THE HINDU
குற்றவாளிக்கு வழங்கப்படும் ஆயுள் தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவித்தால் போதுமானது. அதை அவர் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டியது இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சில வழக்குகளில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையோ அல்லது அதற்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனையோ வழங்கப்படுவது உண்டு. அவ்வாறாக வழங்கப்படும் ஆயுள் தண்டனைகளை குற்றவாளி எதிர்கொள்ளும் முறையை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையில் நீதிபதி எப்.எம்.ஐ.கலிபுல்லா, ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஒரு வழக்கிலோ அல்லது பல்வேறு வழக்குகளிலோ தொடர்புடைய குற்றவாளி ஒருவர், அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளை எப்படி அனுபவிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலானது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "விசாரணை நீதிமன்றங்களோ அல்லது உயர் நீதிமன்றங்களோ குற்றத்துக்கான தண்டனைக் காலத்துடன் ஆயுள் தண்டனையையும் சேர்த்து விதித்திருந்தால், அந்த தண்டனைகளை ஏக காலத்தில் குற்றவாளி அனுபவித்தால் போதுமானது எனத் தீர்ப்பளித்தனர்.
அதாவது, ஒருவருக்கு ஒரு வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், அத்துடன் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டால், அவர் இரண்டையும் ஒரே காலகட்டத்தில் அனுபவிப்பார். முதலில் 5 ஆண்டு சிறைத் தண்டனை; பின்னர் ஆயுள் தண்டனை எனப் பிரித்து அனுபவிக்கத் தேவையில்லை.
No comments:
Post a Comment