Sunday, December 22, 2019

இனி ரத்த சர்க்கரை அளவை தெரிந்துகொள்ள உடலில் ஊசியால் குத்த வேண்டியதில்லை மாற்று முறையை கண்டுபிடித்த சிக்ரி விஞ்ஞானி



காரைக்குடி

ரத்த சர்க்கரை அளவை எளிதாக அறிய மாற்று முறையை சிக்ரி விஞ்ஞானி தமிழரசன் பழனிசாமி கண்டறிந்துள்ளார்.

நீரிழிவு நோயாளிகள், தங்கள் சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இதற்கு தற்போதுள்ள தொழில்நுட்பத்தின்படி விரல் நுனியில் ஊசியால் குத்தி ரத்த மாதிரி எடுக்கப்படுகிறது. அல்லது ஊசி மூலம் குறிப்பிட்ட அளவு ரத்தம் எடுக்கப்பட்டு சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது.

இதற்கு மாற்றாக உடலுக்குள் பயோ சென்சார்கள் பொருத்தி ரத்த சர்க்கரை அளவை அறியலாம். ஆனால், பயோ சென்சார்களை இயக்க உடலில் இருந்து மின்னாற்றல் பெறுவதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில், காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன (சிக்ரி) ஆராய்ச்சியாளர் முனைவர் தமிழரசன் பழனிசாமி, சர்வதேச ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து மின்னாற்றல் பெறுவத ற்கான மின்வேதி டிரான்சிஸ்டர் சென்சார் தொழில்நுட்பத்தை கண் டறிந்துள்ளார்.

இதுகுறித்து தமிழரசன் பழனி சாமி கூறியதாவது:

மின்வேதி டிரான்சிஸ்டர் சென்சார் தொழில்நுட்பத்தில் ஒரு எதிர்மின்னணுவை கடத்தும் குறைக்கடத்தி பாலிமரையும் ஒரு குறிப்பிட்ட நொதியையும் பயன்படுத்தி உடலில் உள்ள குளுக்கோஸை அளவிட முடியும்.

அதே நேரம் பாலிமரும், நொதி யும் குளுக்கோஸை பயன்படுத்தி எரிமின் கலனில் மின்னாற்றலை உற்பத்தி செய்யலாம். இந்த மின்னாற்றல் மூலம் மின்வேதி டிரான்சிஸ்டர் சென்சாரை இயக்க முடியும். இந்த எரிமின் கலன் மூலம் உடலினுள் பொருத்தப்படும் வேறு மின்னணு சாதனங்களுக்கும் பயன்படுத்த முடியும்.

ரத்தத்தில் மட்டுமின்றி உமிழ் நீரில் உள்ள குளுக்கோஸ் அளவையும்கூட இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிய முடியும். உடலினுள் பொருத்தப்படக் கூடிய இத்தகைய சென்சார்கள் மூலம் உடலின் குளுக்கோஸ் அளவை தொடர்ச்சியாக கண்காணிக்க முடியும். இதன் மூலம் நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற குறைபாடுகளை முன்பே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சி மனிதகுலத்துக்கு வரப்பிரசாதமாக அமையும் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024