Friday, December 27, 2019

ரூ.20க்கு ரேஷன் கார்டு : ஜன., 6 முதல் கிடைக்கும்

Added : டிச 26, 2019 21:56

நீண்ட இழுபறிக்கு பின், 'டூப்ளிகேட்' எனப்படும், மாற்று ரேஷன் கார்டுகளை, பயனாளிகளுக்கு வழங்கும் பணியை, ஜனவரி, 6ம் தேதி முதல் துவக்க, உணவுத்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், ரேஷன் கார்டு பெற, உணவு வழங்கல் துறையின், பொது வினியோக திட்ட இணையதளத்தில், 'ஆதார்' எண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதை அதிகாரிகள் பரிசீலித்து, ரேஷன் கார்டு வழங்க பரிந்துரைப்பர்.

ரேஷன் கார்டை தொலைத்தவர்களுக்கும், ஏற்கனவே உள்ள கார்டில் முகவரி மாற்றம், உறுப்பினர் சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்கள் செய்வோருக்கும், 20 ரூபாய் கட்டணத்தில், மாற்று கார்டு வழங்கும் பணியை, முதல்வர் இ.பி.எஸ்., செப்டம்பரில் துவக்கி வைத்தார். இதுவரை, மாற்று கார்டுகள் அலுவலகங்களில் வழங்குவதில்லை.

இதனால், பலரும் ஏமாற்றத்தில் உள்ளனர். தமிழகத்தில், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், இன்றும்; வரும், 30ம் தேதியும் நடக்கிறது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, புதிய ரேஷன் கார்டு வழங்க தடை உள்ளது. நீண்ட இழுபறிக்கு பின், சென்னையில், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகங்கள்; மற்ற மாவட்டங்களில், மாவட்ட வழங்கல் அலுவலகங்களில், ஜனவரி, 6ம் தேதி முதல், மாற்று கார்டுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கும், பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024