உத்தரபிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேதி மட்டும்தான் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உத்தரபிரதேச அரசியல்தான் இந்திய அரசியலின் மையம் என்பதால், இப்போதே அங்கு தேர்தல் களைக் கட்டத் தொடங்கி விட்டது. 'நான்தான் அதைத் தொடங்கினேன், இதைத் தொடங்கினேன்' என்று இப்பவே உ.பி அரசியல்வாதிகள் அடிக்கும் சுயதம்பட்டங்களை தாங்க முடியாமல் மக்கள் அல்லலோப்படுகின்றனர்.
அரசியல்வாதிகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த போட்டியால், ஒரே ரயில் சேவையை 4 அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் தொடங்கி வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அப்படி 4 முறைத் தொடங்கி வைக்கப்பட்ட ரயில் என்ற பெருமையை, பிரயாக் நகரில் இருந்து கான்பூர் செல்லும் பிரயாக் எக்ஸ்பிரஸ் ரயில் பெற்றுள்ளது. இந்த ரயிலை 4 அரசியல்வாதிகளுமே பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளனர்.
பிரயாக் ஸ்டேசனில் மாலை 4.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், இரவு 9.50 மணிக்கு கான்பூர் செல்லும். மொத்தம் 208 கி.மீ தொலைவு பயணிக்கும் இந்த ரயில், 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அந்த ரயில் செல்லும் பகுதியில் உள்ள எம்.பிக்கள் எல்லோரும், அந்த ரயிலை தொடங்கி வைத்த பெருமையை பெற்றுள்ளனர்.
இந்த ரயிலை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவரும் கான்பூர் எம்.பியுமான முரளி மனோகர் ஜோஷி. கடந்த ஜுலை 4 ம் தேதி, இந்த ரயிலுக்கு முரளி மனோகர் ஜோஷி பச்சைக்கொடிக் காட்ட, பிரயாக்கில் இருந்து கான்பூர் நோக்கி புறப்பட்டது. 'முரளி மனோகர் ஜோஷி பிரயாக் - கான்பூர் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்' என பத்திரிகைகளில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன உன்னாவ் தொகுதி எம்.பி சாக்ஷி மகராஜ், தன் பங்குக்கு அந்த ரயில் சேவையைத் தொடங்கி வைக்க களத்தில் இறங்கினார். அந்தப் பெருமையை தனது நண்பருக்கு கொடுக்க விரும்பி, ஜுலை 5 ம் தேதி தனது நண்பர் பிரியங் ஆர்யாவை ரயிலுக்கு பச்சைக் கொடி காட்ட வைத்து பெருமைப்பட்டுக் கொண்டார். .
இந்த பட்டியலில் அடுத்து வருபவர் கவுசாம்பி தொகுதி பரதிய ஜனதா கட்சியின் எம்.பி வினோத் சோனகர். இவர் லெலோபால்குஞ்ச் ரயில் நிலையத்தில், மணப்பெண் போல ரயிலை அலங்கரித்து பச்சைக் கொடி காட்டி பெருமைப்பட்டார். நான்காவதாக உத்தரபிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சேசல் பிரசாத் மவுரியா, இந்த ரயிலுக்கு பச்சைக் கொடி காட்டினார்.
இந்த ரயில் சேவையைத் தொடங்கி வைத்த 4 பேருமே, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள்தான். ஒரே கட்சிக்குள் இவ்வளவு உள்குத்தா என மாயாவதி கட்சியினர் சிரிக்கின்றனர்.
No comments:
Post a Comment