ம.சுசித்ரா
சார்ட்டட் அக்கவுண்டன்ட்டாக இருக்கும் ஒருவர் நமக்கு அறிமுகமானாலேயே ‘அடேங்கப்பா பெரிய அறிவாளியாக இருப்பாரோ’ என்கிற மைண்ட் வாய்ஸ், உடனடியாக நம்மில் பலரிடம் ஒலிக்கும்!
இந்திய அளவில் கல்வி அறிவைச் சோதிக்கும் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாக சார்ட்டட் அக்கவுண்டன்ஸி (Chartered Accountancy Exam) தேர்வு கருதப்படுகிறது. முதல் முயற்சியிலேயே ஒருவர் இத்தேர்வில் வெற்றிபெறுவது, இன்றும் அதிசயமாகக் கருதப்படுகிறது. ஆனால் சி.ஏ தேர்வில் முதல்முறையிலேயே வெற்றிபெற்று லாவகமாக சாதித்துக்காட்டிவிட்டார் ராம். சேலத்தை சேர்ந்த ராம் 2016-ம் ஆண்டுக்கான சி.ஏ. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 20 வயதே ஆன இவர் அகில இந்திய அளவில் நடத்தப்படும் சி.ஏ. தேர்வில் 800-க்கு 613 மதிப்பெண்கள் பெற்று தமிழர்களின் பெருமையாக மாறியுள்ளார்.
கற்றல் கைகொடுக்கும்
“எதில் சவால் அதிகமோ அதைச் செய்துபார்க்க எனக்கு எப்போதுமே பிடிக்கும். அப்படித்தான் சி.ஏ. தேர்வை எழுத முடிவெடுத்தேன்” என்று வெற்றியின் உற்சாகத்தோடு பேசுகிறார் ராம். இவர் ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே அப்போது சென்னையில் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட்டாக வேலைபார்த்த தன்னுடைய அண்ணன் ஹரிஷ் குமாரால் சி.ஏ. பக்கம் ஈர்க்கப்பட்டதாகச் சொல்கிறார். இது மிகவும் கடினமான படிப்பு என்றுதான் எனக்கு ஆரம்பத்தில் தோன்றியது. அதுவே எனக்கு சவாலாகவும் மாறியது” என்கிறார். இத்துறையில் தன்னிச்சையாகவும் வேலைபார்க்கலாம் அல்லது ஒரு நிறுவனத்திலும் பணி புரியலாம் என்கிற இரட்டை அனுகூலம் இருப்பதால் ராமுக்கு சி.ஏ. கனவு வளர ஆரம்பித்தது.
இவரது தந்தை ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை ஊழியர். தாய் பெரம்பலூரில் நூலகராகப் பணிபுரிந்து வருகிறார். ஆறாவது படிக்கும்போதே ராமுக்கு சார்ட்டட் அக்கவுண்டன்ஸி மீது ஆர்வம் இருப்பதைக் கண்டுபிடித்த அவருடைய அம்மா புதுமையான முறையில் அவரைத் தயார்படுத்தியிருக்கிறார். “நம்முடைய இலக்கு ஒன்றாக இருந்தாலும் பல விஷயங்களைக் கத்துக்கணும்; அது புத்தியைக் கூர்மைப்படுத்த உதவும்னு அம்மா எப்பவுமே என்கிட்ட சொல்லுவாங்க. அதனால் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளையும், தமிழ், ஆங்கிலம் டைப் ரைட்டிங்கும் கத்துக்கிட்டேன்” என்கிறார் ராம். இத்தனையும் கற்றுக்கொள்வதால் நேரடியான பயன்பாடு இருக்கிறதா இல்லையா என்பதை யோசிக்காமல் கற்றலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்ததன் பலன் இன்று புரிகிறது என்கிறார். ஏதோவிதத்தில் தட்டச்சுகூட சி.ஏ.வுக்கு உதவியிருக்கிறது என உறுதியாகச் சொல்கிறார்.
பெற்றோருடன் ஸ்ரீராம்
நட்புக்குக் கிடைத்த வெற்றி
மிகவும் சீரியஸாகப் பேசுகிறாரே என நினைத்தால் நண்பர் கூட்டம், மாணவர் குழுத் தலைவர், மாணவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனக் கலகலப்பான இளைஞராகவும் இருக்கிறார். சொல்லப்போனால், ராமின் பால்ய நண்பர் ஷுபம் பண்டாரியும் இதே சி.ஏ. தேர்வில் தேர்வாகியுள்ளார். “மூன்றாம் வகுப்புப் படிக்கும்போதிலிருந்து நானும் பண்டாரியும் நெருங்கிய நண்பர்கள். சி.ஏ.தான் எங்கள் இருவருடைய கனவு. சேர்ந்து, படித்து, விளையாடி, வளர்ந்தோம். நான் முதலிடம் பிடித்திருக்கிறேன்; அவன் பட்டியலில் வேறொரு இடத்தைப் பிடித்திருக்கிறான். அவ்வளவுதான் வித்தியாசம்! நிச்சயமாக எங்களுடைய வெற்றியின் ரகசியத்தில் நட்புக்கும் முக்கிய பங்குண்டு” எனப் புன்னகைக்கிறார்.
சி.ஆர். சார்ட்டட் அக்கவுண்டன்ட் சி.நரேந்திரனிடம் ஆர்ட்டிக்கல் ஷிப் (article ship) என்கிற மூன்றாண்டு பயிற்சியும், சென்னை பிரைம் அகாடமியில் சில காலம் பெற்ற பிரத்தியேகப் பயிற்சியும் தேர்வில் வெல்ல உதவின என்கிறார். தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்ட்டட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா பரிந்துரைக்கும் புத்தகங்களைத்தான் முழுவதுமாக வாசித்திருக்கிறார் ராம். “வழக்கமாக சி.ஏ. படிப்புக்குரிய புத்தகங்களைத்தான் நானும் படித்தேன். அது 40 சதவீதம்தான் உதவும். மற்றபடி மூன்றாண்டுகள் ஒரு ஆடிட்டரிடம் வேலைபார்த்தபோதுதான் செயல்முறையில் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். தேர்வு எழுதும்போது அதை சரியாக நடைமுறைப்படுத்தினேன்” என்கிறார்.
No comments:
Post a Comment