வாங்க, 100 வருஷம் வாழலாம்... வாழ்நாளில் டாக்டரை 'சந்தித்திராத' முதியவர்!
DINAMALAR
நோய் நோடியின்றி ஆரோக்கியமாக நுாறாண்டு வாழ எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், அந்த பாக்கியம் அவ்வளவு எளிதாக வாய்த்துவிடுவதில்லை. தவறான உணவுப் பழக்க
வழக்கம், வாழ்வியல் சூழல், புகையிலை வஸ்து மற்றும் போதை பழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அறுபதைத் தொடாமலே ஆயுசு முடிந்து விடுகிறது பலருக்கு.
சாப்பாட்டு தட்டில் பரிமாறப்படும், 'பொரியல் குவியல்' அளவுக்கு இணையாக, மருந்து மாத்திரை உட்கொண்டால்தான் உயிர்வாழவே முடியும்
என்கிற அபாய நிலை சிலருக்கு.'எப்படி இருக்கீங்க...' எனக்கேட்டால், 'ஏதோ, இருக்கிேறனே...' என, இளமைக் காலத்திலேயே புலம்புவோர் அதிகம். ஐம்பதை, அறுபது வயதைக் கடந்தோரை கேட்டால், சிலர், ''இனி இங்கு என்ன கிடக்கு... சாவுதான்
வரமாட்டேங்குது...' என, 'சங்கு ஊத' ஆட்களை அழைக்காத குறையாக
சலித்துக்கொள்வதும் உண்டு.இவர்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான மனிதர். 'எப்படி இருக்கீங்க...' எனக்கேட்டால், 97 வயதிலும், 'எனக்கு என்னய்யா... ராஜாவாட்டம் ஜம்முன்னு இருக்கேன்'னு, முஷ்டி
யை உயர்த்துகிறார் சிதம்பரம். யாருடைய துணையுமின்றி தனி ஆளாக நாடு கடந்தும்
விமானத்தில் பறக்கிறார்.
அதுமட்டுமின்றி, 'மருத்துவமனைக்கே செல்லாமல் ஆயுசுக்கும் வாழ முடியும்' என, நம்பிக்கையூட்டுகிறார். இவர், நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகேயுள்ள உப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.
கடந்த, 1919, ஏப்., 19ல், இலங்கையிலுள்ள தொட்லாக்கல்ல தோட்டத்தில், கதிர்வேல் - ஆராயிக்கு பிறந்தார். இவரின் சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட வறுமையிலும் தாயார் குடும்பத்தை பராமரித்தார்.
பள்ளி செல்ல வாய்ப்பு கிடைக்காத போதும், அங்கிருந்த ஆங்கிலேயர்களுடன் பழகினார். தமிழ், ஆங்கிலம் பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டார். மனக்கணக்கும் சர்வ சாதாரணமாக வந்ததால், அதே பகுதியில் உள்ள எஸ்டேட்டில், 'கணக்கு' பிள்ளை' ஆனார்.
வேலாயி என்பவரை மணமுடித்து, குழந்தையும் பிறந்தது. தாயகம் திரும்பும் ஆசை துளிர்த்தது. தனது தாயின் இறப்புக்குபின், கனத்த இதயத்துடன் பணிக்கு விடை கொடுத்து விட்டு தமிழகம் திரும்பினார்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் தேவாலாவில், தேயிலைத் தோட்டம், உப்பட்டியில் வீட்டை வாங்கி குடியேறி, தேயிலைத் தோட்ட பணியில் ஈடுபட்டார்.
இன்று, 97 வயதை எட்டியும், அயராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குமுன், இலங்கைக்கு தனியாக சென்று வந்துள்ளார்.
அங்கு, இவரை வரவேற்ற தோட்ட நிர்வாகத்தினர், நினைவுப் பரிசு வழங்கி, கதிர்காமம் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர். இவரது மகன், ராஜமாணிக்கம், தனியார் எஸ்டேட்டியில் பணிபுரிந்து ஓய்வு
பெற்றுள்ளார். தற்போது, கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் வசித்து வருகிறார்.ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து சிதம்பரம் கூறியதாவது:
என் காலை உணவு பெரும்பாலும் பழைய சாதம், வெங்காயம்தான். அது, உடலுக்கு தெம்பு தருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, மாமிசம் எடுத்துக் கொள்வேன்.
தினசரி கடைக்கு சென்று பொருள் வாங்கி, வீட்டு வேலை செய்கிறேன். மனைவியின் மறைவு, எனக்கு பேரிழப்பு. மது, புகையிலை என, எவ்வித பழக்கமும் எனக்கில்லை. நான் ஆரோக்கியமாக இருக்க, இதுவும் ஒரு காரணம்.
எப்போதாவது காய்ச்சல் வந்தால், 'முடக்கத்தான் இலை' ரசம் உண்டு, சரி செய்துகொள்வேன்; இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை. எனது தாத்தா, 114 வயது வரை வாழ்ந்தார். அவரது வாழ்க்கை முறையை நானும் பின்பற்றுகிறேன். போதை பழக்கமின்றி வாழ்ந்தால், யாரும் நுாறாண்டு என்ன, அதைக் கடந்தும் ஆரோக்கியமாக வாழலாம், என சிதம்பரம் கூறினார்.
நல்லதொரு வாழ்க்கை நமக்கும் வாய்க்க... மருத்துவமனை நாடாத ஆரோக்கியம் கிடைக்க... தவறான பழக்கவழக்கம், வாழ்க்கை முறை
களுக்கு விடைகொடுத்தால், இவரைப்போன்று நமக்கும் வாய்க்கும், 100ஐ தொடும் வாய்ப்பு!
No comments:
Post a Comment