Tuesday, December 24, 2019

விமானத்தில் திடீர் பழுது காத்துக் கிடந்த பயணியர்

Added : டிச 24, 2019 00:23

சென்னை:மலேஷியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் மீண்டும், மலேஷியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. சென்னையில் இருந்து மலேஷியா செல்ல வேண்டிய பயணியர், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

மலேஷியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 'மலேஷியன் ஏர்லைன்ஸ்' விமானம், வழக்கமாக காலை, 10:45 மணிக்கு, சென்னை வந்து, மீண்டும் காலை, 11:45க்கு, கோலாலம்பூர் புறப்பட்டுச் செல்லும்.இந்த விமானம், 219 பயணியருடன் நேற்று காலை, 9:30 மணிக்கு, சென்னை வந்த போது, விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமான நிலைய கட்டுப்பாட்டு அறையான, ஏ.டி.சி., உத்தரவுப்படி, அந்த விமானம், பாதிவழியிலேயே மீண்டும், கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.எனவே, 'அந்த விமானம், மீண்டும் சென்னைக்கு மாலை, 4:20க்கு வந்துவிட்டு, கோலாலம்பூருக்கு மாலை, 5:20 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்' என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலேஷியா விமானம் தாமதமானதால், சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்ல வேண்டிய, 186 பயணியர், ஆறு மணி நேரத்திற்கும் மேல், சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024