Friday, June 3, 2016

எம்ஜிஆர் 100 | 78 - எடுத்துக்கொண்ட கடமைக்கே முதலிடம்!

மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படப்பிடிப்பை தொடங்கி வைக்க வந்த எம்.ஜி.ஆரை கைகுலுக்கி வரவேற்கிறார் இன்று 93-வது பிறந்தநாள் காணும் கருணாநிதி.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. அரசியலில் வெற்றி பெற்றதற்கு அவர் ஒரு சினிமா நடிகர் என்பது மட்டுமே காரணம் அல்ல. அதுதான் காரணம் என்றால் அரசியலில் ஈடுபட்ட நடிகர்கள் எல்லோருமே வெற்றி பெற்றிருக்க வேண்டுமே? அரசியலில் மற்ற நடிகர்களுக்கு கிடைக்காத வெற்றியும் புகழும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே கிடைத்ததற்கு காரணம், அவரது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு. தாங்க முடியாத துக்கத்தைக்கூட மறைத்துக் கொண்டு அரசியலில் உழைத்தவர் அவர்.

1962-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல். அதற்கு முந் தைய தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட திமுக பதி னைந்து தொகுதிகளில் வென்றது. எனவே, இந்தத் தேர்தலில் காங்கிரசின் வியூகம் பலமானதாக இருந்தது. காஞ்சி புரத்தில் பேரறிஞர் அண்ணாவை எதிர்த்து பஸ் முதலாளி நடேச முதலியார் களமிறக்கப்பட்டார். 1957-ம் ஆண்டு தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, இம்முறை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டார்.

தமிழகம் முழுவதும் திமுகவை ஆதரித்து இரவு பகல் பார்க்காமல் எம்.ஜி.ஆர். தீவிர பிரசாரம் மேற்கொண் டார். இப்போது இருப்பதைப் போல இரவு பத்து மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு எல்லாம் அப்போது கிடை யாது. தேர்தல் நேரங்களில் ஒரு இடத் துக்கு மாலையில் எம்.ஜி.ஆர். பிரசாரத் துக்கு வருவதாக அறிவிக்கப்படும். வழிநெடுக மக்களின் வரவேற்பால் கூட்டத்துக்கு வர தாமதமாகி, அதிகாலையில் எம்.ஜி.ஆர். வந்த நிகழ்ச்சிகள் உண்டு. அதுவரையில் கூட்டம் கலையாமல் இருக்கும்.

எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதி காசநோயால் பல ஆண்டு களாக பாதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. அந்தச் சூழலிலும், திமுகவுக்காக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்து கொண்டிருந்தார். குறிப்பாக, தஞ்சாவூர் தொகுதியில் தனது நண்பரான கருணாநிதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையான பிரசாரம் மேற்கொண்டார். ஒரே நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களில் பேசினார்.

தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர். வேனில் பிரசாரம் மேற்கொண்ட போது, வயல்களில் வேலை செய்த விவசாயிகள், பெண்கள் அவரைப் பார்த்து ஓடி வந்தனர். அவர் களிடம் எம்.ஜி.ஆர். நலம் விசாரித்து விட்டு, ‘‘யாருக்கு ஓட்டுப் போடுவீங்க?’’ என்று கேட்டதற்கு, ‘‘ஐயாவுக்குத்தான் ஓட்டு போடுவோம்’’ என்று பதிலளித்தனர். எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். செல்லும் வழிகளில் எல்லாம் ‘‘ஐயாவுக் குத்தான் எங்கள் ஓட்டு’’ என்று மக்கள் கூறவே, அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஏனென்றால், எம்.ஜி.ஆரை கிராமப் புறங்களில் வயதில் சிறியவர்கள் ‘தலைவரே’ என்றும் ‘அண்ணே’ என்றும் அழைப்பார்கள். முதியவர்களும் பெண்களும் ‘சாமி’ எனவும் ‘மகராசா’ என்றும்தான் அழைப்பார்கள். ‘இது என்ன புதிதாக ஐயா என்று அழைக்கிறார்களே?’ என்று எம்.ஜி.ஆருக்கு சந்தேகம். மீண்டும் ஒரு இடத்தில் மக்களை சந் தித்தபோது, ‘‘ஐயாவுக்கு ஓட்டு’’ என்று சொன்னவர்களிடம் ‘‘யாரை சொல்கிறீர் கள்?’’ என்று கேட்ட எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி. மக்களால் குறிப்பிடப்பட்ட அந்த ‘ஐயா’… பரிசுத்த நாடார்!

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே புதுஆற்றின் கரை ஓரத்திலிருந்து சிறிது தூரம் சென்றால் ‘யாகப்பா டாக்கீஸ்’ வரும். அந்த தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ உட்பட அவரது பல படங்கள் வெளியாகி நூறு நாட்கள் ஓடியுள்ளன. யாகப்ப நாடார் என்ற செல்வந்தரின் பெயரால் அமைந்திருந் தது அந்த திரையரங்கம். இப்போது அந்த தியேட்டர் மூடப்பட்டுவிட்டது. யாகப்ப நாடாரின் மகன்தான் பரிசுத்த நாடார். செல்வாக்கான குடும்பம். அவர்தான் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர். அவரை ‘ஐயா’ என்று மக்கள் அழைப்பது வழக்கம். அவருக்கு ஆதரவாகத்தான் எம்.ஜி.ஆர். ஓட்டு கேட்க வந்துள்ளார் என்று கிராம மக்கள் நினைத்தனர்.

சுதாரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அதன்பிறகு வழியில் மக்களை சந்திக் கும்போது, ‘‘நான் திமுக வேட்பாளர் கருணாநிதிக்கு ஓட்டு கேட்டு வந்திருக் கிறேன். நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும்’’ என்று வலியுறுத்திக் கூறினார். கடும் போட்டி யில் அந்தத் தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு எம்.ஜி.ஆரின் தீவிர பிரசாரம் முக்கிய காரணமாக இருந்தது என்று சொன்னால் மிகையல்ல. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூரில் காங்கிரஸுக்கு, குறிப்பாக பரிசுத்த நாடாருக்கு இருந்த செல்வாக்கு அப்படிப்பட்டது.

தஞ்சாவூரில் தேர்தல் பிரசாரத்தின் போது வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தார். அவரது வேனைத் தொடர்ந்து பின்னாலேயே வேகமாக வந்து கொண்டிருந்தது ஒரு கார். அரசியல் விரோதிகள் தாக்க வருகிறார் களோ என்று எம்.ஜி.ஆருடன் இருந்தவர் களுக்கு சந்தேகம். இருந்தாலும் ‘‘என்னதான் நடக்கிறது பார்ப்போம். காரை நிறுத்து’’ என்று டிரைவரிடம் எம்.ஜி.ஆர். கூறினார்.

எந்த நிலைமை வந்தாலும் சந்திக்க எம்.ஜி.ஆரும் உடனிருந்தவர்களும் தயாரானபோது, பின்னால் வேகமாக வந்து நின்ற காரிலிருந்து இறங்கியவர் நடிகர் கே.கண்ணன்! பதற்றத்துடன் இறங்கிய அவர் இடிபோன்ற செய்தியை சொன்னார். சென்னையில் எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி இறந்துவிட்டார் என்ற செய்திதான் அது. கண்கலங்கிய எம்.ஜி.ஆரிடம் இருந்து சில நிமிடங்கள் பேச்சே இல்லை. அப்படியே உடைந்துபோய் உட்கார்ந்துவிட்டார்.

தயங்கியபடியே அவரிடம், ‘‘சென் னைக்கு திரும்பலாம்’’ என்று சொன்ன உதவியாளர்களிடம், ‘‘இல்லை. இன்று இரவு பிரசார பொதுக்கூட்டம் இருக் கிறது. நான் போகவில்லை என்றால் கட்சியினரும் மக்களும் ஏமாந்துவிடுவார்கள். பொதுக்கூட்டம் முடிந்தபின் அப்படியே கிளம்பிவிடலாம்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதன் படியே இரவில் கூட்டத்தில் பேசி விட்டு பதினொரு மணிக்கு மேல் சென்னை புறப்பட்டார். கூட் டத்தில் பேசி முடிக்கும்வரை தனது மனைவி இறந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பொது வாழ்க்கை என்று வந்து விட்ட பிறகு... குடும்பம், உறவு, பிரிவுகளைவிட, எடுத்துக் கொண்ட கடமைக்கே முதலிடம் என்பதை, இதைவிடத் தெளிவாக எப்படி ஒரு தலைவர் உலகத்துக்குக் காட்ட முடியும்?



1967 மற்றும் 71-ம் ஆண்டுகளில் பரங்கிமலை தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டப்பேரவைக்கு எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972-ம் ஆண்டு பரங்கிமலை தொகுதி எம்எல்ஏ-வாக எம்.ஜி.ஆர். இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினருக்கான அடையாள அட்டை.

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்


1962-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிடவில்லை. தமிழகம் முழுவதும் திமுகவுக்காக பிரசாரம் செய்தார். அந்தத் தேர்தலில் திமுக 50 இடங் களில் வென்றது. எம்.ஜி.ஆரின் உழைப்பை பாராட்டி அவருக்கு எம்.எல்.சி. பதவி அளித்து மகிழ்ந்தார் பேரறிஞர் அண்ணா!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024