Tuesday, July 12, 2016

குறள் இனிது: மறந்து போனால்... நற்பெயரும் போகும்!

THE HINDU TAMIL

பொச்சாப்பு எனும் வார்த்தைக்குப் பொருள் சொல்லுங்க பார்ப்போம். தமிழ் வார்த்தைதான். என்ன, இப்ப அதிகம் உபயோகப்படுத்துவது இல்லை.கவலைப்படாதீங்க. நான் கேட்ட பலபேருக்கும் இது தெரியலை!

அது என்னன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னால், procrastination எனும் ஆங்கில வார்த்தைக்காவது பொருள் சொல்லுங்களேன். இதுவும் சிலருக்குக் கடினமாக இருக்குதோ?

இது வேறு ஒன்றும் இல்லைங்க. எந்த வேலையைக் கொடுத்தாலும் உடனே செய்யாமல் அப்புறம் பார்த்துக்கலாம் என்று தள்ளிப்போடுவது.

என்னுடன் சிலகாலத்துக்கு முன்பு ஒரு நண்பர் வங்கியில் அதிகாரியாகப் பணி செய்து வந்தார். நமது வழக்கப்படி அவரை குமார் என அழைப்போம்.

குமாரின் பிரச்சினை என்னவென்றால் எந்த வேலையைக் கொடுத்தாலும் உடனே சுறுசுறுப்பாகத் தொடங்க மாட்டார்.

நல்ல பெரிய வாடிக்கையாளர்கள் 50 பேரைத் தேர்வு செய்து வைப்புநிதி கேட்டுக் கடிதம் எழுதுவோம், அதில் 10 பேரை நேரிலும் சந்திப்போம் என முடிவு செய்து இவரிடம் பணியை ஒப்படைத்தால் வரும் சனிக்கிழமை ஆரம்பிப்போம் என்பார்.

சனிக்கிழமை அன்று குமார் காணாமல் போய்விடுவார். கண்டுபிடித்துக் கேட்டால் அவருக்கு எல்லாவற்றையும் முதலிலிருந்து சொல்லி ஞாபகப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

`ஒரு எளிய வேலை கடினமாகத் தெரிய வேண்டுமானால் அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வாருங்கள்' என்றார் ஒலின் மில்லர்!

குமாரை நம்பி எதிலும் இறங்கி விட முடியாது. காலை 6.30 மணிக்கு விமான நிலையம் போய் மேலதிகாரியை அழைத்து வாப்பா என்றால் சரி என்பார். ஆனால் முன்னதாகவே சென்று காத்துக் கொண்டிருக்க மாட்டார். போகிறேன் என்று சொன்னோமே, தவறாமல் ஞாபகப்படுத்தத் தேவையில்லாமல் போய் விட வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி இருக்காது.

இவர் நேரத்துக்கு போகாமல், பின்னர் எங்கள் மேல் கோபத்தைக் காட்டியது தனிக்கதை! 'நீங்கள் தாமதிக்கலாம், நேரம் தாமதிக்காதே' என்று பெஞ்சமின் பிராங்க்ளின் சொன்னது எவ்வளவு உண்மை!

குமாருக்கு அறிவோ ஆற்றலோ குறைவல்ல. ஆனால் பணியில் முனைப்பு (seriousness) கிடையாது. இதனால் அவரிடம் படிப்பும் பலவருட அனுபவமும் இருந்தும் யாரும் எந்த வேலையையும் நம்பிக் கொடுக்க மாட்டார்கள்.

எந்த ஒரு பணியாளருக்கும், ஏன் எந்த ஒரு மனிதருக்கும் தேவை கடமை தவறாமை. அத்துடன் காரியத்தைத் தள்ளிப் போடாத குணம். அவர் செய்கிறேன் என்று சொல்லிவிட்டார் என்றால் செய்துவிடுவார் என்று எண்ணும்படியான நம்பகத்தன்மை.

மனிதவள அறிஞர்களைக் கேட்டால் ‘மறதி என்று ஒன்றும் இல்லை. கவனக்குறைவைத் தான் அப்படிச் சொல்லிச் சிலர் சமாளிக்கிறார்கள்' என்கிறார்கள்.

தினமும் பிச்சை எடுத்துச் சாப்பிடுபவனுக்கு மந்த புத்தி வந்துவிடும். அதைப் போலவே கடமையை மறப்பவர்களுக்கு, தாம் மேற்கொண்ட பணியை முனைப்புடன் செய்யாமல் தள்ளிப் போடும் பொச்சாப்புக் குணம் உடையவர்களுக்குப் பெயர் கெட்டுப் போகும் என்கிறார் வள்ளுவர்.

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்பக்கொன்று ஆங்கு (குறள் 532)

somaiah.veerappan@gmail.com

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...