Thursday, July 21, 2016

குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி தாளாளர்!

பிளஸ் 2 தேர்வும் 'சென்டம்' ரகசியமும்.... குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி தாளாளர்!


பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வு பணிகளை கண்காணிக்கவும் சென்னையில் இருந்து இயக்குநர்கள், இணை இயக்குநர்களை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைப்பது வழக்கம்.

நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பிரபலமான தனியார் பள்ளிகளில், மாணவர்கள் 'மாஸ் காப்பியிங்கில்' ஈடுபடுவதாக நீண்ட நாளாகக் குற்றச்சாட்டு உண்டு. இதற்கிடையே ஈரோட்டில் பிரபலமான ஆதர்ஷ் மற்றும் ஐடியல் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 'பிட்' அடிப்பதாக அப்போதைய இணை இயக்குநரும் தற்போதைய மெட்ரிக் பள்ளி இயக்குநருமான கருப்பசாமிக்கு தகவல் கிடைத்தது.

ஈரோட்டில் உள்ள அந்த பிரபலமான பள்ளிக்கு இணை இயக்குநர் வரும் தகவல் கிடைத்ததும் மாணவர்களுக்கு சிக்னல் கொடுத்தனர், அங்குத் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள். அந்த பள்ளியில் இரு மாடிக்கட்டடங்களிலும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அப்போது அவசர அவசரமாக மாணவர்கள் ஜன்னல் வழியாக பிட்டுகளை தூக்கி எறிந்தனர். அந்த பிட்டுகள் பள்ளி வளாகத்தில் நுழைந்த இணை இயக்குநர் கருப்பசாமி தலை மீதே விழுந்ததுதான் வேடிக்கை.

தன் மீது விழுந்த பிட்டு பேப்பர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அந்த இரு பிரபலமான தனியார் பள்ளிகளில் 'மாஸ் காப்பியிங்' நடப்பதாக அரசுத் தேர்வுத்துறைக்கு அறிக்கை அனுப்பியதோடு தனது வேலையை முடித்துக்கொண்டார்.

இது ஒரு புறம் இருக்க, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இனிதே தொடங்கியது. திருச்சி லால்குடியில் ஒரு பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது வேதியியல், இயற்பியல், உயிரியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள்களில், குறிப்பிட்ட 5 மாணவர்கள் 200க்கு 200 மார்க் வாங்கியிருந்தனர். அந்த குறிப்பிட்ட 5 மாணவர்களின் விடைத்தாள்களில் இருந்த கையெழுத்து ஒரே மாதிரியாக இருந்ததை விடைத்தாளை திருத்திய ஆசிரியர் கண்டுபிடித்தபோதுதான் 'சென்டம்' ரகசியம் அம்பலமானது. அதாவது ஒரே நபரே 5 மாணவர்களுக்கும் விடைத்தாள்களில் விடைகளை எழுதியிருக்கிறார்.

இதில் ஆச்சர்யமான விஷயம்.. ஈரோட்டில் இணை இயக்குநர் கருப்பசாமி தலை மீது பிட்டுகளை வீசிய அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் விடைத்தாள்கள்தான் அது என்று தெரியவந்தது. எங்கேயோ உதைக்கிறது, என்று கருதிய அரசு தேர்வுத்துறை, அந்த விடைத்தாள்களை, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பிய போது, அவை ஒரே ஆளால் எழுதப்பட்டு, அந்த 5 மாணவர்களின் விடைத்தாள்களோடு இணைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த குறிப்பிட்ட 5 மாணவர்களை வரவழைத்து தனித்தனியாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, அது தங்களது கையெழுத்து இல்லை, என்று ஒத்துக் கொண்டனர்.



இது தொடர்பாக, இப்போது ஈரோட்டில் பிரபலமான அந்த இரு தனியார் பள்ளிகளில் தேர்வுப்பணியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி தலைமையாசிரியர் நசீர் உட்பட 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஈரோட்டின் பிரபலமான அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ், பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கட் ஆப் மார்க்கிலும் முதலிடம் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். இதே பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் 'சென்டம்' பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில்‘மெரிட்டில்’ சேர்ந்துள்ளனர்.

இப்போது அந்தப் பள்ளி மாணவர்களின் 'சென்ட்ம்' மார்க் மீது மற்றவர்களுக்கு சந்தேகக் கறை படிய தொடங்கியுள்ளது. இது தொடர்பாக விரிவாக விகடன்.டாட் காமில் நேற்று (புதன்) செய்தி வெளியானது. இது தொடர்பாக விளக்கம் கேட்க, ஐடியல் பள்ளி தாளாளர் சிவலிங்கத்தைத் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததாகவும் இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க முன்வந்தால் அதனை பிரசுரிக்க தயாராக உள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் நம்மை தொடர்பு கொண்டு பேசிய ஈரோடு ஐடியல் மற்றும் ஆதர்ஷ் பள்ளியின் தாளாளரான சிவலிங்கம், "எங்கள் பள்ளியில் எந்தத் தவறும் நடக்கவில்லை. மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடவில்லை. இப்போது எங்கள் மீது திட்டமிட்டே அதிகாரிகள் பழி சுமத்துகின்றனர். கடந்த 35 ஆண்டுகளாக கல்விப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. வீண் வதந்திகளைப் பெற்றோர்கள் நம்ப வேண்டாம். இதற்கு மேல் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

- எம்.கார்த்தி

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...