Wednesday, July 20, 2016

விவாதம்: பயணங்களும் பாதுகாப்பானவை இல்லையா? பிருந்தா சீனிவாசன்


விவாதம்: பயணங்களும் பாதுகாப்பானவை இல்லையா?
பிருந்தா சீனிவாசன்


பொதுப் போக்குவரத்துகளில் எதிர்கொள்ளும் சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல்தான் பலரும் தனியார் நிறுவனங்களின் சேவையை நாடுகின்றனர். வாடகை கார், ப்ரீபெய்ட் டாக்ஸி, ஆட்டோ போன்றவற்றில் பெண்களுக்குக் குறைந்தபட்ச பாதுகாப்பாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்கின்றன அடிக்கடி கேள்விப்படுகிற தகாத நிகழ்வுகள். சமீபத்திய உதாரணம் சென்னையைச் சேர்ந்த விலாசினி ரமணிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்.

இரவு நேரத்தில் தனியார் நிறுவனத்தின் காரில் தனியாகப் பயணம் செய்திருக்கிறார் விலாசினி. ஓட்டுநர் காரை அதிவேகத்தில் இயக்க, கொஞ்சம் பொறுமையாக ஓட்டச் சொல்லியிருக்கிறார். அதற்குத் தகாத வார்த்தைகளில் பேசியதோடு நில்லாமல், பாதி வழியில் இறக்கியும் விட்டுவிட்டார் ஓட்டுநர். வேறொரு ஆட்டோ பிடித்து பயணித்தவரைப் பின்தொடர்ந்து வந்து அச்சுறுத்தியிருக்கிறார்.

தன் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற பயத்துக்கு நடுவே காவல்துறையின் உதவியை அவர் நாடியிருக்கிறார். அங்கேயும் அவருக்கு அலைக்கழிப்புதான் மிச்சம். இது எங்கள் எல்லைக்குள் வரவில்லை என்று மாற்றி மாற்றி இரண்டு காவல்நிலையங்களுக்கு அலையவைத்திருக்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நாளிதழ் மூலமாகவும் இந்தப் பிரச்சினை வெளியே தெரிந்தபிறகுதான் காவல்துறை புகாரை ஏற்றிருக்கிறது.

இதே போன்றதொரு சம்பவம் தன் மனைவிக்கு நேர்ந்ததாகச் சொல்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர். பயணம் இணக்கமாக இல்லாததால் பதிவுசெய்த வண்டியை ரத்து செய்ததற்காகத் தன் மனைவி தகாத வார்த்தைகளால் தாக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது பயணங்களும் பெண்களுக்குப் பாதுகாப்பானவை இல்லையா என்ற கேள்விதான் முதலில் எழுகிறது.

நீ ஏன் தனியாகப் பயணம் செய்தாய்? இரவு நேரப் பயணம் தேவையா? துணைக்கு யாரையாவது அழைத்துச் சென்றிருக்கலாமே? ஓட்டுநர் என்ன பேசினாலும் அமைதியாக இருக்க வேண்டியதுதானே? ஏன் எதிர்த்துப் பேசி ஒரு ஆணின் கோபத்தைக் கிளற வேண்டும்? இப்படிப் பெண்களைக் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, இதற்கான தீர்வு என்ன என்பதை நோக்கி நகர்வதில்தான் பெண்களின் பாதுகாப்பு அடங்கியிருக்கிறது. காரணம், மேலே குறிப்பிடப்பட்ட கேள்விகள் எழ வாய்ப்பில்லாத பயணங்களின் போது பெண்கள் மிகப் பாதுகாப்பாக பயணிக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.

இப்படிப் பயணங்களின்போது எதிர்பாராமல் நடக்கிற அச்சுறுத்தல்களையும் வன்முறைகளையும் எப்படிக் கையாள்வது என்ற பதற்றமும் அச்சமும் எல்லாப் பெண்களுக்கும் ஏற்படுவது இயல்பு.

நிறுவனங்களின் பங்கு என்ன?

தங்கள் நிறுவனத்தின் வாகனங்களில் பயணம் செய்கிற பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கடமை இல்லையா? தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்தில் ஆபத்துக் காலங்களில் அழைப்பதற்கென்று ஏதாவது தனிப்பட்ட பொத்தான் வசதியோ, எச்சரிக்கை மணியோ வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்க வேண்டாமா?

இக்கட்டான நேரங்களில் பெண்கள் காவல் துறையை நாடும்போது காவல்துறையின் அணுகுமுறை எல்லா நேரங்களிலும் அனுசரணையாக இருப்பதில்லை. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல்களின்போதுகூடப் புகாரை ஏற்றுக்கொள்வதிலோ அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதிலோ காவல் துறை சுணக்கம் காட்டினால் பெண்கள் எங்கே செல்வது? காவல் துறையின் விரைவான செயல்பாடுதானே அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்?

பயிற்சி தேவை

பெண்களிடம் கண்ணியக் குறைவாக நடந்துகொள்கிற ஓட்டுநர் தண்டனை பெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவரைப் போல இன்னும் சில நூறு ஓட்டுநர்கள் உருவாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? வாடகை கார் ஓட்டுநர்களுக்கு இங்கே போதுமான பயிற்சி அளிக்கப்படுகிறதா? பயணிகளிடம், அதுவும் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது ஓட்டுநர் உரிமத்துக்கு இணையான முக்கிய அம்சம் அல்லவா? பெண் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து ஓட்டுநர்களுக்கு வழிகாட்டுதலோ ஆலோசனையோ வழங்கப்படுகிறதா? நிறுவனங்களின் சார்பில் நடக்கும் போக்குவரத்துச் சேவையிலேயே இந்த நிலை என்றால் தனிநபர்களின் வாடகை வண்டிகளில் கிடைக்கக்கூடிய பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?

இப்படிப்பட்ட கேள்விகளுக் கிடையேதான் பெண்களின் பாதுகாப்புக்கான விடை பொதிந்திருக்கிறது.

நீங்க என்ன சொல்றீங்க?

வாசகர்களே, பயணங்களின் போது சந்திக்கிற அச்சுறுத்தல்களைப் பெண்கள் எப்படிக் கையாள வேண்டும்? பாதுகாப்பான பயணத்துக்கு வழி என்ன? இந்தப் பிரச்சினையில் உங்கள் அனுபவம் என்ன? போக்குவரத்துச் சேவை நிறுவனங்களின் பங்கு, காவல் துறையின் கடமை பற்றியெல்லாம் உங்கள் கருத்து என்ன? பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024