Thursday, July 14, 2016

ரயிலில் கூவிக் கூவி குழந்தையை விற்க முயன்ற கொடுமை


VIKATAN 

ரயிலில் கூவிக் கூவி குழந்தையை விற்க முயன்ற கொடுமை! -போலீஸ் விசாரணையில் 2 பெண்கள்

கோவை: ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரயிலில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கூவிக் கூவி விற்க முயன்ற இரண்டு பெண்களை பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோட்டில் இருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் பயணிகள் ரயிலில், இரண்டு பெண்கள் கைக்குழந்தையுடன் பயணித்துள்ளனர். அப்போது, சக பயணிகளிடம் யாருக்காவது குழந்தை வேண்டுமா என அவர்கள் கேட்டு குழந்தையை விற்க முயன்றுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த பயணிகள், குழந்தை உதவி மையத்துக்கு இது பற்றி புகார் அளித்திருக்கின்றனர்.

பயணிகளின் புகாரின் அடிப்படையில், கோவை ரயில் நிலையத்தில் வைத்து, குழந்தையை விற்க முயன்ற இரண்டு பெண்களையும் குழந்தையுடன் கோவை ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்து இருக்கின்றனர். ரயில்வே போலீசாரின் விசாரணையில், பிடிபட்டவர்கள் ஈரோடு, வாடிப்பட்டியைச் சேர்ந்த ராணி என்பதும், சேலத்தைச் சேர்ந்த சாந்தி என்பதும் தெரியவந்திருக்கிறது.

ராணி திருச்சூரில் வேலை பார்த்து வந்துள்ளார். சாந்தியின் மகள் ஷாலினிக்கு குழந்தை இல்லாததால், ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுக்கவோ, விலைக்கு வாங்கவோ அவர் முயற்சித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த சம்சீலா என்பவருக்கு கடந்த 8-ம் தேதி பிறந்த பெண் குழந்தையை விலைக்கு அவர்கள் வாங்கியதாகவும் விசாரணையில் இருவரும் தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும், இதில் சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் பின்பற்றப்படாததால், சிக்கல் வரும் என கருதி மீண்டும் அந்த குழந்தையை சம்ஷீலாவிடம் ஒப்படைக்க முடிவு செய்து அவர்கள் திருச்சூருக்கு குழந்தையை கொண்டு சென்றதாகவும், அப்போது ரயிலில் செல்லும்போது குழந்தையை யாருக்காவது விற்றுவிடலாம் என முயன்றபோது சிக்கிக் கொண்டதாகவும் போலீசாரின் விசாரணையில் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சம்சீலாவிடம் இருந்து இடைத்தரகர் மம்மூட்டிகாகா என்பவர் மூலம் குழந்தை வாங்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. மேலும், மீட்கப்பட்ட குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போலீசார், குழந்தையின் பெற்றோரான திருச்சூரைச் சேர்ந்த சம்ஷீலாவை வரவழைத்து அவர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

ரயிலில் குழந்தையை கூவிக் கூவி பெண்களே விற்க முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-ச.ஜெ.ரவி

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...