Tuesday, March 28, 2017

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அடிமட்டத்திற்கு போய்விட்டதால், கோடைமழை வராவிட்டால் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாது என்று அதிகாரிகள் வருத்தத்துடன் கூறினார்கள். 
 
சென்னை,
பருவமழை பொய்த்துப்போனதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் எதிர்பார்த்த அளவு தண்ணீர் மட்டம் உயரவில்லை. இருக்கும் தண்ணீரை முடிந்த அளவு மோட்டார் பம்புகள் மூலம் இரைத்து குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. 
 குடிநீர் தேவையை சமாளிப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–

நெய்வேலி சுரங்கத் தண்ணீர் 
 சென்னை மாநகரில் நாளொன்றுக்கு தற்போது 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான குடிநீர் குறிப்பிட்ட அளவு பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து பெறப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இதுதவிர குன்றத்தூர் அருகில் உள்ள சித்தராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து தினசரி 30 மில்லியன் லிட்டர், போரூர் ஏரியில் இருந்து தினசரி 4 மில்லியன் லிட்டர், நெய்வேலி சுரங்கத்தில் இருந்து 45 முதல் 60 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.

இதுதவிர திருவள்ளூரில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து 70 மில்லியன் லிட்டரும், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களான நெம்மேலியில் இருந்து 100 மில்லியன் லிட்டரும், மீஞ்சூரில் இருந்து 100 மில்லியன் லிட்டரும் குடிநீர் பெறப்படுகிறது.

வீராணம் குழாய் மூலம்... 
 நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வினாடிக்கு 100 முதல் 380 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இவை வாலாஜா ஏரியில் இருந்து பரவனாற்றுக்கு திருப்பிவிடப்படுகிறது. அங்கிருந்து கரைமேடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய தொட்டியில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, ராட்சத மோட்டார்கள் மூலம் அவை வீராணம் குடிநீர் திட்ட குழாயுடன் இணைத்து வடக்குத்து நீரேற்று நிலையத்திற்கு கொண்டுசென்று சுத்திகரிக்கப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து சென்னை போரூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின் நீர் சேமிப்பு நிலையத்துக்கு கொண்டுவரப்படுகிறது. சோதனை ஓட்டமாக நடந்த இந்தப்பணி தற்போது முழுவீச்சில் நடந்துவருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கிருஷ்ணா நீர் நிறுத்தம் 
 கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநில அரசு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். ஆனால் பருவமழை பொய்த்துப்போனதால் 68 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் தற்போது 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இங்கு குறைந்தபட்சம் 8 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் தான் தண்ணீர் திறந்துவிட முடியும். இதனால் கிருஷ்ணா நீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு, பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து தற்போது முற்றிலுமாக நின்றுவிட்டது.
இதுவரை ஆந்திர மாநில அரசு 2.2 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கி உள்ளது. போதிய கோடை மழை பெய்தால், எஞ்சிய தண்ணீரை திறந்துவிடுவதாக ஆந்திர அரசு தெரிவித்து உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் அடிமட்டத்திற்கு போய்விட்டது. குறைந்த அளவு இருக்கும் தண்ணீரும் வெயில் காரணமாக ஆவியாகிவருகிறது. கோடைமழை போதிய அளவு பெய்யவில்லையென்றால் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாது என்பதை வருத்தத்துடன் தான் கூறவேண்டியுள்ளது.  இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...