Monday, July 18, 2016

'நர்சிங் கவுன்சலிங் கனவு நிறைவேறுமா?' -அகதிகளின் கண்ணீர் கோரிக்கை

vikatan news

நர்சிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க இருக்கிறது. 'பொறியியல் படிப்புகளுக்கு அனுமதி கொடுத்ததைப் போலவே, மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான கவுன்சலிங்கில் அகதி மாணவர்கள் பங்கேற்பதற்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கின்றனர் இலங்கை அகதிகள்.

தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டுக்கு முன்பு வரையில், இலங்கை அகதிகளின் பிள்ளைகள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவர் நாகராஜின் கோரிக்கை மூலம்தான் அதற்கு விடிவு பிறந்தது. பிளஸ் 2 படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நாகராஜால் கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை. இந்த விவகாரத்தை முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார் வழக்கறிஞர் சிவக்குமார். இதையடுத்து, பொறியியல் விண்ணப்பப் படிவத்தில் இலங்கை அகதிகளுக்கு என தனி இடத்தை உருவாக்கிக் கொடுத்தார் கருணாநிதி. இதனால், நாகராஜைப் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் பொறியியல் கனவுகள் நிறைவேறின. ஆனால், மருத்துவம், நர்சிங், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, இந்த மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இவர்கள் அனைவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு உயர்கல்வி கனவுகளோடு 75-க்கும் மேற்பட்ட அகதி மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சிவக்குமார், " தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் ஒன்றரை லட்சம் இலங்கை அகதிகள் வாழ்கின்றனர். இவர்களின் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் முதல்வர். பிரதமர் மோடியை சந்தித்தபோது, ' இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். பொறியியல் படிப்புகளில் அகதிகள் பங்கேற்க எவ்விதத் தடையுமில்லை. ஆனால், தற்போதுள்ள காலகட்டத்தில் பொறியியல் படிப்பை விடவும், மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட பாடப் பிரிவுகளை எடுத்துப் படித்தால், நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

பொறியியல் படிப்புகளுக்கு சுமார் நான்கு லட்ச ரூபாய் வரை செலவாகிறது. அதற்கேற்ப அவர்களுக்கு வசதியுமில்லை. நர்சிங் பிரிவுகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தாலே, அதன்மூலம் தனியார் கல்விக் கூடங்களில் அவர்கள் சேர்ந்து படிக்க முடியும். தற்போது மருத்துவக் கலந்தாய்வில் அரசுக்கான இடங்கள் பெருமளவில் நிரப்பப்பட்டுவிட்டன. வரும் நாட்களில் நர்சிங் கவுன்சலிங் நடக்க இருக்கிறது. அதற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகிறோம். இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கும் உயர்கல்வித் துறை அமைச்சரின் கவனத்திற்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம். நர்சிங் கலந்தாய்வு தொடங்குவதற்குள், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என முகாம்களில் உள்ள அகதி மாணவர்கள் காத்திருக்கிறார்கள்" என்றார் கவலையோடு.

ஆந்திரா, கேரளாவில் பிளஸ் 2 முடித்துவிட்டு, தமிழக அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேரக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்து முடித்த அகதி மாணவர்கள், அரசின் கண்ணசைவுக்காக காத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...