விஜயபாஸ்கர் வழக்கில் வருமான வரி துறை பதில்
Added : டிச 19, 2019 22:37
சென்னை :'மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி உள்ளிட்ட, ஏழு பேரை, குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க கோரிய, அமைச்சர் விஜயபாஸ்கரின் மனு, சட்டப்படி பரிசீலிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், வருமான வரித் துறை பதில் அளித்துள்ளது.
தடை செய்யப்பட்ட, 'குட்கா' பதுக்கல் தொடர்பாக, பலரது வீடுகளில் சோதனை நடந்தது. அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அடிப்படையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ௨௦௧௭ல், வருமான வரித்துறை சோதனை நடத்தி, ஆவணங்களை சேகரித்தது.
இதையடுத்து, ௨௦௧௧ - ௧௨ முதல், அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை மறுமதிப்பீடு செய்யும் நடைமுறையை, வருமான வரித்துறை மேற்கொள்கிறது. இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு:
வருமான வரித் துறை மேற்கொள்ளும் விசாரணையில், ௧௨ பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில், ஐந்து பேரை குறுக்கு விசாரணை செய்ய, என் தரப்பை அனுமதித்தனர். சேகர் ரெட்டி, மாதவராவ் உள்ளிட்ட, ஏழு பேரை, குறுக்கு விசாரணை செய்ய, அனுமதிக்க வேண்டும்.
அனைத்து சாட்சிகளிடமும் குறுக்கு விசாரணை செய்யும் வரை, வருமான வரிக் கணக்கு மதிப்பீடு தொடர்பாக, எந்த உத்தரவையும் பிறப்பிக்க, வருமான வரித் துறைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வருமான வரித் துறை சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் சீனிவாஸ், ''வருமான வரித் துறையிடம், மனுதாரர் அளித்த மனு, சட்டப்படி பரிசீலிக்கப்படும்,'' என்றார். அதை எழுத்துப்பூர்வமாக அளிக்க, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இன்றைக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment