகரிப்பதிலும், புலனாய்வு இதழ்கள் விற்பனையை அதிகரிப்பதிலும் காட்டும் ஆர்வத்தை, ஊடக தர்மத்தைப் பின்பற்றுவதிலும் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் பெயர் இடம்பெறக் கூடாது என்கிற ஊடக அறம் அண்மையில்தான் நடைமுறைக்கு வந்தது. தில்லியில் நிர்பயா வழக்குக்குப் பின் எந்த ஊடகமும் வல்லுறவு மற்றும் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படம் வெளியிடக் கூடாது என்ற அறம் அமலானது. அண்மைக்காலமாக, குற்றச்செயல்களில் ஈடுபட்டுக் கைதாகும் 18 வயதுக்குட்பட்ட சிறார்களின் பெயரைக் குறிப்பிடக் கூடாது என்கின்ற அறம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதேபோன்று இந்த விவகாரத்திலும் புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும். தவறுகளில் இருந்துதான் ஊடக அறம் தன்னை செம்மைப்படுத்திக் கொள்கிறது.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...