Monday, March 27, 2017

அதிகரிக்கும் ரயில் கட்டணங்களால் விமானப் பயணத்துக்கு மாறும் பயணிகள்!

By DIN  |   Published on : 27th March 2017 12:34 AM  

தில்லி-மும்பை, தில்லி-சென்னை என பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பிரீமியம் ரயில்களின் பயணக் கட்டணங்களை ஒப்பிடுகையில், விமான பயணக் கட்டணங்கள் குறைவாக இருப்பதால், பயணிகள் விமானப் பயணத்தையே தேர்வு செய்வதாக தெரியவந்துள்ளது.

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட பிரீமியம் ரயில்களில் அவ்வப்போது உயரக்கூடிய கட்டண நடைமுறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு 10 சதவீத இருக்கைகள் முன்பதிவுக்கும் 10 முதல் 50 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்கிறது.

இவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட போதிலும், பிரீமியம் ரயில்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக ரயில்வே வாரிய உறுப்பினர் ரவீந்திர குப்தா கூறியதாவது:
பிரீமியம் ரயில்களில் கழிப்பறைகள் சுத்தமாக இல்லை; அடிப்படை வசதிகள் இல்லை; படுக்கை விரிப்புகள் மோசமாக உள்ளன என்று குற்றம்சாட்டி, எங்களுக்கு ஏராளமான கடிதமங்கள் வந்துள்ளன. இதையடுத்து, பிரீமியம் ரயில்களை முறையாகப் பராமரிக்க வலியுறுத்தி, 16 ரயில்வே மண்டலங்களின் மேலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார் அவர்.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு இடையே 42 ராஜ்தானி ரயில்களும், 46 சதாப்தி ரயில்களும், 54 துரந்தோ ரயில்களும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பிரீமியம் ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நிகழாண்டு பிப்ரவரி மாதம் வரை ரயில்வேக்கு ரூ.250 கோடி வருமானம் கிடைத்துள்ளபோதிலும், பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

விமானக் கட்டணங்களை விட அதிகம்: தில்லி - மும்பை இடையிலான ராஜ்தானி ரயிலின் இரண்டடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் முன்பதிவுக் கட்டணமாக ரூ.3,615 வசூலிக்கப்படும் நிலையில், விமானப் பயணத்துக்கோ (ஏர் இந்தியா) அதைவிட குறைவாக ரூ.2,410 தான் ஆகிறது. இதேபோன்ற நிலைதான், தில்லி - சென்னை, ஹைதராபாத் - தில்லி, பெங்களூரு - தில்லி ஆகிய வழித்தடங்களிலும் உள்ளது.

இதனைப் பயன்படுத்தி, ரயில் பயணிகளை ஈர்க்கும் வகையில் கட்டணக் குறைப்பை பல்வேறு விமான நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024