பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பதவியை இரண்டு அதிகாரிகள் பார்த்து வருவதால், குழப்பம் நிலவுகிறது.பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் செல்வராஜன். இவர், 2016 நவ., 2ல் கடலுார் மாவட்டத்திலிருந்து, பதவி உயர்வில் இங்கு வந்தார்.இவரை, பிப்., 17ல் சென்னைக்கு மாற்றம் செய்தனர். இதை எதிர்த்து, செல்வராஜன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, மாற்றல் உத்தரவுக்கு தடை பெற்றார். இதன்பின், 14ம் தேதி செல்வராஜன் மீண்டும் பணிக்கு திரும்பினார்.
ஆனால், இவருக்கு பணியிடம் வழங்கப்படவில்லை.தினமும் காலை அலுவலகத்துக்கு வரும் இவர், மாலை வரை, 'சும்மா' இருந்துவிட்டு வீட்டுக்கு திரும்புகிறார். இணை இயக்குனர் இருக்கையில் அமரும் இவர், அந்த பணிகளை பார்ப்பதில்லை. காரணம், கண்காணிப்பாளர் சசிகலாவே, இணை இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.ஒரே பதவியில், இரு அதிகாரிகள் இருப்பதால், கீழ்மட்ட ஊழியர்கள், கோப்புகளில் யாரிடம் கையெழுத்து பெறுவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.செல்வராஜன் கூறியதாவது:இங்கு வந்த, இரண்டரை மாசத்துக்குள் என்னை மாற்றினர். அதனால், கோர்ட்டில், 'ரிட்' போட்டு, தடை வாங்கினேன். இயக்குனர் உத்தரவுப்படி, கண்காணிப்பாளர் சசிகலா, இணை இயக்குனர் பொறுப்பு வகிக்கிறார்.நான் தினமும் அலுவலகம் வருவேன்; மற்ற வேலைகளை பார்ப்பேன். ஆபீஸ் சம்பந்தப்பட்ட வேலைகளை கொடுக்க மாட்டேன் என்கின்றனர். என் விஷயத்தில், 'டிரான்ஸ்பர் ஆர்டர்' போட்ட இயக்குனர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment