Sunday, December 22, 2019


முக்தா பிலிம்ஸ் 60: திரையுலகில் ஒரு நிறைகுடம்!




திரை பாரதி

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற சகோதர நடிகர்கள் உண்டு. அண்ணன் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி அடுக்கடுக்காக வெற்றிகள் கொடுத்த தம்பியும் உண்டு. அவர்கள் ‘முக்தா சகோதரர்கள்’ என்று அழைக்கப்பட்ட முக்தா ராமசாமியும் முக்தா வி. சீனிவாசனும். சென்னைக்கு வெளியே சேலத்தில் தமிழ் சினிமாவுக்குத் தனிப்பெரும் கோட்டை அமைத்த பட ‘முதலாளி’ டி.ஆர்.சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸில் சினிமா தொழிலைக் கற்று சாதனை படைத்த சகோதரர்கள் இவர்கள்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், பாபநாசம் அருகே மணப்புரம் என்ற விவசாயக் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடச்சாரியார், செல்லம்மாள் தம்பதியின் மகன்களாகப் பிறந்தவர்கள் ராமசாமியும் சீனிவாசனும். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் பொறுப்புடன் கல்வி பயின்றனர் ராமசாமியும் சீனிவாசனும். சிறு வயதில் தந்தையை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ப்பில் வளர்ந்தனர். 1945 -ல் முக்தா ராமசாமி மாடர்ன் தியேட்டர்ஸில் தட்டச்சராகப் பணியில் சேர்ந்தார்.

எதிர்பாராமல் அமைந்த வாய்ப்பு

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் படச்சுருளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆங்கில அரசாங்கத்தை ஆதரித்துப் படமெடுப்பவர்களுக்கு மட்டுமே படச்சுருள் கிடைத்தது. டி.ஆர்.சுந்தரமும் ஆங்கில அரசை ஆதரித்து, ஹிட்லரைக் கிண்டலடித்து ‘பர்மா ராணி’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்கினார். ஹிட்லரைப் போன்ற தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த கதாநாயகன் சொன்ன தேதியில் படப்பிடிப்புக்கு வராமல் போக, கோபத்தில் சுந்தரமே நாயகனாக வேடமேற்று நடித்தார்.

அந்த சமயத்தில் முக்தா ராமசாமியைத் தன் காரியதரிசியாகப் பொறுப்பில் உயர்த்தி, அந்தப் படத்தின் நிர்வாகத் தயாரிப்பு வேலைகளைக் கவனிக்கவும் வைத்தார். எதிர்பாராமல் அமைந்த இந்த வாய்ப்பில் தனது ஈடுபாட்டையும் உழைப்பையும் திறம்படச் செலுத்தி, டி.ஆர்.எஸ்ஸிடம் நற்பெயரையும் நம்பிக்கையையும் பெற்றார்.

இதற்கிடையில் தஞ்சை மாவட்டத்தில் பொதுவுடைமை இயக்கம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று, கூலி உயர்வு இயக்கம் பெரும் போராட்டமாக வெடித்திருந்தது. அரசுப் பணியிலிருந்த சீனிவாசன் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கட்சிப் பணியிலும் ஈடுபாடு காட்டினார். 1946-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது, அரசு வேலையிலிருந்து நீக்கப்பட்ட சீனிவாசன், கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். துடிப்பான தம்பி சிறையில் அடைக்கப்பட்டது அறிந்து ஓடோடி வந்தார் ராமசாமி. தம்பியை வழக்கிலிருந்து விடுவித்து கையோடு சேலத்துக்குக் கூட்டிச்சென்றார்.




முதல்வர்களுடன் பணி

சீனிவாசனை டி.ஆர்.சுந்தரத்தின் முன்பாக கொண்டுபோய் நிறுத்தி ராமசாமி, ‘தனது தம்பியை உதவி இயக்குநராகச் சேர்த்துக்கொள்ளும்படி’ வேண்டுகோள் வைத்தார். சீனிவாசனின் கதை அறிவைக் கண்ட டி.ஆர்.எஸ்ஸும் அந்தக் கணமே உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். டி.ஆர்.எஸ்ஸிடம் தொழில் கற்றுக்கொண்டாலும் மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்து, பின்னாள் தமிழக முதல்வர்களாக உயர்ந்த மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோருடன் ‘மந்திரிகுமாரி’ படத்தில் இணைந்து வேலை செய்தார் சீனிவாசன்.

அன்று மாடர்ன் தியேட்டர்ஸின் புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய டி.ஆர்.மகாலிங்கம், அஞ்சலி தேவி, மாதுரி தேவி போன்ற நட்சத்திரங்களுடனும் எல்.வி.பிரசாத், கே.ராம்நாத் தொடங்கி எஸ்.பாலசந்தார் வரை தனித்துவம் மிக்க பல சாதனை இயக்குநர்களுடன் பணிபுரியும் வாய்ப்பும் சீனிவாசனுக்கு அமைந்தது.

போதிய பயிற்சியும் அனுபவமும் பெற்ற பிறகு முக்தா வி. சீனிவாசன் முதன்முதலாக இயக்கிய படமான ‘முதலாளி’ 1957-ல் வெளியாகி வெற்றிபெற்றது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதையும் வென்றது. தம்பி இயக்கிய படங்களை அண்ணன் ராமசாமி விநியோகம் செய்து வந்தார்.

‘முதலாளி’ படத்தைத் தொடர்ந்து சீனிவாசன் இயக்கிய ‘நாலு வேலி நிலம்’, ‘தாமரைக் குளம்’ போன்ற அவரது தொடக்க காலப் படங்கள் பொதுவுடைமைக் கருத்துகளின் தீவிரத் தாக்கம் கொண்டவையாக இருந்தன. அவை வரிசையாகத் தோல்வியையும் சந்தித்தன. இந்த சமயத்தில் தமிழ் சினிமாவின் தந்தை, இயக்குநர் கே.சுப்ரமணியம் முக்தா சகோதர்கள் இருவரையும் அழைத்து, ‘சொந்தப் படநிறுவனம் தொடங்கும்படி’ அறிவுறுத்த, 1960-ல் உதயமானது ‘முக்தா பிலிம்ஸ்’.

கைகொடுத்த ஜெமினி கணேசன்

முதல் தயாரிப்பு அர்த்தபூர்வமாகவும் வெற்றிப் படமாகவும் பெண்களைக் கவரும் விதமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தார் சீனிவாசன். இதற்காக அண்ணனின் அனுமதியுடன், மீனா குமாரி நடிப்பில் வெளியாகி வெள்ளி விழா நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ‘அர்தாங்கினி’ (Ardhangini) என்ற இந்திப் படத்தின் தமிழ் மறு ஆக்க உரிமையை விலைக்கு வாங்கி வாந்தார். தமிழுக்கு ஏற்ப அதற்குத் திரைக்கதை எழுதிய சீனிவாசன், ‘பனித்திரை’ என்று தலைப்பிட்டு 1.4.1960-ல் முக்தா பிலிம்ஸின் முதல் தயாரிப்பின் படப்பிடிப்பைத் தொடங்கினார்.

அதிர்ஷ்டமில்லாதவளாகப் பார்க்கப்படும் ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட வாழ்க்கைதான் அந்தப் படத்தின் கதை. கதாநாயகியை மையமாகக் கொண்ட கதைக்கு, வளர்ந்து வரும் கதாநாயகியாக இருந்த பி.சரோஜாதேவியைத் துணிந்து ஒப்பந்தம் செய்தனர். கதாநாயகனுக்கான வேலை படத்தில் கொஞ்சம்தான்.

ஆனால், படப்பிடிப்பு நாளில் கதாநாயகன் ஸ்டுடியோவுக்கு வரவில்லை. முதலில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஏ.நாககேஸ்வர ராவ், பின்னர் நடிக்க மறுத்து முன்பணமுடன் நின்றுபோன படப்பிடிப்புச் செலவையும் முக்தா சகோதரர்களைத் தேடி வந்து கொடுத்துவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்தார் முக்தா ராமசாமி.

எட்டு மாதங்கள் பட வேலைகள் அப்படியே கிடக்க, முதல் முயற்சியிலேயே கதாநாயகனால் சிக்கல். இதைக் கேள்விப்பட்ட ஜெமினி கணேசன் ஓடோடி வந்து நாயகனாக நடித்துக்கொடுத்தார். இப்படிப் பல தடங்கல்களைச் சந்தித்து 1961-ல் வெளியான ‘பனித்திரை’ ஓரளவு ஓடியது. அடுத்தடுத்து தயாரித்த ‘இதயத்தில் நீ’, ‘பூஜைக்கு வந்த மலர்’ ஆகிய படங்களும் சுமாராக ஓடி சுணக்கம் காட்ட, நான்காவதாக வெளிவந்த ‘தேன்மழை’ 92 நாட்கள் ஓடி முக்தா சகோதரர்களுக்குப் பண மழையைக் கொட்டிக் கொடுத்தது.

நன்றி தெரிவிக்கும் விழா

முக்தா பிலிம்ஸின் படப் பட்டியலில் முதல் பெரிய வெற்றியாக அமைந்த படம் சிவாஜி கணேசனைத்து வைத்து அவர்கள் எடுத்த முதல்படமான ‘நிறைகுடம்’. அதன்பிறகு ‘தவப் புதல்வன்’, ‘சூரியகாந்தி’, ‘அந்தமான் காதலி’, ‘பொல்லாதவன்’, ‘கீழ்வானம் சிவக்கும்’, ‘சிவப்பு சூரியன்’, ‘சிம்லா ஸ்பெஷல்’, ‘பரீட்சைக்கு நேரமாச்சு’, ‘நாயகன்’, ‘கதாநாயகன்’, ‘வாய்க்கொழுப்பு’ உள்ளிட்ட பல படங்கள் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தன.

சிவகுமார், லட்சுமி, ஸ்ரீப்ரியா நடிப்பில், எழுத்தாளர் சிவசங்கரியின் கதையில், விசுவின் திரைக்கதை, வனத்தில் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான ‘அவன் அவள் அது’ 25 வாரம் ஓடி வெள்ளி விழா கண்டது. இந்தப் படங்கள் உட்பட 41 படங்களைத் தயாரித்து சாதனை படைத்த முக்தா பிலிம்ஸ் நிறுவனத்துக்கு இது வைர விழா ஆண்டு.

நாளை மறுநாள் (டிசம்பர் 22) முக்தா பிலிம்ஸின் வைரவிழா சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம், குமாரராஜா அரங்கில் நடைபெற உள்ளது. 60 ஆண்டுகள் திரைப் பயணத்தில் முக்தா பிலிம்ஸின் படங்களில் பங்குபெற்ற நடிகர், நடிகையர் தொடங்கி லைட் மேன் வரை 41 படங்களில் பங்குபெற்ற கலைஞர்கள் யாரெல்லாம் உயிருடன் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் விழாவுக்கு அழைத்து நன்றி பாராட்டி நினைவுக் கேடயம் வழங்கி கௌரம் செய்யும் பிரம்மாண்ட வைர விழாவுக்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முக்தா ராமசாமி, முக்தா சீனிவாசன் குடும்பத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

மூத்தவரான ராமசாமிக்குப் பெண் குழந்தை பிறந்தபோது மகளுக்கு, ‘முக்தா’ எனப் பெயர் சூட்டினார்கள். முக்தா என்றால் திருமகள் என்று பொருள். அந்தப் பெயரையே தயாரிப்பு நிறுவனத்துக்கும் சூட்டினார்கள். சகோதரர்களின் பெயருக்கு முன்னே ‘முக்தா’வும் ஓட்டிக்கொண்டது.

முக்தா பிலிம்ஸ் படங்களில் மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்துள்ளனர். எம்.ஆர்.ராதா-எம்.ஆர்.ஆர்.வாசு, ராதா ரவி- வாசு விக்ரம், சந்தியா - ஜெயலலிதா, தேவிகா - கனகா, ருக்மணி - லட்சுமி எனப் பட்டியல் நீள்கிறது.

படங்கள் உதவி: ஞானம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024