தயிர்சாதம், சிங்கப்பூர் காஸ்ட்யூம், மோடி மந்திரம்! - டி.டி.வி.தினகரனின் ஆர்.கே.நகர் ஃபார்முலா
ஆர்.கே.நகரில் போட்டியிடும் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் குறித்த தகவல்கள் சுவரஸ்யமானவை. தயிர்சாதம், சிங்கப்பூர் காஸ்ட்யூம், மோடி மந்திரம் என தினகரனின் மேனரிஸத்தில் மாற்றங்கள் தெரிவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கின்றனர்.
சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தயிர்சாதத்துக்கு ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தார், அந்த வி.வி.ஐ.பி. அவருக்கு நெருக்கமானவர்களும் அவருடன் அமர்ந்திருந்தனர். தயிர்சாதம் டேபிளுக்கு வந்ததும் அதை ருசித்துச் சாப்பிட்டார் அந்த வி.வி.ஐ.பி. பில்தொகையைச் செலுத்திவிட்டு வெளியே வந்த வி.வி.ஐ.பி-க்கு, சொகுசு கார் தயாராகக் காத்திருந்தது. அதில் ஏறிப் பறந்தார், அவர். அந்த வி.வி.ஐ.பி, வேறுயாருமில்லை.ஆர்.கே.நகர்த் தேர்தலில் சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன்தான். கோடைவெயிலுக்கு முன்புகூட, டி.டி.வி.தினகரனுக்குத் தயிர்சாதம்தான் அவரது ஃபேவரைட் உணவுகளில் ஒன்று என்று சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். மேலும் அவர்கள் கூறுகையில், "தேர்தல் பிரசாரத்தில் படு பிஸியாக டி.டி.வி.தினகரன் இருந்தாலும் தன்னுடைய அன்றாட நடவடிக்கைகளை அவர் மாற்றவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன், கட்சி அலுவலகத்திலும் போயஸ் கார்டனிலும் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துவதை வழக்கமாகவைத்துள்ளார். அவரைச் சந்திப்பவர்களை டி.டி.வி.தினகரன் நடத்தும்விதமே வேறுவிதம். எம்.ஜி.ஆர். ஸ்டைலில், சிரித்த முகத்துடன் 'வாங்க... வாங்க... சாப்பிட்டீங்களா' என்றுதான் முதலில் கேட்பார். அதன்பிறகுதான், வந்த விஷயம் பற்றிய பேச்சு.
வருபவர்களை எழுந்துநின்று வரவேற்பது, டி.டி.வி.தினகரனின் தனி ஸ்டைல். மேலும், அவரைச் சந்திக்க வருபவர்களிடமும் நின்றுகொண்டுதான் பேசுகிறார். இதற்காக அவரது இருக்கைக்கு எதிரில் எந்த இருக்கையும் போடப்படுவதில்லை. முக்கியமான வி.வி.ஐ.பி-க்களைச் சந்திக்க, அவரது அலுவலகத்தில் தனிஅறை உள்ளது. அங்குமட்டும் ஷோபா போடப்பட்டிருக்கும். யாரிடமும் ஃபாஸிட்டிவ்வாகவே பேசுவார். தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தின்போதுகூட 'நாமதான் ஜெயிக்கப்போகிறோம்' என்று அடிக்கடி சொல்வார்.
டி.டி.வி.தினகரன், 'அம்மா அரசியல் வழிவந்த மாணவன்' என்ற வார்த்தையை அவர் அடிக்கடி உச்சரிக்கும் சொல். இல்லை மந்திரம்.
அவரது காஸ்ட்யூம் சமீபகாலமாக மாறியிருக்கிறது. மேக்கப்புக்காக தனியாக அழகுக்கலை நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிங்கப்பூர் ஸ்டைல் காஸ்ட்யூமைப் பயன்படுத்துவார். அவர் அணிந்திருக்கும் உடைகளில் சில, பிரதமர் மோடியைப் பின்பற்றுவதைப் போலவே இருக்கும். தேர்தல் வியூகங்கள் ஜெயலலிதாவைப் போலவே அமைத்து அசத்துகிறார் டி.டி.வி.தினகரன்" என்றனர்.
டி.டி.வி.தினகரனைச் சந்திக்க வருபவர்களுக்கு இருக்கைகள் ஏன் போடப்படுவதில்லை என்று அவரது அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவரிடம் கேட்டபோது, அவர் சொன்ன தகவல் நம்மை ஆச்சர்யப்படுத்தியது.
"சாருக்கு நேரத்தை வீணாக்குவது பிடிக்காது. மேலும், தேவையில்லாமல் பேசுவதையும் அவர் விரும்ப மாட்டார். முகஸ்துதி பாடுபவர்களுடன் எச்சரிக்கையாகவே இருப்பார். சந்திக்க வருபவர்களிடம் உட்காந்து பேசினால் நேரம் அதிகமாகும். இதற்காகத்தான் அவரும் எழுந்துநின்றே பேசுவார். மிகவும் முக்கியமானவர்கள் என்றால் மட்டுமே உட்காந்து பேசுவார்" என்றார்.
- எஸ்.மகேஷ்
No comments:
Post a Comment