Thursday, December 26, 2019


அண்ணா பல்கலை., மத்திய அரசின் தலையீடு இருக்காது: 

தெளிவுபடுத்தியது மத்திய மனிதவள அமைச்சகம்

Updated : டிச 26, 2019 00:11 | Added : டிச 25, 2019 22:40




சென்னை:மத்திய அரசின் மேம்பட்ட சிறப்பு அந்தஸ்து பெற்றாலும், தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை, தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே செயல்படும் என, மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும், கல்வி நிறுவனங்களின் தரத்தை சர்வதேச அளவில் எடுத்துக்காட்டும் வகையிலும், மத்திய அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தர வரிசை பட்டியல்

இதன்படி முக்கியமான உயர்கல்வி நிறுவனங்களை, தேர்வு செய்து அவற்றின் கல்வித்தரம், உள்கட்டமைப்பு, தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றின் அடிப்படையில், ஆண்டுதோறும் தேசிய அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெறும், உயர்கல்வி நிறுவனங்களில் சர்வதேச அளவிலான உள்கட்டமைப்பு வசதி, மாணவர் சேர்க்கை, கல்வியின் தரம், பேராசிரியர்களின் தரம், மாணவர்களின் ஆராய்ச்சி நடவடிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், மேம்பட்ட சிறப்பு அந்தஸ்து என்ற கவுரவத்தை மத்திய அரசு வழங்குகிறது.

'இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ்' என்ற பெயரில், நாட்டிலுள்ள சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு, சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுகிறது.தமிழகத்தில், ஐ.ஐ.டி., சென்னை, வி.ஐ.டி., பல்கலை மற்றும் அமிர்தா பல்கலை ஆகியவற்றுக்கு, இந்த அந்தஸ்து ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.அதேபோல, தமிழக அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் அண்ணா பல்கலைக்கும், இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ் என்ற அந்தஸ்தை வழங்க, மத்திய அரசு முன்வந்துள்ளது.

இது குறித்து, 2018ல் அண்ணா பல்கலை அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, சிறப்பு அந்தஸ்து வழங்கும் உத்தரவை, மத்திய அரசு பிறப்பித்துள்ளது.இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன், தமிழக அரசின் சார்பில் ஒப்புதல் வழங்குமாறு, மத்திய அரசு சில மாதங்களுக்கு முன், கடிதம் அனுப்பியது.

இந்த கடிதத்தை தொடர்ந்து, தமிழக அரசு அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான ஒப்புதல் கடிதம் வழங்க, காலம் தாழ்த்தி வருகிறது. இதுகுறித்து முடிவு செய்வதற்கு, நான்கு அமைச்சர்கள் அடங்கிய ஆய்வு கமிட்டி ஒன்றை, தமிழக அரசு அமைத்துள்ளது.

மேம்பட்ட அந்தஸ்து

அண்ணா பல்கலையை, இரண்டாக பிரித்து, அதில் ஒன்றை இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ் என்ற உயர் அந்தஸ்துக்கும், மற்றொன்றை தமிழகத்திலுள்ள இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களுக்கும், இணைப்பு அந்தஸ்து வழங்கும் பல்கலையாகவும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேம்பட்ட சிறப்பு அந்தஸ்து பெறும் அண்ணா பல்கலைக்கு, மத்திய அரசை முழுமையாக நிதி ஒதுக்குவதற்கும், தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மேம்பட்ட அந்தஸ்து வழங்கப்பட்ட பின், தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு கொள்கையில், எந்தவித மாற்றமும், மத்திய அரசால் மேற்கொள்ளப்படாது.

தற்போது, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபடியே, மேம்பட்ட அந்தஸ்து வந்தபிறகும், அண்ணா பல்கலை செயல்பட வேண்டும்.இதில், மத்திய அரசின் சட்டங்களோ, நிபந்தனைகளோ விதிக்கக்கூடாது என்று தமிழக அரசு தரப்பில், மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பப் பட்டுள்ளன. அதேநேரம், அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்தால், அந்த நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்று விடுமோ என, கல்வியாளர்கள் தரப்பிலும், தமிழக உயர்கல்வித்துறை தரப்பிலும் சந்தேகங்கள் எழுந்தன.

இது குறித்து, நம் நாளிதழில், சில தினங்களுக்கு முன் விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில், அண்ணா பல்கலையின் மேம்பட்ட சிறப்பு அந்தஸ்து குறித்து, தமிழக அரசுக்கு, மத்திய அரசு தெளிவான விளக்க கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் துணை இயக்குனர் கீர்த்தி, தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத் ராம் சர்மாவுக்கு, அக்., - டிசம்பரில் அனுப்பிய கடிதங்கள், நம் நாளிதழுக்கு கிடைத்துள்ளன.

நிர்வாக தலையீடு

அந்த கடிதங்களில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலுள்ள அண்ணா பல்கலைக்கு, இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ் என்ற மேம்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும், அதன் செயல்பாடுகளில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது. மத்திய அரசு, எந்த வகையிலும் நிர்வாக தலையீடுகளை மேற்கொள்ளாது.

தற்போது அண்ணா பல்கலை, தமிழக அரசின் சட்டத்தின் கீழ், எந்த நிர்வாகத்தின் அடிப்படையில் செயல்படுகிறதோ, அதே நிலை நீடிக்கும். மேலும், அண்ணா பல்கலை எந்த சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறதோ, அதிலும் எந்த மாற்றமும் இருக்காது. எனவே, தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, மேம்பட்ட சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான நிதியை, விரைவாக ஒதுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதால், இட ஒதுக்கீட்டுக் கொள்கையிலோ, நிர்வாக நடைமுறையிலோ, மத்திய அரசின் தலையீடும், கட்டுப்பாடும் இருக்காது என்பது தெரிய வந்துள்ளது.தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக முடிவெடுத்து, மத்திய அரசுக்கு ஒப்புதல் கடிதம் அளித்து, மேம்பட்ட சிறப்பு அந்தஸ்தை உடனடியாக பெற வேண்டும் என, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Court

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Cour...