Sunday, December 22, 2019

2 ஆம்னி பஸ்கள் மோதல் ஒருவர் பலி: 22 பேர் படுகாயம்

Added : டிச 22, 2019 00:16

உளுந்துார்பேட்டை, உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே 2 ஆம்னி பஸ்கள் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பயணிகளுடன் ஏஆர் 11- 0100 எண்ணுள்ள சர்மா டிராவல்ஸ் என்ற ஆம்னி பஸ் கோயம்புத்துார் நோக்கி புறப்பட்டது. அதிகாலை 4:50 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியை கடந்து பஸ் நிலையம் வழியாக செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் பஸ் திரும்பியது.

அப்போது கேரளா மாநிலம் கொச்சினிலிருந்து சென்னை நோக்கி வந்த பிஒய் 01 டிஆர் 4093 எண்ணுள்ள ஆரஞ்சு டிராவல்ஸ் என்ற ஆம்னி பஸ் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் 2 பஸ்களிலும் இருந்த பயணிகள் 30 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் மற்றும் உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உளுந்துார்பேட்டை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில், சென்னையைச் சேர்ந்த சரஸ்வதி, 50; பத்மாவதி, 50; ரமேஷ், 42; குமார், 34; கேரளா மாநிலம் கொச்சினைச் சேர்ந்த மதுன், 35; எர்ணாகுளம் மோனிஷா, 23; தியாகதுருகம் குமார், 35; புதுச்சேரி சந்திரசேகர், 25; மகாலட்சுமி, 25; உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர்.

இதில் விக்கிரவாண்டி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த நபர் யார் என தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் போக்குவரத்து பாதிப்பைத் தவிர்க்க போலீசார், உளுந்துார்பேட்டை செல்லும் வாகனங்களை டோல்கேட் பகுதியில் இருந்து அஜீஸ் நகர் ரவுண்டானா வழியாக மாற்றி அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கிய 2 ஆம்னி பஸ்களையும் 2 கிரேன்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.

இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நடவடிக்கை தேவைஉளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வாகனங்கள் திரும்பும்போது அவ்வபோது விபத்துகள் நடந்து, உயிரிழிப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் உளுந்துார்பேட்டை டோல்கேட் சாலை சந்திப்பு பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் பேரிகாடுகள் மற்றும் ஒளிரும் பிரதிபலிப்பான் வைத்தார். விபத்துகளைத் தவிர்க்க சாலை சந்திப்பு பகுதி அருகே, ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்க வேண்டும் என டோல்கேட் நிர்வாகத்திடம் எஸ்.பி., ஜெயக்குமார் அறிவுறுத்தினார். ஆனால், டோல்கேட் நிர்வாகம் கண்டு கொள்ளாததால் விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது.மீட்பு வாகனம் இல்லைவிபத்தில் சிக்கிய இரு பஸ்களையும் மீட்க நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் டோல்கேட் நிர்வாகத்திடம் மீட்பு வாகனங்களை எடுத்து வருமாறு கூறினர். ஆனால் டோல்கேட் நிர்வாகத்தினர் மீட்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்காமல் தாமதப்படுத்தினர். இதனால் போலீசார் தனியாரிடமிருந்த மீட்பு வாகனத்தை வரவழைத்து காலை 7:30 மணியளவில் இரு பஸ்களையும் சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதில் காட்டும் அக்கறையை, மனித உயிர்களைக் காக்க இனியாவது டோல்கேட் நிர்வாகம் மீட்பு வாகனத்தையும், ஆம்புலன்ஸ் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்து மனித உயிர்களைக் காக்க முன் வரவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024