Friday, July 15, 2016

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டதா?


நான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி?

இமெயில் பயனாளிகள் பலரும் கேட்கக்கூடிய கேள்விதான் இது. இந்தக் கேள்விக்கான தேவையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். மிகவும் முக்கியமான மெயிலை அனுப்பும் நிலையில் அது வாசிக்கப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டலாம். அந்த மெயிலுக்கான பதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இவ்வாறு ஆர்வம் ஏற்படலாம்.

பொதுவாகவே, ஒருவர் படிக்க வேண்டும் என்பதற்காகத்தானே மெனக்கெட்டு மெயில் அனுப்புகிறார். எனவே அது வாசிக்கப்பட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பானதே!

இமெயில் பயனாளிகளில் எத்தனை பேருக்கு இந்தக் கேள்வி எழுகிறது? எப்போது எழுகிறது என்பவை சுவாரஸ்யமான துணைக் கேள்விகள்! இப்போது, இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறியும் வழி இருக்கிறதா? வழி உண்டு. ஆனால் அது உங்கள் இமெயில் சேவையில் இல்லை. தனியே நாட வேண்டும். அதாவது இந்த வசதியை அளிப்பதற்கு என்றே தனியே இணையதளங்கள் இருக்கின்றன.

இத்தகைய சேவைகளைப் பட்டியலிட்டு அவை செயல்படும் விதம் பற்றி விளக்குவதற்கு முன் அடிப்படையான சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறியும் வசதி 'இமெயில் கண்காணிப்பு' என்றே குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் ‘இமெயில் டிராக்கிங்' என்று சொல்லப்படுகிறது. கண்காணிப்பு என்றவுடன் ஒற்று அறிவது அல்லது உளவு பார்ப்பதுடன் ஒப்பிட முடியாது என்றாலும் கூட, இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறிவதற்கான வழிகள் அனைத்தும் ஒருவிதத்தில் கண்காணிப்பு என்று சொல்லக்கூடிய உத்தியையே பின்பற்றுகின்றன. அதனால்தான் இந்தப் பதில் சிக்கலானதாகவும் அமைகிறது.

வழக்கமாக யார் இமெயில் அனுப்பி வைத்தாலும் சரி, பெறுபவர் அதை உடனடியாகப் படித்துப் பார்க்கலாம் அல்லது தாமதமாகப் படிக்கலாம். இல்லை படிக்காமலே 'டெலிட்' செய்துவிடலாம். இது அவரது விருப்பம், உரிமை. அனுப்புகிறவர் இமெயில் பெறும்போதும் இது பொருந்தும்.

பொதுவான இமெயில் அமைப்பில், மெயில் வாசிக்கப்பட்டதா என்பதை உணரும் வழி இல்லை. ‘அவுட்லுக்' போன்ற இமெயில் சேவையில், இதை உறுதி செய்து கொள்வதற்காக, பெறப்பட்டது என்பதைத் தெரிவிக்கும் வசதி இருக்கிறது. ஆனால் அந்த மெயில் படிக்கப்பட்டதா என்பதை அறிய முடியாது.

இந்த இடத்தில்தான் இமெயில் டிராக்கிங் சேவைகள் வருகின்றன. பனானாடேக், பூமாரங், காண்டாக்ட் மன்கி மற்றும் இன்னும் பிற பல சேவைகள் இந்த வசதியை அளிக்கின்றன. குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு மூலம் இந்த வசதியை அளிக்கும் சேவைகளும் இருக்கின்றன.

இந்தச் சேவைகளைப் பயன்படுத்தும் போது அவை ஒருவர் அனுப்பும் இமெயிலில் சின்னதாக ஒரு ஒளிப்படக் குறியீட்டை இடம்பெறச் செய்கின்றன. கண்ணுக்குத் தெரியாத புள்ளியாகக்கூட அது இருக்கலாம். அதில் இருக்கும் எச்.டி.எம்.எல். குறியீடு மூலம் மெயில் பிரிக்கப்பட்டதும், சர்வருக்குத் தகவல் தெரிவிக்கப்படும். இந்தத் தகவல் பயனாளிக்கும் தெரிவிக்கப்படும்.

இதே முறையில் இமெயிலில் அனுப்பும் இணைப்புகள் கிளிக் செய்யப்பட்டனவா என்பதை அறியவும் தனியே ஒரு குறியீடு இணைக்கப்படுகிறது. இந்தச் சேவைகளின் மூலம் இமெயில் எப்போது பிரிக்கப்பட்டது என்பதையும், அதன் இணைப்புகள் கிளிக் செய்யப்பட்டனவா என்பதையும் அறியலாம்.

பொதுவாக மார்க்கெட்டிங் நோக்கில் இமெயில்களைக் கூட்டம், கூட்டமாக அனுப்பி வைப்பவர்கள் தங்கள் முயற்சியின் பலனை அறிய இந்தச் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். தனி நபர்களும்கூட இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். இவற்றில் இலவசச் சேவைகளும் இருக்கின்றன, கட்டணச் சேவைகளும் இருக்கின்றன.

ஆனால் இவையெல்லாம் நூறு சதவீதம் உத்திரவாதமானது என்று சொல்வதற்கில்லை. டிராக்கிங் சேவைகள் அதிகபட்சமாக இமெயில் திறக்கப்பட்ட தகவலைத் தெரிவிக்கின்றன. ஆனால் அது வாசிக்கப்பட்டதன் அடையாளமாக அமையுமா என்பது கேள்விக்குறிதான். மெயில் பெற்றவர் மட்டும்தான் அதை உறுதி செய்ய முடியும்.

இது இமெயில் பயன்படுத்தப்படும் விதத்தின் பக்கவிளைவாக உண்டான பிரச்சினை. இமெயில் அடிப்படையில் இலவசமாக இருப்பதால், அதைத் தகவல் தொடர்புக்காக மட்டும் அல்லாமல், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நோக்கிலும் பயன்படுத்திவருகின்றனர். காசா, பணமா, ஒரு இமெயில்தானே என வர்த்தக நிறுவனங்கள் கூட்டமாக மெயில்களை அனுப்பிவைக்கின்றன.

இவை தவிர மோசடி மெயில்கள், வில்லங்க மெயில்கள், மால்வேர் வாகன மெயில்கள் எனப் பல ரகங்கள் இருக்கின்றன. இவை எல்லாமுமாகச் சேர்ந்து ‘ஸ்பேம்' எனப்படும் குப்பை மெயில்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

இத்தகைய குப்பை மெயில்களில் இருந்து பயனாளிகளுக்குப் பாதுகாப்பு தேவைப்படவே செய்கிறது. இதன் விளைவாகவே மெயில்களைப் படித்துவிட்டோம் எனத் தெரிவிக்கும் வசதி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவை உண்மையான அக்கறையோடு தங்கள் மெயிலுக்கான எதிர்வினையைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

இதற்கான மூன்றாம் தரப்பு தீர்வாகவே மெயில் டிராக்கிங் சேவைகள் அமைகின்றன. ஆனால் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. இது போன்ற சேவைகள் மூலம் மெயில் பிரிக்கப்ப‌ட்ட நேரத்தை அறிவதோடு, அவை பிரிக்கப்பட்ட இடத்தைக்கூட அறியலாம். இது தனியுரிமை மீறலுக்கு வழிவகுக்கலாம்.

மேலும் இணைய விஷமிகள் இதைத் தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே இமெயில் டிராக்கிங் சேவையைப் பயன்படுத்தும் எண்ணம் இருந்தால், அதை மெயில் அனுப்பும்போது தெரிவித்துவிடுவது சிறந்த இணைய அறமாக இருக்கும். அதிலும் வர்த்தக நிறுவனத்தில் இருந்துகொண்டு இதைச் செய்யும் நிலையில் நிச்சயம் இது தொடர்பான நிறுவனக் கொள்கையை அறிந்திருப்பது நல்லது.

பயனாளிகள் நோக்கில் பார்த்தால், தமது இன்பாக்ஸ் தேடி வரும் இமெயிலுக்குள் இப்படி ஒரு வசதி இருப்பதும் அதை அறியாமல் இருப்பதும் திடுக்கிட வைக்கலாம்.

ஆனால் நல்லவேளையாக இதைத் தடுக்கும் வசதியும் உள்ளது. ஜிமெயில் உள்ளிட்ட பெரும்பாலான மெயில் சேவைகளில் செட்டிங் பகுதிக்குச் சென்று , ஒளிப்படம் போன்றவை இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவை தானாகத் திறக்கப் படாமல், ஒளிப்பட இணைப்பைத் திறக்கலாமா என அனுமதி கேட்டு அதன் பிறகே செயல்படும் வகையில் அமைத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024