Wednesday, December 18, 2019


உன்னாவ் உணர்த்தும் உண்மை!| உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த தலையங்கம்


By ஆசிரியர் | Published on : 18th December 2019 03:08 AM |


உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் 2017-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 18 வயது நிரம்பாத இளம் பெண், இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்காக எதிர்கொண்ட சவால்களும், பாதிப்புகளும் இதயத்தை உறைய வைக்கும்.

இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் ஏராளமான பாலியல் வன்கொடுமைகளால் மிரண்டு போய் இருக்கும் பெண்ணினத்திற்கு இந்தத் தீர்ப்பு சிறியதொரு நம்பிக்கையை அளிக்கக் கூடும்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினரான குல்தீப் சிங் செங்கர் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 17 வயதுப் பெண், நீதி கேட்டு நடத்திய நெடும்பயணம் கரடுமுரடானது, ஆபத்தானதும் கூட. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு கேட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றபோது அந்த காவல் நிலையத்தில் அவருக்கு 18 வயது நிரம்பவில்லை என்று காரணம் கூறி புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை.

மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பதிவுத் தபாலில் புகார் அனுப்பியும் பயனில்லை. மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல் துறையினர், முதல் தகவல் அறிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினரான குற்றவாளியின் பெயரைக்கூடக் குறிப்பிடவில்லை.

புகார் கொடுத்து ஓராண்டாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம் கேட்ட அந்தப் பெண்ணின் தந்தை, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த ஒருவர் கொல்லப்பட்டது குறித்துக்கூட முறையான விசாரணை நடத்தப்படவில்லை.

தனக்கு காவல் துறையினரிடம் நீதி கிடைக்காது என்று உணர்ந்த அந்தப் பெண், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெüவுக்குச் சென்று முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன்னால் தீக்குளிக்க முற்பட்டபோதுதான் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க வழி ஏற்பட்டது. வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. செங்கர் கைது செய்யப்பட்டார். அத்துடன் வழக்கை சிபிஐ கிடப்பில் போட்டது.

அந்தப் பெண்ணுக்கு ஒரே ஆதரவாக இருந்த மாமாவின் மீது காவல் துறை பொய் வழக்கை ஜோடித்து சிறையில் தள்ளியது.
ரேபரேலியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாமாவைச் சந்திக்க தனது இரண்டு சித்திமார்களுடனும் வழக்குரைஞருடனும் சென்று கொண்டிருந்தபோது அவர்களது காரில் ஒரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. சித்திகள் உயிரிழந்தனர். அந்தப் பெண்ணும் வழக்குரைஞரும் படுகாயமடைந்தனர். மீண்டும் ஊடக வெளிச்சம் பாய்ந்தபோதுதான் சிபிஐ விழித்துக் கொண்டது, நீதிமன்றம் விழித்துக் கொண்டது.

காரில் மோதிய லாரியின் எண்கள் அழிக்கப்பட்டது குறித்தும், விதிகளை மீறித் தவறான பாதையில் வந்து விபத்து ஏற்படுத்திய விதம் குறித்தும் கவலைப்படாமல் முதல் தகவல் அறிக்கையில் அதை வெறும் சாலை விபத்தாகத்தான் காவல் துறை பதிவு செய்தது. வாகனத்தின் உரிமையாளரின் பெயரும்கூட முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை.

தங்களுக்கு பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அந்தப் பெண்ணின் தாயார் எழுதிய கடிதம் அவரது பார்வைக்கே கொண்டு செல்லப்படவில்லை. வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட மனு போய்ச் சேரவில்லை. இத்தனை தடைகளையும் மீறித்தான் அந்தப் பெண்ணின் போராட்டம் தொடர்ந்தது. வழக்கு தில்லிக்கு மாற்றப்பட்டு இப்போது தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

சிறார் பாலியல் வழக்கில் விரைந்து நீதி வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட "போக்ஸோ' சட்டம், முறையாகச் செயல்படவில்லை என்பதற்கு இந்த வழக்கு மற்றுமோர் உதாரணம். சம்பவம் நடந்தபோது அந்தப் பெண் சிறுமியாக இருந்ததால் குல்தீப் சிங் செங்கர் மீது "போக்ஸோ' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தனது விசாரணையை முடித்திருந்தாலும் இந்த ஆண்டு அக்டோபர் வரை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தியது வியப்பளிக்கிறது என்று தில்லி மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மேஷ் சர்மா தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

"போக்ஸோ' சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணிடம், பெண் அதிகாரிகள்தான் விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கு மாறாக ஆண் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர் என்பதையும், பாதிக்கப்பட்ட பெண்ணை பலமுறை சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவழைத்து அலைக்கழித்ததையும், அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின் முக்கியப் பகுதிகளை கசியவிட்டதையும் கண்டித்திருக்கும் நீதிபதியின் நேர்மையைப் பாராட்ட வேண்டும்.

உன்னாவ் வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் இருந்தும்கூட, நீதிக்காக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் பெண்கள் இருப்பது மிகப் பெரிய தலைக்குனிவு. எல்லா மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்துவது அவசியமாகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் தடய அறிவியல் துறை அமைக்கப்பட வேண்டும். பெண்களின் அபயக் குரலுக்கு உடனடியாகச் செவிசாய்க்கவும், உதவிக்கு வரவும் பெண் காவல் துறையினர் தனிப் பிரிவாக இயங்குவதும் அவசியம்.

நாடு முழுவதும் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்திருக்கிறது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஆதரவும் பாதுகாப்பும் வழங்கும் அரசியல்வாதிகளின் அழுத்தங்களிலிருந்து காவல் துறை விடுபட்டாலொழிய, பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் தொடரும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024