Friday, March 31, 2017

இனி இ-சேவை மையங்களில் தான் குடும்ப அட்டை திருத்தப் பணிகள்

By DIN  |   Published on : 31st March 2017 01:37 AM  |   

ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை இ-சேவை மையங்களில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வடிவிலான குடும்ப அட்டைகள் சனிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் வழங்கப்பட உள்ளன. குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறுவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு, வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் குடிமைப் பொருள் வட்டாட்சியர் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகளை மேற்கொள்வதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும்.

புதிய விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் சமர்ப்பித்து இணையதளம் மூலமாக இப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கெனவே சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய்த் துறையின் சான்றிதழ்கள் பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பம் அளிப்பதைப் போல, குடும்ப அட்டை தொடர் சேவைகளும் இ.சேவை மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான தனி மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறையினர் கூறியது:
குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளம் மூலமாக பெறும் வசதி ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே இந்த சேவையைப் பெற முடியும். இதேபோல, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகள் அனைத்தும் இ-சேவை மையங்கள் மூலமாகவே மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அரசு கேபிள் தொலைக்காட்சி இ-சேவை மையம் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், புதுவாழ்வுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் இ.சேவை மையங்களில் இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

விண்ணப்பங்களில் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அல்லது குடிமைப்பொருள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு இணைய வழியில் அனுப்பி வைக்கப்படும். ஆவணங்களின் அடிப்படையில் இணைய வழியிலேயே வழங்கல் துறையினர் ஒப்புதல் வழங்குவர். விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது தொடர்பான தகவல் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு, குடும்ப உறுப்பினர் சேர்க்கப்பட்ட, நீக்கப்பட்ட அல்லது திருத்தஹம் செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட் கார்டை சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்தில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.

ஸ்மார்ட் கார்டு விநியோகம்: செல்லிடப்பேசிக்கு தகவல் வரும்
ஸ்மார்ட் கார்டு விநியோகம் தொடர்பாக குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:

குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் சனிக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளன. அதுகுறித்த விவரம் குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். குறுஞ்செய்தியில் உள்ள கடவுச் சொல், பழைய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, குறுஞ்செய்தி பெறப்பட்ட செல்லிடப்பேசி ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்குச் சென்று ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

இதுவரை செல்லிடப்பேசி எண் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக தங்களது நியாய விலைக் கடையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட் கார்டு குறித்து குறுஞ்செய்தி வராதவர்கள் அச்சம் அடையத் தேவையில்லை. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...