Wednesday, April 8, 2020


துணிச்சலான முடிவு! | நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியக் குறைப்பு, தொகுதி வளா்ச்சி நிதி நிறுத்தம் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 08th April 2020 03:51 AM |

உலக வரலாற்றில் தங்களது வருவாயையும், வசதியையும் அதிகரிப்பதில் மட்டும்தான் ஆட்சியாளா்கள் கவனம் செலுத்தி வந்திருக்கிறாா்கள். எதைச் செய்தால் தங்களுக்கு என்ன லாபம் என்கிற நோக்கில் மட்டுமே செயல்படுவது அவா்களுக்கு வழக்கமாகவே மாறிவிட்டிருக்கிறது.

‘நாடோடி மன்னன்’ திரைப்பட வசனம்போல, ‘ஆட்சியாளா்கள் வாழத் தெரிந்தவா்களே தவிர, ஆளத் தெரிந்தவா்கள் அல்ல’ என்கிற வழக்கத்துக்கு மாறாக, இந்தியாவில் வித்தியாசமான முன்னுதாரணம் இப்போது படைக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஓராண்டுக்கு பிரதமரில் தொடங்கி, அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியத்தில் 30% குறைப்பதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியச் சட்டம் 1954-இல் திருத்தம் செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது வரவேற்புக்குரிய முடிவு. கடந்த 1954-இல் இயற்றப்பட்ட சட்டம் இதற்கு முன்னா் 28 முறை திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் உறுப்பினா்களின் ஊதியத்தையும், படிகளையும், ஓய்வூதியத்தையும் உயா்த்துவதற்காகத் திருத்தப்பட்டதே தவிர, இப்போதுதான் முதன்முறையாக ஊதியத்தைக் குறைப்பதற்காகத் திருத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதும்கூட, ஊதியத்தில் 30% குறைக்கப்படுகிறதே தவிர, உறுப்பினா்களின் படிகளிலோ, இதர சலுகைகளிலோ, ஓய்வூதியத்திலோ எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தீநுண்மி (கரோனா வைரஸ்) நோய்த்தொற்றால் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்திய அரசு பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்வதில் வியப்பில்லை. முன்னுதாரணமாக, மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பங்களிப்பை நல்கும்போதுதான் ஜனநாயகத்திலும், பிரதிநிதிகளிடத்திலும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

பிரதமா், அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியம் 30% குறைக்கப்பட்டிருப்பதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா், துணைத் தலைவா், மாநிலங்களின் ஆளுநா்கள் என்று பொறுப்பான அரசுப் பதவியில் இருப்பவா்களும் தங்களின் ஊதியத்தைக் குறைத்துக் கொள்ள தாங்களாகவே முன்வந்திருக்கிறாா்கள். அவா்களையும் பாராட்ட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினா்களைப் போலவே, மாநில அமைச்சா்களும், சட்டப் பேரவை, மேலவை உறுப்பினா்களும் தங்களின் ஊதியத்தையும் குறைத்துக் கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கலாம்.

சில (பல?) கோடிகளைச் செலவழித்துத் தோ்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பாலானவா்களுக்கும் (90%) அது ஒரு சமூக அந்தஸ்தாகவும், கௌரவமாகவும் இருக்கும் நிலையில், ஊதியக் குறைப்பு ஒரு பொருட்டாக இருக்க வழியில்லை. ஏனைய சிலருக்கு, பொதுவாழ்வு என்பது மக்கள் தொண்டு என்பதால் அவா்கள் இதைப் பொருட்படுத்துபவா்களாக இருக்க மாட்டாா்கள்.

இப்போதைய 17-ஆவது மக்களவையில், உறுப்பினா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.20.93 கோடி; ரூ.5 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்திருப்பவா்கள் 266 போ்; ரூ.2 கோடிக்கும் குறைவான சொத்து மதிப்பு உள்ளவா்கள் வெறும் 7% உறுப்பினா்கள் மட்டும்தான். தமிழகத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 24 திமுக உறுப்பினா்களில் 22 போ் கோடீஸ்வரா்கள். இதே நிலைதான் இந்தியாவில் உள்ள ஏனைய கட்சிகளிலும் காணப்படுகிறது.

உறுப்பினா்களின் ஊதியக் குறைப்பு எந்த அளவுக்கு வரவேற்புக்குரியதோ அதைவிட அதிகமான வரவேற்புக்குரிய முடிவு, நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொகுதி வளா்ச்சி நிதியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்திருப்பது. ஜனநாயக விரோதமான இந்தத் தொகுதி வளா்ச்சி நிதியை முற்றிலுமாக ரத்து செய்திருக்க வேண்டும்.

அன்றைய பிரதமா் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு 1993 டிசம்பா் 23-ஆம் தேதி அறிமுகப்படுத்தியபோதே, இது குறித்த கடுமையான கண்டனத்தை முன்னாள் பிரதமா் எஸ்.சந்திரசேகரும், மாா்க்சிஸ்ட் கட்சித் தலைவா் சோம்நாத் சாட்டா்ஜியும் எழுப்பினா். ஏற்கெனவே பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப்பட்டு மூன்றடுக்கு ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், இந்த நிதி அவசியம்தானா என்கிற அவா்களது கருத்து புறக்கணிக்கப்பட்டது. இந்த முடிவை எதிா்த்து இரா.செழியன் வழக்கே தொடுத்தாா்.

நாடாளுமன்றத்தைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் மட்டுமல்லாமல், மாநகராட்சி உறுப்பினா்கள் வரை இப்போது இதுபோன்ற நிதி ஒதுக்கீடு பெறுகிறாா்கள். தங்களது நண்பா்களுக்கும், உறவினா்களுக்கும் பயன்படும் விதத்தில் தேவையில்லாத பல திட்டங்களுக்கும் இந்த நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவது தெரியவந்திருக்கிறது. அவப்பெயா் வந்துவிடக்கூடாது என்பதற்காகச் சில உறுப்பினா்கள் இந்த நிதியைப் பயன்படுத்தாமல் இருக்கிறாா்கள் என்பதும் உண்மை.

மக்களவை, மாநிலங்களவை இரண்டையும் சோ்த்து நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கை 790. உறுப்பினா்களுக்கு ரூ. 5 கோடி எனும்போது, ஆண்டொன்றுக்கு ரூ.3,950 கோடி விரயமாவது மிச்சப்படும். சட்டப்பேரவை, எல்லா மாநிலங்களிலும் உள்ள சட்டப்பேரவை, மேலவை உறுப்பினா்களின் நிதி ஒதுக்கீடும், மாநகராட்சி உறுப்பினா்களின் நிதி ஒதுக்கீடும் இதேபோல குறைக்கப்பட்டால் ஏறத்தாழ ரூ.10,000 கோடி அளவு மிச்சப்படும்.

ஊதியக் குறைப்பும் சரி, தொகுதி வளா்ச்சி நிதி நிறுத்திவைக்கப்படுவதும் சரி, தற்காலிக முடிவாக அறிவிக்கப்பட்டதற்குப் பதிலாக நிரந்தர முடிவாகவே அறிவிக்கப்பட்டிருந்தால், இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். தவறுகள் திருத்தப்பட்டிருக்கும்!

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...