வெளிநாட்டில் மருத்துவம் படித்த 84% இந்தியர்கள் தகுதி தேர்வில் 'பெயில்'
Updated : டிச 26, 2019 20:39 | Added : டிச 26, 2019 20:11
புதுடில்லி: வெளிநாட்டில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களில் 84 சதவீதம் பேர் இந்தியாவில் பயற்சி மேற்கொள்வதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிப்பிற்கான இடம் கிடைக்காமல் வெளிநாட்டிற்கு சென்று படிக்கின்றனர். அங்கு 5 முதல் 6 வருடங்கள் படித்து முடித்த பின்னர் இந்தியா வரும் அனைத்து மாணவர்களுக்கும் இந்தியாவில் மருத்துவம் பார்ப்பதற்கு தேசிய தேர்வு குழுமம் சார்பில் (என்.பி.இ.,) வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வை (எப்.எம்.ஜி.இ.,) நடத்துகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற முடியும்.
ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மற்றும் அமெரிக்காவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ பட்டம் பெறுபவர்களுக்கு மட்டும் மேற்கண்ட தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த பார்லி கூட்டத்தொடரின் போது இது குறித்த கேள்வி ஒன்றிற்கு மத்திய சுகாதார அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக வெளியிட்டுள்ள பதில்: கடந்த 2012 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவிற்கு பயிற்சி மேற்கொள்வதற்கான தேர்வில் 84 சதவீதத்தினர் தேர்ச்சி அடையவில்லை. அதாவது அந்த காலக்கட்டத்தில் 97,639 மாணவர்கள் எப்.எம்.ஜி.இ., தேர்வு எழுதினர். அதில் 16,097 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். இவ்வாறு சுகாதார அமைச்சகம் பதிலளித்துள்ளது.
No comments:
Post a Comment