Friday, December 20, 2019

துணைவேந்தர்கள் மீது ஊழல் வழக்கு உயர் கல்வி மாநாட்டில் கவர்னர் வருத்தம்

 Added : டிச 19, 2019  22:35

ஊட்டி :''துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிலர் மீது, ஊழல் வழக்கு தொடரப்படுவது கவலையளிக்கிறது,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி கவர்னர் மாளிகையில், சென்னை ராஜ்பவன் மற்றும் திருச்சியில் உள்ள, இந்திய மேலாண்மை நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும், 'வேந்தரின் இலக்கு - 2030 தொழில் துறை சகாப்தம்; 4.0 புதுமையான கல்வி முறை' என்ற, உயர் கல்வி மாநாடு நேற்று துவங்கியது.கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது:

உலகளாவிய கல்வியில், இந்தியா ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு, 993 பல்கலைகளும், 39 ஆயிரத்து, 931 கல்லுாரிகளும் உள்ளன.

தமிழகத்தில், 59 பல்கலைகளில், ஆண்டுக்கு, 8.64 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், மாறிவரும் உலகுடன் பொருந்தும் தன்மை மற்றும் புதுமையை முறையாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த மாநாடு நடக்கிறது.

துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிலர் மீது, ஊழல் வழக்கு தொடரப்படுவது கவலையளிக்கிறது. துணை வேந்தர் மற்றும் பேராசிரியர்கள், தங்கள் நடத்தை மூலம், இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக செயல்பட வேண்டும்.

தமிழகத்தில், 12 ஆயிரத்து, 620 ஊராட்சிகளும், 2,466 கல்லுாரிகளும் உள்ளன. ஒவ்வொரு கல்லுாரியும், ஆண்டொன்றுக்கு, ஒவ்வொரு கிராமத்தை தத்தெடுத்தால், துந்து ஆண்டுகளுக்குள், நம் மாநிலத்திலுள்ள அனைத்து கிராமங்களும் மாற்றம் பெறும்.
இவ்வாறு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.

விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த, 20 துணைவேந்தர்கள் மற்றும் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

நீலகிரியின் சுற்றுசூழலை பாதுகாக்க, 'பிளாஸ்டிக், மெழுகு பூசிய கப்' உட்பட, 50 'மைக்ரான்' அளவுக்கு குறைவாக உள்ள, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிக்கப்பட்டுள்ளது.தடையை மீறியதாக, பொதுமக்களிடம் இருந்த, இதுவரை, 16 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று, ஊட்டி ராஜ்பவனில் நடந்த, உயர்கல்வி மாநாட்டில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசும் போது, ''தமிழக அரசு, பிளாஸ்டிக் தடை அறிவிக்கும் முன், ராஜ்பவனில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது,'' என்றார்.விழா முடிந்ததும், அனைவருக்கும், தடை செய்யப்பட்ட, மெழுகு கப்புபில், டீ வழங்கப்பட்டது.தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தும், வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் மாவட்ட நிர்வாகம், கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை என, சமூகஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024