Sunday, December 22, 2019

விரைவு ரயில்களில் பயணம் செய்ய குழு டிக்கெட் முன்பதிவுக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கம்: தெற்கு ரயில்வே புதிய உத்தரவு வெளியீடு

 கி.ஜெயப்பிரகாஷ்
 
Published : 22 Dec 2019 07:53 am


 

விரைவு ரயில்களில் பயணம் செய்ய குழு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய உத்தரவு வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.

ரயில்களின் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட டிக்கெட் முன்பதிவு மையங்கள் உள்ளன. இணையதள வசதியுடன் கூடிய செல்போன் மக்களிடம் அதிகரித்துள்ள நிலையிலும், இன்னும் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு மையங்களை நம்பியே உள்ளனர்.

குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான பயணிகள் குழுவாக பயணம் செய்ய முன்பதிவு மையங்களில் மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும். இந்த ‘குழு டிக்கெட்’ எடுக்க இருந்த பல்வேறு நிபந்தனைகளை தளர்த்தி தற்போது புதிய உத்தரவை தெற்கு ரயில்வே பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: குழு டிக்கெட்டுக்கான பல்வேறு கட்டுபாடுகளை படிப்படியாக நீக்கி வருகிறோம். முன்பு, 30 டிக்கெட் வரை மட்டுமே பயணம் செய்ய முன்பதிவு மைய கண்காணிப்பாளர் அனுமதி வழங்க முடியும். அதற்கு மேல் என்றால் ரயில்வே கோட்ட மேலாளர்களிடம் அனுமதி வேண்டும். இதேபோல், 3-ல் ஒரு மடங்கு டிக்கெட்டை மட்டுமே குழுவாக டிக்கெட்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுபோன்ற நிபந்தனைகளை தளர்த்தி தெற்கு ரயில்வே புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.


குழுவாக பயணம் செய்ய விரும்புவோர் காலை 9 மணிக்குப் பிறகு முன்பதிவு செய்யலாம். எத்தனை பேர் வேண்டுமென்றாலும் ஒரே நேரத்தில் குழு டிக்கெட் எடுக்கலாம். மேலும், குழுவாக பயணம் செய்வதற்கான ஏதாவது ஒன்றை ஆதாரமாக காண்பித்தால் போதுமானது. உறுதியான டிக்கெட் மட்டுமின்றி காத்திருப்பு பட்டியல், ஆர்ஏசி போன்ற டிக்கெட்களை எடுக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏராளமான பயணிகள் பயன்பெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

முறைகேடுக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக டிஆர்இயு துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறும்போது, ‘‘குழு டிக்கெட் முன்பதிவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. இந்த புதிய அறிவிப்பு மூலம் பயணிகள் அவசர காலத்தில் டிக்கெட் கிடைப்பதில் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இடைத்தரகர்கள் அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு, பயணிகளுக்கு கூடுதலாக கட்டணத்துக்கு விற்கும் நிலை ஏற்படலாம். எனவே, குழு டிக்கெட்களை உண்மையான பயணிகள் தான் பயன்பெறுகிறார்கள் என்பது குறித்து உறுதிசெய்ய தெற்கு ரயில்வே புதிய நடவடிக்கையை கையாள வேண்டும்’’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024