Friday, December 20, 2019

போராட்டம் எழுப்பும் அச்சம்!| குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 20th December 2019 04:47 AM |

போராட்டங்கள் என்பதும், கருத்து வேறுபாடு என்பதும் ஜனநாயகத்தின் கூறுகள். அவை பொதுவெளியில் அரசுக்கு எதிராக எழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், வன்முறை சார்ந்த போராட்டங்களுக்கு ஜனநாயகத்தில் அங்கீகாரம் கிடையாது.

காவல் துறையினர் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் அந்தச் சூழலைக் கையாள வேண்டும்.
அதிலும் குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் உருவாகும், உருவாக்கப்படும் போராட்டங்கள் உணர்வின் அடிப்படையிலானவை. அவை கவனமாகக் கையாளப்படாவிட்டால் போராட்டங்கள்
எழுச்சியாக மாறிவிடும் ஆபத்து அதில் அடங்கியிருக்கிறது.

பல்கலைக்கழக நிர்வாகமோ, கல்லூரி நிர்வாகமோ அழைக்காமல் கல்விச்சாலைகளுக்குள் காவல் துறையினர் நுழைவது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் என்கிற போர்வையில் வன்முறையாளர்களும், சமூக விரோதிகளும் போராட்டங்களைத் தூண்டுவதும், மாணவர்களைக் கேடயங்களாக வைத்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதும் புதிதொன்றுமல்ல. அதைக் கையாளத் தெரியாமல் இருப்பது காவல் துறையினரின் கையாலாகாத்தனம் என்றுதான் கருதப்படுமே தவிர, அவர்களுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம் என்று பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த போராட்டத்தை பொருள்படுத்தாமல் விட்டிருந்தால், இன்று நாடு தழுவிய அளவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை முன்வைத்து மாணவர்களும் அவர்களுடன் எதிர்க்கட்சிகளும் தெருவில் இறங்கிப் போராடும் நிலைமை ஏற்பட்டிருக்காது. மாநிலம் மாநிலமாக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறையின் அத்துமீறலுக்கு ஆதரவாக எழுந்திருக்கும் மாணவர் போராட்டங்களின் பின்னணி எதுவாக இருந்தாலும், அவற்றை வளர விட்டது மிகவும் தவறு.
வன்முறையும், தீ வைத்தலும் இப்படியே தொடருமானால், அவர்களது போராட்டம் இலக்கை விட்டு அகன்று மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரும் என்பதை போராட்டக்காரர்கள் உணர வேண்டும். எந்தவொரு சமுதாயமும் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களால் இயல்பு நிலை தடம் புரள்வதை சகித்துக் கொள்வதில்லை.

அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுமானால், முதல் பழி போராட்டக்காரர்கள் மீதுதான் விழும். போராட்டத்திற்கான காரணம் வலுவாக இல்லாவிட்டால், போராட்டக்காரர்கள் மக்கள் மன்றத்தின் எதிர்வினையைச் சம்பாதிக்கக் கூடும். 

குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு எதிரானது என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தச் சட்டம் ஜனநாயக முறையில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் என்பதை அதை விமர்சிப்பவர்கள் உணர வேண்டும். அது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்குத்தான் உண்டே தவிர, போராட்டங்களின் மூலம் தீர்வு காண முடியாது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது. அரசியல் சாசன அமர்வு இந்தச் சட்டம் குறித்து விசாரிக்க இருக்கிறது. அதுவரை பொறுத்திருக்க வேண்டிய கடமை இந்தச் சட்டத்தை எதிர்க்கும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அரசியல் கட்சிகளுக்கு உண்டு.
இந்தச் சட்டம் இந்தியாவின் அடிப்படைக் கூறான மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று கருதுபவர்கள் அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும்தான் இதை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, போராட்டங்களின் மூலம் தங்களது நோக்கத்தை அடைந்துவிட முடியாது. பல ஆண்டுகள் தொடர்ந்து தனது கொள்கையைப் பரப்பி, சாதகமான சூழலை ஏற்படுத்தி மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்துடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக்கி ஆட்சியைப் பிடித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதை அந்தக் கட்சி நிறைவேற்ற முற்பட்டிருப்பதில் தவறுகாண முடியாது.

பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் தொடர்ந்து பிரசாரம் செய்து, அமைதியான போராட்டங்களின் மூலமாகவும் தேர்தல் வெற்றிகளின் மூலமும் மட்டுமே இந்தச் சட்டத்தை மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர, வன்முறைப் போராட்டங்களின் மூலம் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முற்படுவது, மறைமுகமாக மத ரீதியான அரசியலை மேலும் வலுப்படுத்தும் என்கிற எச்சரிக்கையை முன்வைக்காமல் இருக்க முடியவில்லை.

தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது வேறு, குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது வேறு. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பயனடைய இருப்பவர்கள் பாகிஸ்தானிலிருந்தும் வங்கதேசத்திலிருந்தும் இந்தியாவுக்கு வந்த வெறும் 31,313 பேர் மட்டுமே. இந்திய குடிமக்களாக இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் என்று இந்தச் சட்டத்தை வர்ணிக்க முற்படுவது, ஒன்று புரிதலின்மை அல்லது அரசியல்.

இந்தச் சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் போராடுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் இந்தச் சட்டத்தை சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் என்று வர்ணித்து போராட்டத்தில் ஈடுபடும்போது, அது பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்துத்துவ வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்துமே தவிர, தேர்தல் ரீதியாகப் பயனளிக்குமா என்பது சந்தேகம்.

பொருளாதாரப் பிரச்னைகளிலிருந்து தேசத்தின் கவனம் திசை திருப்பப்படுகிறது. அந்நிய நாடுகளுடனான உறவையும், அந்நிய முதலீட்டையும் இந்தப் போராட்டம் பாதிக்கிறது. அரசும் எதிர்க்கட்சிகளும் தங்களது அரசியல் ஆதாயத்துக்கு மாணவர்களை பலிகடா ஆக்குகின்றன. ஜனநாயகம் தடம் புரண்டுவிடாமல் இருக்க வேண்டுமே என்கிற அச்சம் எழுகிறது.

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...