Thursday, July 14, 2016

'கல்விக் கடனுக்கு ரிலையன்ஸ்... ரிலையன்ஸ் கடனுக்கு?!' -நாடாளுமன்றத்தை உலுக்கப் போகும் ஜூலை 18

vikatan

இந்திய வங்கிகளில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 8.5 லட்சம் கோடி ரூபாய் விவகாரம் பெருத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ' வருகிற 18-ம் தேதியில் இருந்து தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், பா.ஜ.க அரசுக்குப் பெரும் தலைவலியாக இந்த விவகாரம் அமையும்' என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், " இந்திய வங்கிகளில் இருந்து பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 8.5 லட்சம் கோடி ரூபாயில், 5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் பட்டியலில் சேர்ந்துவிட்டன. இந்தப் பணத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதால், அவற்றை இந்தியாவுக்குக் கொண்டு வருவது சாத்தியமில்லை என சி.ஏ.ஜி சசிகாந்த் சர்மா கூறியிருக்கிறார்.

இவ்வளவு பெரிய தொகையையும் வசூலிப்பது மிகக் கடினம். இதனால் இந்தியப் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தளவுக்குப் பணம் வழங்கியது எதற்காக?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

யெச்சூரியின் கேள்விகள், நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில், " 'கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் சேர்ப்பேன்' என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார் மோடி. அதற்கான முயற்சிகளில் இறங்காமல், காங்கிரஸ் அரசைப் போலவே, பெரு நிறுவனங்களுக்கு இந்திய மக்களின் பணத்தில் இருந்து கணக்கு வழக்கில்லாமல் வாரியிறைக்கப்பட்டது சரிதானா" எனக் கேள்வி எழுப்புகின்றன இடதுசாரிக் கட்சிகள்.

மேலும் பெருநிறுவனங்கள் வாங்கிய கடன் விவரங்களும் வெளியுலகின் பார்வைக்கு வந்தன. அதில், ' கடந்த மார்ச் மாத இறுதி நிலவரப்படி, அதானி குழுமம் ரூ. 96,031 கோடி, எஸ்ஸார் குழுமம் 1.01 ட்ரில்லியன் ரூபாய், ஜி.எம்.ஆர் குழுமம் ரூ.47,976 கோடி, ஜி.வி.கே. குழுமம் 33,933 கோடி, ஜே.பி குழுமம் ரூ.75,163 கோடி, ஜே.எஸ்.டபிள்யூ ரூ. 58,171 கோடி, லான்கோ குழுமம் ரூ.47,102 கோடி, ரிலையன்ஸ் 1.25 ட்ரில்லியன் ரூபாய், வேதாந்தா குழுமம் 1.03 ட்ரில்லியன் ரூபாய், வீடியோகான் குழுமம் 45,405 கோடி ரூபாய் என மொத்தம் ரூ.7 லட்சம் கோடிகளைக் கடனாகப் பெற்றுள்ளன. மொத்தத் தொகையில் 5.60 லட்சம் கோடி ரூபாய் பணம் வாராக்கடன் பட்டியலில் இணைக்கப்பட்டுவிட்டன' என்கின்றனர் வங்கி அதிகாரிகள். இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரையில் எந்தப் பதிலும் இல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நம்மிடம், " இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது குறித்து, மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். அதானிக்கும் ரிலையன்ஸ் குழுமத்திற்கும், வங்கிப் பணத்தை வாரியிறைப்பதன் மூலம், அரசுக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என மத்திய அரசு நம்புகிறது. இந்த நிறுவனங்களின் சொத்துக்களுக்கு இணையாக, வங்கிகளில் இருந்து கடன் பெற்றுள்ளனர். இவர்களிடம் இருந்து வசூலிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அத்தனையும் நம் மக்களின் வரிப்பணம்.

தற்போது மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளன வங்கி நிர்வாகங்கள். மாணவர்களை மிரட்டி கல்விக் கடன் வசூலிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது ரிலையன்ஸ். மாணவர்களிடம் கடனை வசூலிக்கிறார்கள் சரி. ரிலையன்ஸ் வாங்கிய கடனை யார் வந்து வசூலிக்கப் போகிறார்கள்? சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 டாலராக குறைந்தாலும், பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைக்கு மேல் சலுகை வழங்குவது எதற்காக?.
இந்திய வங்கிகளில் இருந்து வாரியிறைக்கப்பட்ட பணத்திற்கு, நாடாளுமன்றத்தில் மோடி அரசு பதில் சொல்லும் வரையில் எதிர்க்கட்சிகள் ஓயப் போவதில்லை" என்றார் கொந்தளிப்போடு.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024