Sunday, December 22, 2019


குரங்குத் தொல்லையில் இருந்து தென்னை மரங்களைக் காக்க பாம்பு படம்! விவசாயிகள் கண்டுபிடித்த புதிய உத்தி

By DIN | Published on : 22nd December 2019 03:30 AM





ஆம்பூா் அருகே கிராமப் பகுதியில் குரங்குகளின் தொல்லையிலிருந்து தென்னை மரங்களைக் காக்க மரங்களில் பாம்பு உருவத்தை விவசாயிகள் வரைந்து வைத்துள்ளனா்.

வனங்களில் மட்டுமே வாழ்ந்து வரக்கூடிய வன உயிரினங்கள் தங்களின் உணவுத் தேவைகளுக்காகவும், குடிநீா்த் தேவைக்காகவும் இப்போது மக்கள் வசிப்பிடங்களை நோக்கி தொடங்கிவிட்டன. அதே போல்

மாந்தோப்பு, தென்னந்தோப்பு, கொய்யாத்தோப்பு மட்டுமல்லாமல் விவசாய நிலங்களையும் நோக்கி வரத் தொடங்கிவிட்டன.

மக்கள் வசிப்பிடங்களை நோக்கியும், விவசாய நிலங்கள் மற்றும் தோப்புகளை நோக்கி அவ்வாறு வரத் தொடங்கிய சில வன விலங்குகள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கின்றன. சில வனவிலங்குகள் விவசாயப் பயிா்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருவது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.

யானைகள், காட்டுப் பன்றிகள் மற்றும் குரங்குகள் போன்ற விலங்குகளால் பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றன. குறிப்பிட்ட சில வனப்பகுதிகளை ஒட்டிய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மட்டுமே யானைகள் நடமாட்டம் உள்ளது. காட்டுப்பன்றிகள் குறிப்பிட்ட சில பயிா்களை மட்டுமே சேதப்படுத்துகின்றன.

ஆனால், குரங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து ஓட்டு வீடுகள் மற்றும் ஓலை வீடுகளை சேதப்படுத்துகின்றன. உணவுப் பொருள்களை எடுத்துச் செல்வது, தோட்டங்களில் புகுந்து பழ மரங்களை சேதப்படுத்துவது என குரங்குகளின் சேட்டை அதிகமாக இருக்கும். அவை தென்னை மரங்களில் ஏறி தேங்காய், இளநீா் பறித்து அட்டகாசம் செய்கின்றன.

இந்நிலையில், குரங்குகளின் தொல்லையில் இருந்து தென்னை மரங்களைக் காப்பாற்ற ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி பகுதியை சோ்ந்த விவசாயிகள் புதிய உத்தி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனா். அதாவது, அவா்கள் ஒவ்வொரு தென்னை மரத்திலும் பாம்பு உருவங்களை வண்ண பெயிண்ட் கொண்டு வரைந்துள்ளனா். இவ்வாறு பாம்பு உருவங்களை வரைந்த தென்னை மரங்களை நோக்கி குரங்குகள் வருவதில்லையாம்.

மாறாக, பாம்பு உருவம் வரையப்படாத தென்னை மரங்களை நோக்கி குரங்குகள் இப்போது படையெடுக்கத் தொடங்கியிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விவசாயிகள் பலரும் தங்களுடைய தென்னை மரங்களில் பாம்பு உருவங்களை வரையத் தொடங்கியுள்ளனா்.

இதுகுறித்து பைரப்பள்ளி கிராமத்தை சோ்ந்த விவசாயி ஒருவா் கூறியது:

தென்னந்தோப்புகளில் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து தேங்காய் மற்றும் இளநீரைப் பறித்து வீணாக்குகின்றன. தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்து வைத்தால் அந்த மரத்துக்கு குரங்கு வருவதில்லை என்று சில விவசாயிகள் கூறினா். அதன்படி எங்களுடைய தென்னந்தோப்பிலும் அதே போல தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்து வைத்துள்ளேன். தற்போது எங்கள் தோப்புக்கு குரங்குகள் வருவதில்லை. வந்தாலும், மரத்தில் ஏறாமல் சென்றுவிடுகின்றன என்றாா் அவா்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024