Friday, March 31, 2017

 பெருந்துறை மருத்துவ கல்லூரி அரசு ஏற்று நடத்த வலியுறுத்தல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்படும் மருத்துவக் கல்லுாரியை, அரசு ஏற்று நடத்துவதற்கான கருத்துருவுக்கு, போக்குவரத்து கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், பெருந்துறையில் மருத்துவக் கல்லுாரி நடத்தப்படுகிறது.

இக்கல்லுாரிக்கு, போக்குவரத்துக் கழகம் மூலமே நிதி ஒதுக்கப்படுகிறது.போக்குவரத்துக் கழகம் நிதி நெருக்கடியில் தவிப்பதால், நிறுவனத்தை திறம்பட நடத்துவது, அடிப் படை வசதிகள், மேம்பாட்டு பணிகள், விரிவாக்கம், மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அதற்கான வசதிகளை உருவாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. கல்லுாரி துவங்கியபோது, 60 மாணவ, மாணவியர் படிக்க அனுமதி வழங்கப்பட்டது. மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை, 60ல் இருந்து, 100 ஆக உயர்த்த வேண்டும் என்றும், முதுகலைக் கல்வி கொண்டு வரவேண்டும் எனவும் கோரப்பட்டது. ஆனால், கல்லுாரி துவங்கி, 24 ஆண்டுகள் ஆகியும் இதுவரை, 100 ஆக மாணவர் சேர்க்கை உயரவில்லை;

முதுகலை படிப்பும் துவங்கவில்லை.இக்கல்லுாரியில், போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, 30லிருந்து, 35 சதவீதம் வரை இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. கட்டணமும், அரசு மருத்துவக் கல்லுாரியை விட, சற்று கூடுதலாகவே வசூலிக்கப்படுகிறது. மற்ற மாணவர்களுக்கு, தனியார் கல்லுாரிகளில் வசூலிப்பது போலவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், 'கல்லுாரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என, பெருந்துறை மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் சார்பில், கலெக்டர் மூலம், அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறு கையில், ''கல்லுாரி முதல்வரின் அறிக்கைப்படி, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. கல்லுாரியை அரசே ஏற்று நடத்தலாம் என, போக்குவரத்துக் கழக நிர்வாகமும் ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த முடிவை அரசு அறிவிக்கும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024