Thursday, March 30, 2017

 கொள்கையை மாற்றுமா வாட்ஸ் ஆப்

சமீபத்தில், பிரிட்டனின் லண்டன் நகரில், காலித் மசூத் என்ற, 50 வயது பிரிட்டிஷ்காரர் நடத்திய தாக்குதலில், நான்கு பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணையில், தாக்குதலை நடத்துவதற்கு முன், 'வாட்ஸ் ஆப்' சமூகதளம் மூலம், காலித் மசூத் சிலருக்கு செய்தி அனுப்பியது தெரியவந்துள்ளது. இது, அனைத்து மக்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், வாட்ஸ் ஆப் சேவை கிடைப்பது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

வாட்ஸ் ஆப் என்பது, மிகவும் பாதுகாப்பாக, ஒருவருக்கு, மற்றொருவர் செய்தி அனுப்பும் முறை. இந்த சமூகதளத்தை பயன்படுத்தி அனுப்பப்படும் செய்தியை, மற்றவர் யாரும் பார்க்க முடியாது; விசாரணை அமைப்புகள் உட்பட, அந்த அளவுக்கு ரகசியம் காக்கும், 'என்கிரிப்ட்' எனப்படும் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சம் உள்ளது. இது நல்ல வசதி என்றாலும், மிக பெரிய பிரச்னையாகவும் உள்ளது. குறிப்பாக, பிரிட்டன் போலீஸ் இதை வெளிப்படுத்திய பின், உலகெங்கும் உள்ள, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு அமைப்புகள் இடையே, இது மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த பிரச்னை குறித்து, வாட்ஸ் ஆப் சமூகதளத்தின் உரிமையாளர்களான, 'பேஸ்புக்' சிந்திக்க வேண்டும். தங்களுக்கு வரும் செய்தியை, வேறு யாரும் பார்க்க முடியாது என்பது, பயனாளிகளுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். பொது மக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வரை, உண்மையான நபர்களால் பயன்படுத்தப்படும் வரை, இந்த வசதி பிரச்னை இல்லை.ஆனால், இந்த வசதி, பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமையும்போது தான், சிக்கலே ஏற்படுகிறது.

இது போன்ற வசதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்போது, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அமைப்புகள், மவுனமாக வாய் மூடி இருக்க முடியாது. பாதுகாப்பான, இது போன்ற செய்திகளை, தேவைப்படும் போது, போலீஸ் போன்ற அமைப்புகள் பார்ப்பதற்கும், அதை கொண்டு விசாரிக்கவும் எப்படி உதவ வேண்டும் என்பதை, பேஸ்புக் நிறுவனம் யோசிக்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. பயனாளிகளின் சுதந்திரம் பாதிக்காத வகையில், அவர்களது ரகசியங்கள் வெளிப்படாத வகையில், இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நம் நாட்டில், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு சர்ச்சையுடன் இந்த சம்பவத்தையும் ஒப்பிடலாம். சில ஆண்டுகளுக்கு முன், பிளாக்பெர்ரி மொபைலில் வரும் செய்திகளை பார்ப்பதற்கு, இந்திய அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முதலில் மிகவும் பிடிவாதமாக இருந்த, பிளாக்பெர்ரி நிறுவனம், பின், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

அமெரிக்காவில், ஆப்பிள் நிறுவனத்துக்கும், அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ.,க்கும் இடையே மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ஒரு தம்பதியின், ஆப்பிள் போனில் உள்ள தகவல்களை தெரிவிக்கும்படி, கோர்ட்டுக்கு போனது, எப்.பி.ஐ.அரசுக்கு உதவும்படி கோர்ட்டும் உத்தரவிட்டது. ஆனால், மொபைல் போனில் உள்ள, 'பாஸ்வேர்ட்' எனப்படும், ரகசிய குறியீட்டை கண்டுபிடிக்கும் வசதி இல்லை என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது. தொடர்ந்து பல்வேறு பயங்கரவாத பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதால், இவை, நம்முடைய நாட்டுக்கும் பொருந்தும். பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளை அவர்கள் ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.இது போன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையிலும், தீர்வு காணும் வகையிலும், பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் என, எதிர்பார்க்கிறேன்.

ஆர்.கே.ராகவன், சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024