Tuesday, July 5, 2016

பார்வை: வினுப்பிரியாக்கள் பிழைத்திருப்பதே குற்றமா?

பிருந்தா சீனிவாசன்

THE HINDU TAMIL
கொலை செய்வதைவிடக் கொடூரமானது அமைதிகாப்பது. ஒரு பெண்ணைப் படுகொலை செய்வதற்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை அவளை அவளே படுகொலை செய்துகொள்ளத் தூண்டுவது. அப்படித் தூண்டப்பட்டுத் தன்னையே மாய்த்துக்கொண்டிருக்கிறார் சேலம் வினுப்பிரியா. முகநூலில் பதிவிட்டிருந்த வினுப்பிரியாவின் புகைப்படத்தை யாரோ ஒருவர் மார்ஃபிங் செய்து அநாகரிகமாக வெளியிட, அவமானம் தாங்காமல் தன்னைத் தானே கொலை செய்துகொண்டார் வினுப்பிரியா.

வினுப்பிரியாவின் மரணத்துக்கு அவரது புகைப்படத்தை அநாகரிகமாக வெளியிட்ட நபர் மட்டும்தான் காரணமா? அதுபோன்ற படங்களைத் தேடித்தேடிப் பார்க்கிறவர்களுக்கும், பகிர்கிறவர்களுக்கும் இதில் பங்கு இல்லையா? இப்படி அவமானத்துக்குள்ளாகும் பெண்ணைத் தரக்குறைவாகப் பார்க்கும் சமூகம் இதில் சம்பந்தப்படவில்லையா? பொதுவெளியில் பகிரப்படும் தகவல்களால் ஏற்படுகிற நெருக்கடிகளைச் சமாளிக்கும் மனோதிடத்தை நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தந்திருக்கிறோமா?

இதுபோன்ற சம்பவங்களின்போது குடும்பம் பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறதா? முதலில் பெற்றோருக்குப் போதிய விழிப்புணர்வு இருக்கிறதா? பாதிக்கப்படும் பெண்ணைக் குறித்து இந்தச் சமூகம் முன்வைக்கும் சித்திரம் நாகரிகமானதா? அந்தப் பெண் மீது வீசப்படும் அவதூறுகளும் பழிச்சொற்களும் அவளுடைய நட்பு வட்டத்தையும் உறவு வட்டத்தையும் சிதைக்காதா? மக்களிடையே சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு இருக்கிறதா? சைபர் குற்றப் பிரிவில் தரப்படும் புகார்களுக்கு விரைந்து தீர்வு காணப்படுகிறதா? வினுப்பிரியாவின் மரணம் இப்படிப் பல்வேறு கேள்விகளை விட்டுச் சென்றிருக்கிறது.

வெளிப்படும் வக்கிரம்

உலகமயமாக்கலும், தொழில்நுட்ப வளர்ச்சியும் நல்லது கெட்டது அனைத்தையும் நம் உள்ளங்கைக்குள்ளேயே கொண்டுவந்துவிடுகின்றன. அவற்றில் வக்கிரம் நிறைந்த குப்பைகள் அதிகம். விவசாயம் பொய்த்துப்போன கிராமங்களில்கூட இன்று ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி செழிப்புடன் இருக்கிறது. இணையப் பயன்பாடு அதிகரித்த பின் இணையவழி நடக்கும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது.

ஒவ்வொரு குற்றத்திலும் ஒரு பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவளது எதிர்காலம் சிதைக்கப்படுகிறது. அவளது வாழ்வு மரணத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. பெண்ணின் உடல் புனிதமானதாகவும் பெண்ணின் செயல்கள் அனைத்தும் நம் பண்பாட்டின், பாரம்பரியத்தின் அடையாளமாகவும் பிரகடனப்படுத்தப்படுகிற சமூகத்தில் அந்த உடலை வைத்தே ஒரு பெண்ணைச் சாய்ப்பது ஆணுக்கு எளிதாகிறது. அவளது நடத்தை சார்ந்த குற்றச்சாட்டை வைத்தாலே போதும்,

அவள் முடங்கிப்போக. அப்படியும் முடங்கவில்லையெனில் இருக்கவே இருக்கின்றன அநாகரிகச் செயல்பாடுகள். வெட்டு, கொலை, அமிலவீச்சு ஆகியவற்றைவிட ஒரு பெண்ணின் அந்தரங்கத்தைக் கடைவிரிப்பது ஆண்களுக்கு மிக எளிதாக இருக்கிறது. நம் சமூகச் சூழலில் அது பெண்களுக்கு மரணத்தைவிடக் கொடுமையான தண்டனையாகவும் அமைகிறது.

இணைந்து போராட வேண்டும்

“நம் சமூக அமைப்பில் இருக்கிற குறைபாடு இது” என்கிறார் இளந்தமிழகம் அமைப்பைச் சேர்ந்த பரிமளா. “பஸ்ஸில் ஒருவன் தன்னை உரசினால், அதை வெளியே சொல்லக்கூடத் தயங்குகிற பெண்கள் அதிகம். காரணம் பெண்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள்.

பெண்களுக்கு நம் சமூகத்தில் எந்த உரிமையும் இல்லை. படிக்கும் படிப்பு, அணியும் உடை, வாழ்க்கைத்துணை என்று சகலமும் அடுத்தவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவனை வேண்டாம் என்று நிராகரிக்கக்கூட ஒரு பெண்ணுக்கு நம் சமூகத்தில் உரிமையில்லை” என்று சொல்லும் பரிமளா, பெண்ணின் மீது திணிக்கப்படும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் சமூகக் கட்டுகளையும் எதிர்த்துப் பெண்கள் கேள்வி கேட்க வேண்டும் என்கிறார்.

“இது யாரோ ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் இது நேரலாம். பெண்ணின் அங்கம் கொஞ்சம் வெளிப்பட்டாலே அவளது ஒழுக்கம் கெட்டுவிட்டது என்று சமூகம் வகுத்துவைத்திருக்கிறது. இதற்கு எதிராகப் பெண்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். தவறு செய்கிறவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்” என்கிறார் அவர்.

தற்கொலை தீர்வல்ல

தற்காலிகப் பிரச்சினைக்காக மரணம் என்னும் நிரந்தர முடிவை நோக்கிச் செல்வது தவறு என்று சுட்டிக்காட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவ நிபுணர் லக்ஷ்மி விஜயகுமார். சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனரான இவர், ஒரு பெண் தன் மீது வைக்கும் நம்பிக்கையே தற்கொலை எண்ணத்தைத் தடுக்கும் என்கிறார்.

“ஒவ்வொரு பெண்ணும் தன் மீது மரியாதையும் நம்பிக்கையும் வைக்கணும். நாம் செய்யாத தவறுக்காக, நாம் ஏன் சாக வேண்டும் என்ற தெளிவு வேண்டும். வாழ்வில் எந்தச் சிக்கலும் இல்லாதபோது துணிச்சலுடன் இருப்பதைவிட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும்போதுதான் துணிச்சலுடன் இருக்க வேண்டும்.

வெளியே சொல்ல முடியாத பிரச்சினையாக இருந்தால் நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம். பிறகு பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பகிர்ந்துகொள்கிறபோது பிரச்சினை பாதியாகிவிடும்” என்று சொல்லும் லக்ஷ்மி விஜயகுமார், இது போன்ற குற்றங்கள் அதிகரிக்க ஊடகங்களும் முக்கியக் காரணம் என்கிறார்.

“எந்தத் திரைப்படமாக இருந்தாலும் அதில் பெண் என்பவள், ஆண் அனுபவிக்க வேண்டிய ஒரு பண்டமாகவே காட்சிப்படுத்தப்படுகிறாள். பெண்ணின் விருப்பு, வெறுப்புக்கு அங்கே இடமில்லை. ஒருவனை வேண்டாம் என்று மறுக்கும் உரிமையும் அவளுக்கு இல்லை. ஆரம்பத்தில் மறுக்கிற பெண்ணையும் எப்படியாவது மசியவைப்பதுதான் ஆண்மை என்று கேவலமாகச் சித்தரிக்கப்படுகிறது. இதைப் பார்த்து வளர்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்தச் சிந்தனைதானே இருக்கும்? அனைவருக்கும் சமூகப் பொறுப்பு வேண்டும்” என்று சொல்கிறார் அவர்.

எப்படி வளர்க்கிறோம் பிள்ளைகளை?

சமீபகாலமாக இள வயதுத் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சொல்லும் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன், “பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோபலத்துடன் குழந்தைகளை வளர்க்கிறோமா?” என்று கேட்கிறார்.

“படிப்பு, மதிப்பெண் எல்லாமே இரண்டாம்பட்சம்தான். சிக்கல்களை, பிரச்சினைகளை எதிர்கொள்கிற பக்கு வத்தைச் சொல்லித் தருவதுதான் முக்கியம். ஃபேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி தங்கள் படங்களை மாற்றுகிறவர்களும் எத்தனை லைக்ஸ் விழுந்திருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருப்பவர்களும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். தன் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இப்படிச் சமூக ஊடகங்களின் அங்கீகாரத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்” என்று சொல்லும் பிருந்தா ஜெயராமன், ஒரு பிரச்சினை வெடிக்கும்போது அந்த நேரத்தில் குரல்கொடுத்துவிட்டு அடங்கிப் போவதைவிட அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்வரை களத்தில் நிற்க வேண்டும் என்கிறார்.

“புகார் கொடுத்ததுமே விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம். ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பும் கடமையும் அவசியம். சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் அவற்றின் முடிவு குறித்து காவல்துறை சமூகப் பொறுப்புடன் தானே முன்வந்து அறிவித்தால் பொதுமக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்” என்கிறார் பிருந்தா ஜெயராமன்.

வினுப்பிரியாவின் தற்கொலை மட்டுமல்ல, சுவாதியின் படுகொலை, ராயப்பேட்டையைச் சேர்ந்த மூன்று பெண்களின் கொலை என்று சமூகத்தில் நடக்கிற கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிற பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் ஆர்வமாக இருக்கிறோமா? குறைந்தபட்சம் நம் கண்ணெதிரில் நடக்கிற குற்றத்தையாவது தட்டிக் கேட்டிருக்கிறோமா? ஒரு பெண்ணைப் பற்றிய அவதூறு செய்தி வந்ததும் அதை அடுத்தவருக்கு ஃபார்வேர்ட் செய்யாமல் இருந்திருக்கிறோமா?

குற்றத்தைத் தடுக்க முடியவில்லை என்றால் அதை காவல்துறைக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோமா? பெண்களை சக மனுஷியாக, உயிரும் உணர்வும் கொண்ட ஒரு பிறவியாக நினைக்கவாவது முயற்சித்திருக்கிறோமா? நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்குப் பெண்களை மதிக்கச் சொல்லித் தந்திருக்கிறோமா? இவற்றுக்கான பதில்களில்தான் வினுப்பிரியாக்கள் பிழைத்திருப்பதும் அடங்கியிருக்கிறது.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...