ஜூலை 21 சிவாஜிகணேசன் நினைவு நாள்:
தமிழர்களின் 50 ஆண்டுகால அடையாளமாகத் திகழ்பவர்களின் பட்டியல் ரொம்பவும் நீளமானது. அதில் சிவாஜி கணேசனும் ஒருவர். சில ஞாபகங்களுக்கு நரைப்பதே இல்லை. சினிமா மட்டுமே நம் மக்களின் பொழுதுபோக்கு, சாயங்கால சந்தோஷமாக இருந்த வேளைகளில் சிவாஜி எனும் கலைஞன் தமிழர்களின் நெஞ்சங்களில் ஏற்படுத்திய பிம்பம் அளவிட முடியாதது.
இன்று 40 வயதைத் தாண்டிய தமிழர்களுக்குள் அந்த பிம்பம் ஏற்படுத் திய விளைவுகள் கலைடாஸ்கோப் புக்கு இணையானது. இதை இன்று தியேட்டரில் படம் பார்த்துக்கொண் டிருக்கும் அந்த நிமிடத்திலேயே ‘படம் மொக்கை’, ‘படம் சூப்பர்’ என்று மெசேஜ் தட்டுகிற, வாட்ஸ்-அப் செய்கிற தலைமுறையினரால் புரிந்துகொள்ள முடியாது.
ஒரு தடவை சிவாஜிகணேசனைப் பற்றி இலக்கிய விமர்சகர் கைலாசபதி ‘‘சிவாஜியின் நடிப்பை எல்லோரும் ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்கள். ஆமாம், அவருடையது ஓவர் ஆக்டிங் தான். ஆனால், அவர்தான் எங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், அப்பர், ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன்’’ என்று குறிப்பிட்டார்.
இதை இங்குப் பதிவு செய்யக் காரணம் உள்ளது. எப்போதும் ஒன்றை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வது என்பது ஒரு பக்கம். விமர்சித்து விலக்கித் தள்ளுவது இன்னொரு பக்கம். இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தும். சிவாஜியும் இந்த வினோதச் சதுரத்துக்குள் கொண்டு வரப்பட்டு இன்று சிவாஜியின் நடிப்பு சிலரால் நகையாடப்படுவதை சிவாஜி ரசிகர்கள் பெருங்கோபத்துடன் எதிர் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத் தில் சிவாஜி எனும் பெருங்கலைஞன் காட்டிய ஜால வித்தையை வேறு எந்தத் தமிழ் கலைஞனாலும் நிகழ்த்த முடியுமா? பத்மினி பரதம் ஆடப் போவதை, அழகு மிளிரும் கோயில் தூண் மறைவில் இருந்து சிவாஜி தலையை மட்டும் நீட்டி பார்த்து ரசிக்க முற்படும்போது அவர் முகத்தில் தோன்றும் கலவையான உனார்ச்சிகளை எந்த மொழியில் பதிவு செய்வது?
1952-ல் ‘பராசக்தி’ படத்தில் சிவாஜியை நடிக்க வைக்க அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் ஆயத்த வேலைகளில் இருந்தபோது, பெருமாள் முதலி யாருக்கு நிதியுதவி செய்ய முன்வந்த ஏவி.மெய்யப்ப செட்டியார் ‘‘இது நடிப் புக்கேற்ற முகம் கிடையாது. வேறு யாரையாவது கதாநாயகனாக்குங் களேன்’’ என்று பெருமாள் முதலியா ரிடம் சொன்னதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டவரல்ல சிவாஜி என்பதற்கு, இது ஒரு வரலாற்று உதாரணம். இப்படித்தான் சிவாஜி எனும் ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம் தடைகளை மீறிச் சிறு புள்ளியில் இருந்து ஆரம்பித்திருக்கிறது.
சிவாஜியின் நடிப்பு என்பது காலத்தோடு உறவாடிய ஒரு வெளிப் பாடு. ‘சினிமா என்பது சப்தமல்ல…’ என்பதை 1980-க்கு பிறகுதான் தமிழர்கள் உணரவே ஆரம்பித்தார்கள். அதனை ஆழமாக உணர்த்த கே.பாலசந்தரும், பாரதிராஜாவும், மகேந்திரனும், பாலுமகேந்திராவும் தேவைப்பட்டார்கள். ‘நாடக தாக்கமும், அரங்கமே எதிரொலிக்கும் உரையாடல் உத்தியும் சேர்ந்த கலவைதான் சினிமா…’ என்றிருந்த காலகட்டத்தில் திரையில் தோன்றிய ஒரு கலைஞனை இன்றைய விழுமியங்களுடன் பூதக் கண்ணாடி வைத்து நோக்குவது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?
சிவாஜிக்காகவே கதை பின்னப் பட்டது. அப்படியான திரைக்கதையில் தனக்குரிய பங்கு என்ன என்பதை உணர்ந்து, தனது அனைத்துத் திறமைகளையும் கொட்டினார் சிவாஜி. மேலைநாட்டுத் தாக்கத்தால் நவீன மாயைகளில் சிக்கித் தவிக்கும் மனைவிக்கு வாய்த்த பட்டிக்காட்டு கணவனாக அவர் தோன்ற வேண்டிய திரைக்கதையில் அவர் அந்த ஜோடனைகளுடன் கூடிய கட்டுக் குடுமியுடன் வந்து கலக்குவார் ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தில். ‘அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி…’ என்று அவர் ஆடிப் பாடுவதை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது.
நம்பகமான நடிப்புத் திறன்
‘சம்பூரண ராமாயணம்’ என்ற புராணப் படத்தில் பரதனாக வருவார் சிவாஜி. பொதுவாக புராணக் கதைகள் அத்தனையுமே கற்பனையின் அதீதத் தில் உருவானவைதான். அன்றைய கதைசொல்லிகளின் கற்பனை பாதை வழியே சென்றுதான் அந்தக் கதாபாத்திரங்களை நம் மனதில் உருவேற்றிக்கொள்ள முடியும். உண்மையிலேயே பரதன் என்பவன் இப்படித்தான் இருந்திருப்பானோ என்று நம்மை நம்ப வைக்கும் முயற்சியில் பெரிய வெற்றி பெற்றிருப்பார் சிவாஜி.
சினிமாவில் அப்பாவாக, அண்ண னாக, கணவனாக, முதலாளியாக, வேலையாளாக, திரைக்கதையில் வலம் வரும் நடிகர்கள் தன்னை உருமாற்றி, அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற உணர்ச்சியை தன் முகபாவனை களால் காட்ட வேண்டிய கட்டாயம். சிவாஜி அதில் பன்முகத் திறன் பெற்றவராக ஒளி வீசினார்.
“ராஜராஜ சோழன் சிவாஜி கணேசனாக நடித்த ‘ராஜராஜ சோழன்’ படம் பார்த்தேன்’’ என்று எழுத்தாளர் சுஜாதா எழுதியிருந்தது நேற் றைய ஆவணம். இன்றைய கோலிவுட் சரித்திரம்!
ரசிகர்களை நெருங்கும் ஆற்றல்
‘பூமாலையில் ஓர் மல்லிகை, இங்கு நான்தான் தேன் என்றது’ என்று திரையில் சிவாஜி பாடி ஆடியபோது அன்றைய ரசிகர்கள் அதில் தன் முகம் பார்த்துக்கொண் டார்கள்.
‘மலர்ந்து மலராத பாதி மலர் போல’ என்று சிவாஜி கசிந்துருகிய போது ரசிகர்கள் தங்கள் பாச உணர்ச்சியில் கண்களைத் துடைத் துக்கொண்டார்கள்.
‘என் தேவையை யார் அறிவார்? உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்’ என்று செல்லம்மாவைப் பார்த்து பிரஸ்டீஜ் பத்மநாபன் பாடியபோது, காதில் சிகை முளைத்த ஒரு அக்ரஹாரத்து மனிதர் ஞாபகத்தில் மின்னி மறைந்தார்.
ஓவியங்களில் ‘போர்ட்ரெய்ட்’ என் கிற ஓவிய வகை உண்டு. நவீன ஓவியங் களுடன் பயணிக்கிற ரசிகர்களுக்கு ‘போர்ட்ரேய்ட்’ ஓவியத்தை அவ்வள வாகப் பிடிக்காதுதான். ஆனால், நம் அப்பாவை, நம் அம்மாவை, நம் அண்ணனை, நம் காதலனை நவீன ஓவியங்களில் வரைந்து வைத்துக் கொண்டு ரசிக்க அவ்வளவாகப் பிடிக்காதுதானே!
ஒருமுறை சிவாஜிகணேசனைப் பற்றி கமல்ஹாசன் “சிவாஜி சிங்கம் போன்றவர். அவருக்கு தயிர் சாதத்தை வைத்துச் சாப்பிட சொல்லிவிட்டோம்” என்றார். எவ்வளவு உண்மை அது!
No comments:
Post a Comment